2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரன சூழலில் ஊடக சுதந்திரம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் விபரங்களை படையினர் கோரலாமா?

யாழ் நீதிமன்றத்தில் விவாதம்-
பதிப்பு: 2019 மார்ச் 28 22:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 29 10:33
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
குற்றம் ஒன்றும் இழைக்கப்படாத நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் பிரிவு 124 பிரகாரம் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை எழுதியவரின் பெயர் விபரங்களை எவ்வாறு கோர முடியுமென சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுரை வெளியான பத்திரிகையின் அலுவலகம் கொழும்பில் செயற்படுகின்றது. ஆனால் அந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரையை எழுதியவரின் பெயர் விபரங்களைக் கோருவதற்கான கட்டளையை இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ் பிரதான நீமன்றத்தில் பெற்றதன் நோக்கம் என்னவென்றும் அவர் வினா எழுப்பினார்.
 
குறித்த கட்டுரையினால் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் அல்லது பாதிப்புகள் ஏதும் நிகழ்ந்ததா எனவும் காண்டீபன் கேள்வி தொடுத்தார்.

போர் உக்கிரமாக நடைபெற்ற 2000 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு சீல் வைக்க முடியாதென இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் எவ்வாறு பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையை எழுதியவரின் பெயர் விபரங்களைக் கோர முடியும்?

அப்படி ஏதுவும் குற்றச் செயல்கள், பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் மாத்திரமே யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையை குற்றப் புலனாய்வுப் பிரிவு பெற்றிருக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சட்டத்தரணி காண்டீபன் கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டிய விடயங்களுக்குப் பதிலளிக்குமாறு நீதவான் பீற்றர் போல், இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரியிடம் கூறினார். ஆனால் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. மௌனமே காக்கப்பட்டதாக சட்டத்தரணி காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்த் தந்தி, வார இதழில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் தளபதி அமரர் பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பாக 27-05-2018 அன்று அந்நியன் என்ற புனை பெயரில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

அந்தக் கட்டுரையை எழுதியவரின் உண்மையான பெயர் விபரங்களை பெறுவதற்காக இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, யாழ் பிரதான நீமன்றத்தின் கட்டளை ஒன்றைப் பெற்று, கொழும்பில் உள்ள குறித்த பத்திரிகை ஆசிரியரிடம் கேட்டிருந்தது. ஆனால் ஆசிரியர், கட்டுரை எழுதியவரின் பெயர் விபரங்களை வழங்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ் பிரதான நீமன்றத்தில் பி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாணை கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியான விசாரணை இன்று 28 ஆம் திகதி வியாழக்கிழமையும் நடைபெற்றது.

இதன்போதே காண்டீபன் இவ்வாறு கேள்வி எழுப்பி நியாயம் கோரினார். 1973 ஆம் ஆண்டு பத்திரிகைப் பேரவைச் சட்டத்தின் கீழ், 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் விசேட வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், கட்டுரை எழுதியவரின் பெயர் விபரங்கள், இரகசியம், தகவல்களைப் பாதுகாத்தல் போன்ற உரிமைகள் தொடர்பாகவும் காண்டீபன் சுட்டிக்காட்டினார்.

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்க விதிகளையும் எடுத்துக் கூறினார்.

அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிாிவு 14 இன் பிரகாரம் குற்றம் ஒன்றை இழைத்திருந்தால் மாத்திரமே பி அறிக்கையை தாக்கல் செய்திருக்க முடியுமென சட்டத்தரணி காண்டீபன் மன்றில் சுட்டிக்காட்டினார்.

ஆனால் குறித்த கட்டுரை பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய வரலாறுகளையும் போராட்ட முறைகளையும் மாத்திரம் கூறுகின்றது. போராட்ட வரலாறுகளை எழுதுவது இயல்பானது- அப்படி எழுதப்படும் வரலாறுகள் சமூகத்தில் குற்றங்களை இழைத்துவிடாது எனவும் காண்டீபன் மன்றில் எடுத்து விளக்கினார்.

ஆகவே குறித்த கட்டுரையினால் அவ்வாறு குற்றம் ஒன்று இழைக்கப்படாத நிலையில் எந்த அடிப்படையில் யாருடைய தூண்டுதலில் அல்லது யாருடைய பின்னணியில், கொழும்பில் அலுவலம் இருக்கும் போது கொழும்பு நீதிமன்றத்தில் பி அறிக்கையை தாக்கல் செய்யாமல், யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யததன் நோக்கம் என்னவென்று இலங்கைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பார்த்துக் கேட்டார் காண்டீபன்.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிாிவு 14 இன் பிரகாரமும் குற்றவியல் சட்டக் கோவை 124 பிாிவின் படியும் பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்ட செய்தி அல்லது கட்டுரையின் விபரங்களையோ அல்லது எழுதியவரின் பெயர் விபரங்களையோ கோர முடியாதென ஊடக அமைப்புகள் கூறியுள்ளன.

ஆனால் இந்த விதிகளின் பிரகாரமே இலங்கைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த பத்திரிகை ஆசிரியருக்கு எதிரான பி அறிக்கையை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிாிவு 14 இன் பிரகாரமும் அவசரகாலச் சட்டத்தின் கீழான செய்தித் தணிக்கைக்குழுவும் (competent authority) தற்போது இல்லை. அவ்வாறு செய்தித் தணிக்கைக்குழு ஒன்று இருந்தால் மாத்திரமே அந்தக் குழுவிடம் அனுமதி பெற்று குறித்த கட்டுரைகள் செய்திகளை பிரசுரிக்க முடியும்.

ஆகவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிாிவு 14 இன் பிரகாரமும் அவசரகாலச் சட்டம் இல்லாத சூழலிலும் செய்தித் தணிக்கைக்குழு ஒன்று இயங்காத நிலையிலும் பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய கட்டுரை எழுதியவரின் பெயரைக் கோர முடியாதென ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிாிவு 14 இன் பிரகாரமும் அவசரகாலச் சட்டம் இல்லாத சூழலிலும் செய்தித் தணிக்கைக்குழு ஒன்று இயங்காத நிலையிலும் பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய கட்டுரை எழுதியவரின் பெயரைக் கோர முடியாது.

இதேவேளை. ஊடக சுதந்திரம். ஊடக ஜனநாயகத்துக்கான அச்சறுத்தலாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் இந்தச் செயற்பாடு அமைந்துள்ளதாக தமிழ் ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

22.05.2000 ஆம் ஆண்டு அன்று கொழும்பில் இருந்து வெளிவந்த சண்டே லீடர் என்ற ஆங்கில வார இதழ், அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசாங்கத்தில் சீல் வைக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிாிவு 14 இன் பிரகாரம் செய்தித் தணிக்கைக்குழு (competent authority) குறித்த பத்திரிகைக்கு சீல் வைத்தது. அப்போதைய அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க அதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிாிவு 14 இன் பிரகாரம் அவசரகாலச் சட்டத்தின் (Emergency Regulations) படி குறித்த பத்திரிகை நிறுவனத்துக்கு சீல் வைக்க செய்தித் தணிக்கைக் குழுவுக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்கவுக்கும் அதிகாரமில்லையென மூவர் அடங்கிய இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு தீர்ப்பு வழங்கியிருந்தது.

பிரிவு 14 இன் பிரகாரம் பிரிவு ஐந்து பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் குறித்த பத்திரிகை நிறுவனத்துக்குச் சீல் வைத்ததாக ஆரிய ரூபசிங்க உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்திருந்தார். ஆனால் அதனை மூவரடங்கிய நீதியரசர்கள் நிராகரித்திருந்தனர்.

சீல் வைக்கப்பட்டமைக்கு எதிராக சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் அமரர் லசந்த விக்கிரமதுங்க இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழு 30-06-2000 அன்று தீர்ப்பை வழங்கிய பின்னர் பத்திரிகைக் காரியாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.

கலாநிதி ஏ.ஆர்.பி.அமரசேகர, ஆர்.என்.எம்.டெஹாரெட்னே, அமீர் அலி ஆகியோர் மூவர் அடங்கிய நீதியரசர்களே சீல் வைக்கப்பட்ட பத்திரிகைக் காரியாலயத்தை மீண்டும் திறக்குமாறு ஆரிய ரூபசிங்கவுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

ஆகவே போர் உக்கிரமாக நடைபெற்ற 2000 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு சீல் வைக்க முடியாதென இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் எவ்வாறு பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையை எழுதியவரின் பெயர் விபரங்களைக் கோர முடியுமென ஊடக அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

யாழ் பலாலி இராணுவ முகம் தாக்கப்படவில்லை (Palaly not under attack) என்ற தலைப்பில் லசந்த விக்கிரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையில் செய்திக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அன்று செய்தித் தணிக்கை அமூலில் இருந்தமையினால் பலாலி தாக்கப்படவில்லையென (Palaly not under attack) மறைமுகமாகத் தலைப்பிட்டு பாலி இராணுவ முகமில் ஏற்பட்டிருந்த சேதங்கள், இழப்புகள் குறித்து லசந்த விக்கிரமதுங்க விபரமாக எழுதியிருந்தார்.

இதனாலேயே அன்று சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக அன்று அனைத்து ஊடக அமைப்புகளும் எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.