13 அல்ல, தலைப்பில் மாற்றம்-

'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்'

அனைவரும் இணங்கியே தலைப்பை மாற்றியதாகக் கூறுகிறார் மனோ
பதிப்பு: 2021 டிச. 22 22:40
புதுப்பிப்பு: டிச. 26 20:11
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் இழுபறியில் இருப்பதாகத் தமிழத்தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன. ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் மூன்று கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஐந்து பக்கம் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது தொடர்பாக மீள் ஆய்வு செய்வதென நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவெடுக்கப்பட்டன. இன்று அல்லது நாளை வியாழக்கிழமை குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்படுமென நேற்றைய கூட்டத்தின் முடிவின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
வடக்குக் கிழக்குத் தமிழர்கள். மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள் என்ற கோரிக்கை எதுவும் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்படவில்லை. மாறாகச் சமகாலப் பிரச்சினைகள் பற்றிய அறிக்கையிடல் மாத்திரமே என்ற தொனியும் மனோ கணேசனின் கருத்தில் தெளிவாகவே வெளிப்பட்டிருந்தது

இது தொடர்பாக ஈபிஆர்எல்எப் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கூர்மைச் செய்தித் தளம் இன்று புதன்கிழமை மாலை வினவியபோது, ஆவணம் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆவணத்தில் மூன்று கூட்டங்களிலும் பங்குபற்றிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் கைச்சாத்திட முடியுமெனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐந்து பக்க ஆவணத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்னார்.

இன்று புதன்கிழமை மாலை ஊடகங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன், தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு 13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல் என இருந்த நிலையில், தற்போது 'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்' என மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின் முழுமையான விபரம் பின்வருமாறு--

தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு '13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்' என இருந்த நிலையில், தற்போது 'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்' என மாற்றப்பட்டுள்ளது.

புதிய வரைவு தயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது. இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும்.

சில ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதனால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிட்டு சுமந்திரன் கையொப்பமிட்டுள்ளார்.

சுமந்திரன் அனுப்பிய இந்த ஊடக அறிக்கை தொடர்பாகக் கூர்மை செய்தி இணையத்தளம் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் மீண்டும் தொடர்பு கொண்டபோதும், அவருடைய கைத்தொலைபேசி அழைப்பு இணைக்கப்படவில்லை.

ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கையடக்கத் தொலைபேசி அழைப்பும் இணைக்கப்படவில்லை. சுமந்திரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

இது குறித்துத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் கூர்மைச் செய்தித் தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது, புதிய வரைபு கிடைத்துள்ளதாகவும் அதில் தனது கட்சி சார்பாகச் சில திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரே தன்னால் கைச்சாத்திட முடியுமென்றும் கூறினார்.

எமது பிரச்சினைகளை நாங்களே பேசித் தீர்மானிக்க வேண்டும். அமெரிக்காவோ இந்தியாவோ எமது பிரச்சினைகளைத் ஒருபோதும் தீர்க்காது. அந்த நாடுகள் தமது புவிசார் நலன்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என்றார்.

அத்துடன் வடக்குக் கிழக்கு மக்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையாக இந்த ஆவணம் தயாரிக்கப்படவில்லை என்றும் மாறாக வடக்குக் கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லிம் மக்கள எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான அவதானக் குறிப்பாகவே இந்தியப் பிரதமரிடம் ஆவணம் அனுப்பப்படுமென்றும் மனோ கணேசன் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறினார்.

அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அம்சங்களில் 13 ஆவது திருத்தச் சட்டமும் ஒன்றெனவும் மனோ கணேசன் விபரித்தார்.

கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளின் திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு நிலையில் மாத்திரமே குறித்த ஆவணத்தில் கைச்சாத்திடுவது என்றும் மனோ கணேசன் கூறினார்.

சுமந்திரன் அனுப்பிய ஊடக அறிக்கையில் உள்ள புதிய தலைப்பு நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்தே மாற்றியதாகவும் கூறிய மனோ கணேசன், மலையக மக்கள் சார்பான தனது நிலைப்பாட்டையும் முஸ்லிம் மக்கள் சார்பான நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் முன்வைத்ததாகவும் கூறினார்.

ஆவணத்தை நரேந்திரமோடியிடம் கையளிப்பதன் ஊடாக இந்தியாவின் கவனத்தை திருப்ப முடியுமெனவும், அதனை ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கையாக இந்திய அவதானிக்கும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்

13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விவகாரம் மாத்திரமல்ல, வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் சமகாலப் பிரச்சினைகள் அடங்கிய ஆவணமாக பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ளதாகவும் மனோ கணேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

குறித்த ஆவணத்தில் இன்று அல்லது நாளை கட்சித் தலைவர்கள் அனைவரும் கைச்சாத்திட வாய்ப்பில்லை என்ற தொனி மனோ கணேசனின் கருத்தில் தென்பட்டது.

அத்துடன் வடக்குக் கிழக்குத் தமிழர்கள். மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள் என்ற கோரிக்கை எதுவும் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்படவில்லை. மாறாகச் சமகாலப் பிரச்சினைகள் பற்றிய அறிக்கையிடல் மாத்திரமே என்ற தொனியும் மனோ கணேசனின் கருத்தில் தெளிவாகவே வெளிப்பட்டிருந்தது.

இந்தவொரு நிலையில், இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள ஆவணம் தொடர்பாக இதுவரை உரிய முடிவுகள் எடுக்கப்படவில்லையென அறிய முடிகின்றது.

இந்த ஆவணம் தயாரிப்புத் தொடர்பாக ரவூக் ஹக்கீமிடம் தொடர்புகொள்ள முற்பட்டபோதும் தொலைபேசி அழைப்பு இணைக்கப்படவில்லை. ஆனாலும் ஆவணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாலை கொழும்பில் கூடி ஆராய்ந்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, 13 அரசியல் தீர்வு என்றோ அல்லது இந்தியா சொல்லி இலங்கை 13 ஐ உடனடியாக அமுல்படுத்தும் என்றோ தாங்கள் கருதவில்லையென சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறினார்.

ஆனால் இந்த ஆவணத்தை நரேந்திரமோடியிடம் கையளிப்பதன் ஊடாக இந்தியாவின் கவனத்தை திருப்ப முடியுமெனவும், அதனை ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கையாக இந்திய அவதானிக்கும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார்.

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதையே பிரதான கோரிக்கையாக முன்வைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விடுதி விடுதியாய்க் களம் புகுந்த ரெலோ அணியோடு சேர்ந்து களமாடிய புளொட், ஈபிஆரெலெவ் நிலைப்பாடு சம்பந்தன், சுமந்திரன் தலைமையிலான அணியினரால் சாதுரியமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நகர்வு புதனன்று நடந்தேறியுள்ளது.

எது எவ்வாறாயினும், தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தான் அணிந்துகொண்ட சிறிய கச்சைத்துண்டையும் கழற்றியெறிந்த ரெலோவினை மேவி, முழுமையான கச்சையணிந்த சுமந்திரன் அணி களம் இறங்கியுள்ளது என்பதே உண்மைக் கள நிலவரமாகிறது.

விக்னேஸ்வரன் தனது நிலைப்பாடு இரண்டுக்கும் இடையானது என்று பெருமைப்படக்கூடிய அவலமும் நடந்தேறுகிறது.

தமது தோல்வியால் திம்புக் கோட்பாட்டைச் சிதைத்த அவப்பெயரை ரெலோ அணியினர் சிறுமையோடு தழுவிக்கொள்கிறார்கள்.

ஏற்கனவே யாழ் திண்ணை விடுதியில், ரெலோ தயாரிக்க எண்ணியிருந்த உள்ளடக்கத்தோடு முழுமையான இணக்கம் கண்டிராத விக்னேஸ்வரன் தனது வரைபை ஊடகங்களுக்கு வெளியிட்டும் இருந்தார்.

அதிலே உடனடித் தீர்வாக 13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியாவைக் கோருவதென்றும், நிரந்தர்த் தீர்வாக சமஷ்டி என்பதே தமது நிலைப்பாடென்றும் அவர் தெரிவித்திருந்தார்.

'உடனடி' என்ற பெயரில் கேட்கப்படுவதற்குக் கூட பதின்மூன்றுக்கு லாயக்கு இல்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்திருக்கவில்லை. எனினும் தற்போது, சுமந்திரனதும் செல்வம் அடைக்கலநாதனதும் 'வாய்க்கால்-வரம்புச்' சண்டைக்கு இடையில் சிக்கியுள்ள அவர் தன்னைச் சுதாகரித்துக்கொள்ள ஏற்கனவே முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த நுட்பமான 'வாய்க்கால் வரம்புச் சண்டை' யாரால், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது, திரைமறைவில் கையாளப்படும் ஒரு விடயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும், ஈழத் தமிழ்த் தேசிய பரப்பில் அரசியற் கட்சிகளிடையான விவாதம் இந்திய இலங்கை ஒப்பந்தக் 'கச்சை' பற்றியே இருக்கிறது என்பதும், திம்புக் கோட்பாட்டு நிலைக்குக் கூட அது மீண்டும் உயரவில்லை என்பதும் இங்கே உற்றுக்கவனிக்கப்படவேண்டியது.

இலங்கைத் தீவுக்குள்ளான தமிழ்த் தேசியப் பரப்பில் விவாதத்தின் திசை இனிமேல் 13 பற்றியதல்ல.

அது 'அரத்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம்' என்ற பெயரில் அமெரிக்கா, இந்தியாவுடன் இலங்கை அரசின் ஜீ.எல். பீரிஸ் மற்றும் மிலிந்த மொராகொட போன்றோர் மறைமுகமாக இணங்கியிருப்பதாகக் கருதப்படும் ஒற்றையாட்சி இலங்கை அரசின் வெளியுறவு இராஜதந்திரத்துக்குப் பலியாகும் அடுத்த கட்டமாகும் என்று தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகளிற் சிலர் கூர்மை இணையத்துக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

'ஒன்றிணைந்த, பிரிக்கமுடியாத, பிளவுபடாத’ என்ற பெயரில் அரங்கேறும் ஒற்றையாட்சியைக் காப்பாற்றும் திரைமறைவு நடவடிக்கைகளுக்கும், தமிழ்த் தேசியத் திம்புக் கோட்பாட்டு நிலைப்பாட்டிற்கும் இடையான முரண் நிலையே அதுவாகும்.

சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றோர் கூட்டத்தில் பங்கேற்று ஏதோ ஒரு வகையில் ரெலோவின் 'கச்சை கழன்ற' நிலைப்பாட்டை முறியடிக்கக் காராணமாகியது போல, அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆரோக்கியமான பங்களிப்பைக் கஜேந்திரகுமார் தலைமையிலான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி செய்யமுடியாத நிலையில் தன்னைத் தானே 'பங்கேற்கா அரசியல்' மூலம் குறுக்கிவைத்துள்ளது.

2011 ஓக்ஸ்ட் மாதம் புது தில்லியில் 'பரந்தன் ராஜன்' அணி என்று சொல்லப்படும் தமிழ்த் தேசிய 'மண்டியிடு அணி'யின் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய அரசியலைத் தெளிவுபடுத்தி வெளி நடப்புச் செய்த அதே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அணி தற்போது இலங்கைத் தீவினுள் தமிழ்த் தேசியப் பரப்பில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணித்து 'வெளிநடப்பு ராஜதந்திரம்' உள்ளடங்கலான தனது காத்திரமான பங்களிப்பை நல்குவதற்க்குக் கூடத் துணிவற்ற நிலையிலும், அல்லாதுவிடில் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க இயலாமலும், தனியே தேர்தல் அரசியற் 'காய்ச்சலில்' இருப்பது தமிழ்த் தேசியத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

விளைவாக, திருச்செல்வம் பாரம்பரியத்தின் ஆபத்தான இணக்க அரசியல் சுமந்திரன் தலைமையில், மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறும் கதையாக, அரங்கேறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பொறியில் இருந்து தப்பி, மறு பொறிக்குள், ஈழத் தமிழர்களின் அரசியற் கோரிக்கை சென்றுகொண்டிருக்கிறது.