சீனா கொழும்பில் நிர்மாணிக்கும் கேள்விக்குரிய தாமரைக் கோபுரத்தில் சம்பவம்

வானளாவிய தொடர்புக் கோபுரத்தில் வேலைக்குச் சென்ற தமிழ் மாணவன் தவறி விழுந்து பரிதாப மரணம்

மின் இணைப்பில் ஈடுபட்ட கிளிநொச்சி இளைஞனின் கதி ஈழத்தமிழரின் நிலைக்கு உருவகமாகிறது
பதிப்பு: 2018 ஜூன் 09 14:07
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 09 16:56
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் அனுமதியுடன் தீவின் தென்பகுதியை மையமாகக் கொண்டு சீனா பல்வேறு கட்டுமானங்களை நிறுவி வருவது தெரிந்ததே. இந்தவரிசையில் கொழும்பின் மருதானையில் 350 மீற்றர் உயரம் கொண்டதாக, தாமரைக் கோபுரம் (Lotus Tower) என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும், தொடர்பாடல் கட்டடத்தில் இணைப்பு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 19 வயது தமிழ் மாணவன் தற்காலிக மின்தூக்கி ஒன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடந்திருக்கிறது. தமிழர் தாயகப் பகுதியான கிளிநொச்சியின் மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடகல்வி கற்கும் கோனேஸ்வரன் நிதர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் என்று கொழும்பில் மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அக்கராயன்குளத்தை வசிப்பிடமாகக் கொண்ட நிதர்ஷன் நண்பர்களுடன் இணைந்து மின் இணைப்புப் பணிக்காக கொழும்புக்குச் சென்றிருந்ததாக உறவினர்களும் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஐபிள் கோபுரத்தை விடவும் 26 மீற்றர் அதிக உயரத்தில் கட்டப்படுவதான பரப்புரையோடு இந்தக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இந்தத் தாமரைக் கோபுரத்தை உள்ளடக்கிய Colombo Port City எனும் பட்டின நிர்மாணத்தின் தார்ப்பரியங்களிற் சிலவற்றை விளக்கும் செய்திக் கட்டுரை ஒன்றை அணமையில் கூர்மை செய்தித் தளம் வெளியிட்டிருந்தது.

சீனாவின் இரண்டு பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தக் கோபுரத்தை நிர்மாணித்து வருகின்றன.

தாமரைக் கோபுரம் எனும் இந்தக் கட்டுமானத்தை தனது பிராந்திய நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் சீனா இலத்திரனியல் உளவுக்கு எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் இந்திய வட்டாரங்களில் சமீபத்தில் வெளிப்பட்டிருந்தது.

இந்தக் கோபுரத்தின் எட்டாவது மாடியில் சீனாவின் கண்காணிப்புத் தளம் ஒன்று அமையவிருப்பதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும் இந்தத் தளத்திற்கு எவரும் செல்ல முடியாதவாறு இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இவ்வாறான இறுக்கமான பாதுகாப்பு எற்பாடுகளுடன் மின் இணைப்பு வேலை ஒன்றுக்காக தமிழர் தாயகப் பகுதியான கிளிநொச்சியில் இருந்து வந்திருந்த இளைஞனே அங்கு பலியாகினார் என்றும் அந்த அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா ஆகிய அனைத்துச் சக்திகளுடனும் தனது கேந்திர முக்கியத்துவத்தைப் பேரம் பேசி, எல்லாச் சக்திகளிடம் இருந்தும் நேரடி, மறைமுக உதவி பெற்று, இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படுகிற கொடிய போர் ஒன்றை இலங்கை அரசு நடாத்தியது.

தற்போது கட்டமைப்பு இன அழிப்புக்குட்பட்டு வறுமைக்குள்ளாகியுள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்புக்காகக் கொழும்பு வந்து இவ்வளவு உயரமான கோபுரங்களில் வேலை செய்து விழுந்து இறக்கும் நிலை தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கும் ஒரு விடயம் என்றார் அவர்.

தமிழர் மீதான போரின் போது சர்வதேச சக்திகளுடன் பேரம் பேச ஆரம்பித்ததில் தொடங்கி, இன்று முழு இலங்கைத் தீவையுமே அபிவிருத்தி, கட்டுமானம், இராணுவக் கூட்டுறவு என்ற போர்வையில் எல்லாச் சக்திகளுக்கும் துண்டு துண்டாகப் பிய்த்துக் கொடுக்கும் மீளமுடியாத பொறி ஒன்றுக்குள் இலங்கை அரசுஆழமாக விழுந்திருக்கிறது.

இதைத் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் இன்னும் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 13 ஆவது மாடியில் 145 மீற்றர் உயரத்தில் இருந்து இளைஞன் தவறி விழுந்ததால் உயிரிழந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் இவ்வாறு பல உயிரிழப்புகள் இந்தக் கோபுர நிர்ணமானத்தின்போது இடம்பெற்றதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

கொழும்பு போட் சிற்றி (Colombo Port City) அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்ற பட்டினத் திட்டங்கள் தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யும் என இந்திய இராணுவ ஆய்வாளர்கள் ஏலவே கிலேசமடைந்துள்ளனர்.

இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற போர்வையில் இந்த தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தந்திரோபாய நிபுணர் அக்ஸர் ரோய் தெரிவித்திருந்தார்.

தெற்காசிய ஆய்வுக்குழு (SAAG)வின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த விபரங்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன.

இந்தத் தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்கு சீன எக்ஸிம் வங்கி கடனுதவி வழங்கியுள்ளது. சீன தேசிய இலத்திரனியல் ஏற்றமதி இறக்குமதி கூட்டுத்தாபனம் மற்றும் கால்மிட் ஆகிய நிறுவனங்கள் இந்த நிர்மானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

350 மீற்றர் உயரமான இந்தக் கோபுரம், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு முதன்மைப் பரிவர்த்தனைக் கோபுரமாக அமையவுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நிர்மாணிப்பு பணிகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தாமரை கோபுர திட்ட முகாமையாளரான Cai XIaofeng தெரிவித்துள்ளார்.

டி.ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 இல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்த திட்டத்திற்கு 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுகிறது.

50 தொலைக்காட்சி சேவைகள் மற்றும் 35 வானொலி நிலையங்கள் ஆகியவற்றிற்கான சமிக்ஞைகளை இந்த கோபுரத்தின் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும் எனத் திட்ட முகாமையாளரான Cai XIaofeng மேலும் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முற்பகுதியில் பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தாமரைக் கோபுரத்தில் 1500 வாகன தரிப்பிட வசதிகளுடன் பல்வேறு வர்த்தக மையங்கள் மற்றும் உணவகங்களுடன் அருங்காட்சியகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, இந்தக் கோபுரத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ அச்சுறுத்தல் இல்லை என்றும் இது இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான இலக்கு எனவும் இலங்கையின் சீன நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அமரதாஸ குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற சீன இலங்கை நட்புறவின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இதேவேளை 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக அதி உயர்ந்த மற்றுமொரு வானளாவிய கட்டடம் ஒன்றையும் சீனா இலங்கையில் நிர்மாணிக்கவுள்ளது. கொழும்பு 1 இல் உள்ள ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்ட இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது.

THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்டடம், அலுவலகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பலமாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், உலங்குவானூர்தி இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.

2021 ஆம் ஆண்டு இந்த கட்டடப் பணிகள் பூர்த்தியடையும் எனவும் சீனாவின் முக்கிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் காண்காணிப்பில் சீன நிறுவனம் ஒன்று இதற்கான வேலைத்திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இந்தக் கட்டடத்திற்கான நிறைவேற்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் சீனாவுக்கான பொருளாதார அபிவிருத்தி மற்றும் சீன பாதுகாப்புக்கான கட்டட நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் செய்யப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றில் கூறியிருந்தார்.

ஆனால் சீனாவின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி அல்லது தமது கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மைத்திரி ரணில் அரசாங்கமும் சீனாவுடனான உறவைப் பேணுவதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

கொழும்பு போட் சிற்றி பட்டினத் திட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ரணில் விக்கிரமசிங்கவே அந்தத் திட்டத்தை தொடருவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் என தினேஸ் குணவர்த்தன அந்த விவாதத்தின்போது சொல்லியிருந்தார்.

2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சீனாவுடன் புதிய உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது எனவும் தினேஸ் குணவா்த்தன மேலும் கூறியிருந்தார்.

அதேவேளை, இலங்கைத் தீவில் மேலும் தமது பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கான ஆய்வுகளை சீன அரசு மேற்கொண்டுவருவதாக ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய கொழும்பில் இடம்பெற்ற சீன ஆதிக்கம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.