தமிழர் தாயகம்

முல்லைத்தீவுக் கடலில் சட்டவிரோத மீன்பிடிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி- மீனவர்கள் குற்றச்சாட்டு

கொழும்பில் நாளை சந்திப்புக்கு ஏற்பாடு, ஆனால் நம்பிக்கையில்லையெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2018 செப். 17 15:07
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 18 22:41
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்ட கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்கு தடை செய்யப்பட்ட சுருக்குவலையைத் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கறுப்புத் துணிகளினால் தமது வாய்களைக் கட்டி முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினர். இன்று திங்கட்கிழமை காலை போராட்டம் ஆரம்பமானது. சட்டவிரோத மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா கடந்த மாதம் முல்லைத்தீவுக்கு நேரில்ச் சென்று மீனவர்களிடம் உறுதியளித்திருந்தார்.
 
ஆனால் சிங்கள மீனவர்கள் என்பதால் இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமைச்சர் விஜயமுனி செய்சா. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரையும், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குறை கூறினர். தம்மை ஏமாற்றியுள்ளதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.

அமைச்சரின் உறுதிமொழி பொய்யா? எம்மை ஏமாற்றி விட்டார், இலஞ்சம் வாங்கி எம்மை அழிக்காதே, சட்டவிரோத மீன்பிடித் தொழிலை முற்றாகத் தடை செய் என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகளை மீனவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரி ஒருவரைச் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா ஆகியோருக்கான மகஜர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் கையளித்தனர்.

நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா ஆகியோரை சந்திக்க ஏற்பாடுகளை செய்து தருவதாக சாந்தி சிறிஸ்கந்தராஜா இதன்போது உறுதியளித்தார்.

ஆனாலும் அந்தச் சந்திப்பில் நம்பிக்கையில்லையென மீனவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 2ஆம் திகதி மீனவர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

ஆனால், இலங்கை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

தென்பகுதியில் இருந்து வந்து கொட்டில்கள் அமைத்திருந்த சிங்கள மீனவர்களும் இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் வெளியேறியிருந்தனர்.

இந்த நிலையில், சட்ட விரோத மீ;ன்டிபிடிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியான செய்திகளையடுத்து முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் ஓகஸ்ட் 13 ஆம் திகதி இரவு 11.30க்கு தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரம், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன.

தென்பகுதி சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவுக் கடலில் அனுமதியின்றியும் சட்டவிரோதமாகவும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்வாறு எரிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் ஏனைய கடற் பகுதிகளிலும் பலாத்காரமாகத் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் இதுவரை வெளியேறவில்லை என பிரதேச மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

சட்டத்திற்கு முரணாக இலங்கை மற்றும் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடிப்பாதாகக் குற்றம் சுமத்தியே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கான ஜிஎஸ்எபி வரிச்சலுகையை ரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.