நிரல்
நவ. 26 23:38

தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கின் சாட்சிக்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு

(கிளிநொச்சி, ஈழம்) போர்க் காலத்தின் போது கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் பிரதான சாட்சியான, இலங்கைக் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தாக்கியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் அவரது சகாக்களான ஆறு கடற்படை அதிகாரிகளும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வழக்கின் பிரதான சந்தேக நபரான இலங்கைக் கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நவ. 26 10:26

பிறந்தநாள் கொண்டாட முற்பட்ட சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இருவர் கைதாகி விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலை அடுத்து முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் இலங்கை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிவாஜிலிங்கத்தின் இந்தச் செயற்பாடு முன் யோசனையில்லாதது என்றும் தமது சொந்த அரசியல் நலன் கருதி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மகிமையை பயன்படுத்துவது தவறானது என்றும் மக்கள் குறை கூறியுள்ளனர்.
நவ. 25 20:38

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டல்

(மட்டக்களப்பு, ஈழம்) ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக விளங்கும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களது படுகொலைக்கான நீதி இதுவரை நிலைநாட்டப்படாத நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களது நினைவாக தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி புங்காவில் இன்று இடம்பெற்றது. ஊடகவியலாளர் சங்க தலைவர் கே.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மட்டக்களப்பு நகரசபை பிரதி மேஜர் எஸ்.சத்தியசீலன் மாநகரசபை ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு இந்து சமய சடங்குகளுடன் நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
நவ. 25 11:03

இலங்கை ஒற்றையாட்சி அரசின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை செயற்படுத்த முடியாத நிலை

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்கு மாகாணம் கல்வியில் இறுதி நிலையில் உள்ளதற்கு தமது ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்துள்ள வடக்கு மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். கல்வித் தரத்தில் வடக்கு மாகாணம் 9 ஆவது இடத்திலும் கிழக்கு மாகாணம் 8 ஆவது இடத்திலும் இருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னரே இந்தநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நவ. 24 17:18

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கென 61 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது- வடமாகாண மகளிர் விவகார அமைச்சு

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் 63 ஆயிரத்து 345 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வழங்கிய பதிலில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
நவ. 24 15:33

முகமாலையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி- கொடிகாமம் பொலிஸார் விசாரணை

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சி - முகமாலை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட நபரொருவர் புகையிரதம் மோதியதனால் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். எனினும் உயிரிழந்தவரது சடலம் சிதைவடைந்துள்ளதனால் குறித்த நபர் யார் என்பது தெரியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நவ. 24 14:56

ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்கு முன்னரான அரசாங்கத்தை மீண்டும் அமைக்க மைத்திரிக்கு மூத்த உறுப்பினர்கள் ஆலோசனை

(மன்னார், ஈழம்) தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவர் என்ற முறையில மூத்த உறுப்பினர்கள் பலர் சந்தித்து உரையாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்பிருந்த அரசாங்கத்தை மீண்டும் அமைக்குமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்வது தொடர்பாகவும் மைத்திரியுடன் பேசப்பட்டுள்ளது. இது குறித்து மைத்திரிபால சிறிசேனவும் அக்கறை கொண்டுள்ளார் என்று கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
நவ. 23 22:34

மகிந்தவுக்குப் பெரும்பான்மை இல்லை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 122 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் மனு

(யாழ்ப்பாணம், ஈழம் ) மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் தொடர்ந்தும் சட்டத்திற்கு முரணாக அரசாங்கம் பதவியில் இருக்க முடியாதெனவும் குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் ஆதரவுக் கட்சிகளும் இணைந்து கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) இன்று வெள்ளிக்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன. 225 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அகிரவிராஜ் கரியவசம் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மகிந்த தரப்புக்கு மாறிச் சென்று மீண்டும் ஐ.தே.க.வில் இணைந்த மனுஷ நாணயக்காரவும் மனுவில் கையொப்பமிட்டுள்ளதாக அகிலவிராஜ் கூறினார்.
நவ. 23 16:37

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானாசார தேருக்கு எதிரான வழக்கு மீளப் பெறப்பட்டுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உள்ள சிங்கள பௌத்த தேசிய கடும்போக்கு இனவாத அமைப்புக்களில் ஒன்றான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானாசார தேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடரப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை அந்தத் திணைக்களம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தன்னிச்சையாக பிரதமராக நியமித்த தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்தவாரம் பொது பல சேனா உள்ளிட்ட சிங்கள பௌத்த கடும்போக்குவாத இனவாத அமைப்புக்களின் பௌத்த பிக்குகளை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தார்.
நவ. 23 11:48

இலத்திரனியல் வாக்கெடுப்பில் 121 பேர் ஆதரவாக வாக்களித்தனர் -தோல்வியை தவிர்க்க மகிந்த தரப்பு வெளிநடப்பு

(வவுனியா, ஈழம் ) இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இலத்திரனியல் வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளவர்களே அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதற்கு ஆதரவாக 121 பேர் வாக்களித்துள்ளனர். மகிந்த ஆதரவாளர்கள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். வாக்கெடுப்பில் கலந்துகொண்டால் தோல்வியடைலாம் என்பதாலேயே மகிந்த தரப்பு வெளிநடப்புச் செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது. நாடாளுமன்றம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10.30க்கு கூடியது.