இலங்கைப் படையினர் அபகரித்த

காணிகளை மீள ஒப்படைக்குமாறு முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டம்- பகிரங்கக் கோரிக்கை

முகாம் முன்பாகவுள்ள கடையை மூடுமாறு இலங்கைப் பொலிஸார் உத்தரவு
பதிப்பு: 2018 ஜூலை 31 15:27
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 22:01
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
முல்லைத்தீவு கோப்பாப்புலவு பிரதேசத்தில் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட தமது பாரம்பரியக் காணிகளை கைளிக்குமாறு கடந்த ஐநூற்றிப் 18 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐநூறு நாட்களையும் தண்டி வீதியில் இருந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், உடனடியாகத் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை, கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்பு போராட்டம், இன்று ஐநூற்றிப் 18 ஆவது நாளாக கோப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள இலங்கை இராணுவ முகாமிற்கு முன்பாக தொடர்ந்து நடைபெறுகின்றது.
 
மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் புதிதாகப் பதவியேற்ற மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் காதர் மஸ்தானிடம் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களினால், இலங்கை இராணுவம் அபகரித்து வைத்துள்ள காணிகளில் சில பகுதிகளை பொதுமக்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால், வாக்குறுதிகள் வழங்குவதை விட செயலில் காண்பிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் அங்கஜன் இராமநாதனிடம் கூறியுள்ளனர்.

வன்னி பெருநிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமாக இடம்பெற்றுவருவதை தடுக்கும் நோக்கில் வடமாகாண சபை உறுப்பினர்கள் குழு ஒன்றை அமைத்து கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோப்பாப்புலவு மக்களின் போராட்டமும் தீவிரமடைந்து வருகின்றது.

இதேவேளை, கோப்பாப்புலவு பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்று நடத்திவந்த சிறிய பெட்டிக்கடையை மூடுமாறு முள்ளியவளையில் உள்ள இலங்கைப் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

குறித்த கடை இலங்கை இராணுவ முகாம் ஒன்றுக்கு முன்பாக உள்ளதாகவும், இதனால் முகாமின் பாதுகாப்புக்கருதி கடையை மூடுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கைப் பொலிஸார் கூறியுள்ளனர்.

பிரதேசத்தில் உள்ள தமது காணிகளையும் அதில் உள்ள வளங்களையும் இலங்கைப் படையினர் அபகரித்துள்ள நிலையில், தமது வருமானத்திற்காக நடத்தி வந்த சிறிய எண்ணைக் கடையையும் மூடுமாறு இலங்கைப் பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட கடை உரிமை உரிமையாளர் கவலை வெளியிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களிடமும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் இலங்கை இராணுவத்தினர் தகவல்களைத் திரட்டி வருவதாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.

அதேவேளை, 80 ஆயிரம் ஹெக்ரேயர் காணிகளை இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன், இலங்கை அரச திணைக்களங்கள் அபகரித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கடந்த மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.