சுமந்திரனின் 'இந்திய-இலங்கை ஒப்பந்த அதிகாரப்பரவலாக்க' வேண்டுகோள் மேலெழ

மண் கவ்வியது ரெலோ, புளொட், ஈபிஆரெலெவ்வின் பதின்மூன்றாம் திருத்தக்கோரிக்கை

விழுந்தாலும் மூக்கில் மண்படவில்லை என்பாரா விக்கி?
பதிப்பு: 2021 டிச. 22 20:23
புதுப்பிப்பு: டிச. 26 20:09
சுமந்திரன் வெளியிட்ட அறிக்கை
சுமந்திரன் வெளியிட்ட அறிக்கை
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதையே பிரதான கோரிக்கையாக முன்வைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விடுதி விடுதியாய்க் களம் புகுந்த ரெலோ அணியோடு சேர்ந்து களமாடிய புளொட், ஈபிஆரெலெவ் நிலைப்பாடு சம்பந்தன், சுமந்திரன் தலைமையிலான அணியினரால் சாதுரியமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நகர்வு புதனன்று நடந்தேறியுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தான் அணிந்துகொண்ட சிறிய கச்சைத்துண்டையும் கழற்றியெறிந்த ரெலோவினை மேவி, முழுமையான கச்சையணிந்த சுமந்திரன் அணி களம் இறங்கியுள்ளது. விக்னேஸ்வரன் தனது நிலைப்பாடு இரண்டுக்கும் இடையானது என்று பெருமைப்படக்கூடிய அவலமும் நடந்தேறுகிறது. தமது தோல்வியால் திம்புக் கோட்பாட்டைச் சிதைத்த அவப்பெயரை ரெலோ அணியினர் சிறுமையோடு தழுவிக்கொள்கிறார்கள்.
 
ஏற்கனவே யாழ் திண்ணை விடுதியில், ரெலோ தயாரிக்க எண்ணியிருந்த உள்ளடக்கத்தோடு முழுமையான இணக்கம் கண்டிராத விக்னேஸ்வரன் தனது வரைபை ஊடகங்களுக்கு வெளியிட்டும் இருந்தார்.

அதிலே உடனடித் தீர்வாக 13ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியாவைக் கோருவதென்றும், நிரந்தர்த் தீர்வாக சமஷ்டி என்பதே தமது நிலைப்பாடென்றும் அவர் தெரிவித்திருந்தார்.

'உடனடி' என்ற பெயரில் கேட்கப்படுவதற்குக் கூட பதின்மூன்றுக்கு லாயக்கு இல்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்திருக்கவில்லை. எனினும் தற்போது, சுமந்திரனதும் செல்வம் அடைக்கலநாதனதும் 'வாய்க்கால்-வரம்புச்' சண்டைக்கு இடையில் சிக்கியுள்ள அவர் தன்னைச் சுதாகரித்துக்கொள்ள ஏற்கனவே முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த நுட்பமான 'வாய்க்கால் வரம்புச் சண்டை' யாரால், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது, திரைமறைவில் கையாளப்படும் ஒரு விடயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும், ஈழத் தமிழ்த் தேசிய பரப்பில் அரசியற் கட்சிகளிடையான விவாதம் இந்திய இலங்கை ஒப்பந்தக் 'கச்சை' பற்றியே இருக்கிறது என்பதும், திம்புக் கோட்பாட்டு நிலைக்குக் கூட அது மீண்டும் உயரவில்லை என்பதும் இங்கே உற்றுக்கவனிக்கப்படவேண்டியது.

இலங்கைத் தீவுக்குள்ளான தமிழ்த் தேசியப் பரப்பில் விவாதத்தின் திசை இனிமேல் 13 பற்றியதல்ல.

அது 'அரத்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம்' என்ற பெயரில் அமெரிக்கா, இந்தியாவுடன் இலங்கை அரசின் ஜீ.எல். பீரிஸ் மற்றும் மிலிந்த மொராகொட போன்றோர் மறைமுகமாக இணங்கியிருப்பதாகக் கருதப்படும் ஒற்றையாட்சி இலங்கை அரசின் வெளியுறவு இராஜதந்திரத்துக்குப் பலியாகும் அடுத்த கட்டமாகும் என்றும், 'ஒன்றிணைந்த, பிரிக்கமுடியாத, பிளவுபடாத’ என்ற பெயரில் அரங்கேறும் ஒற்றையாட்சியைக் காப்பாற்றும் திரைமறைவு நடவடிக்கைகளுக்கும் திம்புக் கோட்பாட்டு நிலைப்பாட்டிற்கும் இடையானது என்றும் தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகளிற் சிலர் கூர்மை இணையத்துக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றோர் கூட்டத்தில் பங்கேற்று ஏதோ ஒரு வகையில் ரெலோவின் 'கச்சை கழன்ற' நிலைப்பாட்டை முறியடிக்கக் காராணமாகியது போல, அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆரோக்கியமான பங்களிப்பைக் கஜேந்திரகுமார் தலைமையிலான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி செய்யமுடியாத நிலையில் தன்னைத் தானே 'பங்கேற்கா அரசியல்' மூலம் குறுக்கிவைத்துள்ளது.

2011 ஓக்ஸ்ட் மாதம் புது தில்லியில் 'பரந்தன் ராஜன்' அணி என்று சொல்லப்படும் தமிழ்த் தேசிய 'மண்டியிடு அணி'யின் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய அரசியலைத் தெளிவுபடுத்தி வெளி நடப்புச் செய்த அதே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அணி தற்போது இலங்கைத் தீவினுள் தமிழ்த் தேசியப் பரப்பில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணித்து 'வெளிநடப்பு ராஜதந்திரம்' உள்ளடங்கலான தனது காத்திரமான பங்களிப்பை நல்குவதற்க்குக் கூடத் துணிவற்ற நிலையிலும், அல்லாதுவிடில் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க இயலாமலும், தனியே தேர்தல் அரசியற் 'காய்ச்சலில்' இருப்பது தமிழ்த் தேசியத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

விளைவாக, திருச்செல்வம் பாரம்பரியத்தின் ஆபத்தான இணக்க அரசியல் சுமந்திரன் தலைமையில், மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறும் கதையாக, அரங்கேறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பொறியில் இருந்து தப்பி, மறு பொறிக்குள், ஈழத் தமிழர்களின் அரசியற் கோரிக்கை சென்றுகொண்டிருக்கிறது.

''தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது'' என்ற தலைப்பில் சுமந்திரன் பெயரிட்டு, விசேட ஊடக அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

சுமந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ''13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்'' என இருந்த நிலையில், தற்போது "தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்" என மாற்றப்பட்டுள்ளது

புதிய வரைவு தயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது. இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும்.

சில ஊடகங்கள் தொடரந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதனால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.