இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச - அறிவிப்புக்கு முன்னர் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்கச் செயலாளர்

முல்லைத்தீவு - திருகோணமலை கடற்பகுதியை மையப்படுத்திய அமெரிக்க நகர்வுக்கு ஆசீர்வாதம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 11 22:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 12 22:55
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#GotabayaRajapaksa
#SLPP
#PresPollSL
#MahindaRajapaksa
#srilanka
#lka
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவாரென கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியாவிற்கான பதில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ், கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து இரண்டு மணிநேரம் உரையாடினர்.
 
கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவாரெனவும் பின்னணியில் அமெரிக்கா ஆதரவு என்றும் கூர்மைச் செய்தித் தளம் கடந்த ஆண்டு யூன் மாதம் 23 ஆம் திகதி செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

திருகோணமலைத் துறைமுகம், முல்லைத்தீவில் இருந்து கிழக்குக் கடற்பகுதிகள், அங்குள்ள கனிய வளங்கள் போன்றவற்றை நோக்காகக் கொண்டே இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய அமெரிக்கா முற்படுவதாக உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன

மைத்திரி - ரணில் அரசாங்கத்தை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கியதன் முக்கிய பங்குதாரராக அமெரிக்கா செயற்பட்டிருந்தாலும் அதன் பின்னரான சூழலில் கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்கா ஏன் முன்னிலைப்படுத்தியது எனவும் அந்தச் செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் இலங்கையில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னரான சூழலில் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றெபோட் ஓ பிளேக் கடந்த மே மாதம் முதல் வாரம் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோது கோட்டாபய ராஜபக்சவின் போர்க்காலச் செயற்பாடுகளைப் பாராட்டியிருந்தமை தொடர்பாகவும் கூர்மைச் செய்தித் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் பூகோள அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் பௌத்த பிக்குமார், கண்டி மகாநாயக்கத் தேரர்கள் ஆகியோரையும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் சந்தித்து உரையாடியிருந்த விடயங்களையும் கூர்மைச் செய்தித் தளம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளரென மகிந்த ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து மகிந்த ராஜபக்சவுடன் சென்ற 54 உறுப்பினர்கள், 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கியிருந்தனர்.

புலிகளை அழித்த பின்னர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென அமெரிக்கா தம்மிடம் உறுதியளித்திருந்ததாகவும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார். மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நம்பி இந்திய அரசுடன் கூடப் பேசுவதைத் தவிர்த்திருந்ததாக சட்டத்தரணி சுமந்திரனும் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுமுள்ளார்

மகிந்தவின் சகோதரரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியின் தவிசாளராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் செயற்படுகிறார். இந்த நிலையிலேயே அதன் தலைவராக மகிந்த ராஜபக்ச இன்று தெரிவானார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தக் கட்சி இருநூறு சபைகளைக் கைப்பற்றி முதலாவது பிரதான சிங்கள அரசியல் கட்சியாக மாறியது.

இதன் பின்னணியிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் பல உறுப்பினர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இலங்கை அரசியலில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளாகக் கடந்த எழுபது வருடங்களாக இயங்கின. ஆனால் 2016 ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சமாந்தரமான பிரதான கட்சியாக மாறியுள்ளது.

1952 இல் பண்டாரநாயக்கா அமைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ராஜபக்ச குடும்பம் சமாதிகட்டியுள்ளதென கொழும்பில் கிண்டலாகப் பேசப்படுகின்றது.

இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தங்களைத் தாங்களே மார்தட்டிய மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தற்போது நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலிலேயே பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டதெனலாம்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவோடு 2009 ஆம் ஆண்டு ஈழப்போர் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலேதான் பூகோள அரசியல் போட்டிகளுக்குள் இலங்கை சிக்குண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் சிதறுப்படும் நிலை உருவானது.

இவ்வாறு கட்சிகள் சிதறுப்படுவதற்கு ராஜபக்ச குடும்பமே காரணமென சிங்களக் கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். இதன் பின்னரான சூழலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவோடு 2009 ஆம் ஆண்டு ஈழப் போர் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலேதான் இந்தோ - பசுபிக் பூகோள அரசியல் போட்டிகளுக்குள் இலங்கை சிக்குண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் சிதறுப்படும் நிலை உருவானது

ஆனால் தற்போது ஜனாதிபதியாகவுள்ள அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச தரப்போடு இணைந்து போகும் சாத்தியங்கள் உள்ளதால் சந்திரிக்கா மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

2015 ஆம் ஆண்டு சேர்ந்து செயற்பட்டது போன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைத் தம் வசப்படுத்தும் ஜனாதிபதி வேட்பளார் ஒருவரைக் களமிறக்க சந்திரிக்கா முயற்சி எடுக்கிறார்.

ஆனால் கரு ஜயசூரிய சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சந்திரிக்காவின் முயற்சிக்குப் பின்னடைவாகவுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, கொழும்புத் துறைமுகம் மற்றும் வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம், முல்லைத்தீவில் இருந்து கிழக்குக் கடற்பகுதிகள், அங்குள்ள கனிய வளங்கள் போன்றவற்றை நோக்காக் கொண்டே இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய அமெரிக்கா முற்படுவதாக உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென அமெரிக்கா தம்மிடம் உறுதியளித்திருந்ததாகவும் ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் எதுவுமே நடக்க்வில்லையென்றும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் கடந்த மாத இறுதியில் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

2015 இல் பதவிக்கு வந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நம்பி இந்திய அரசுடன் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதைத் தவிர்த்திருந்ததாக அதன் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரனும் அந்த விவாதத்தில் கூறியிருந்தார்.

புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்திலேயே சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுமுள்ளார்.