இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்க

ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

கோட்டாபய தன்னைச் சிறந்த தலைவராக நிறுவலாம் என்கிறார் ஜெகான் பெரேரா
பதிப்பு: 2020 டிச. 22 20:55
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 01 21:11
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு குற்றம் சுமத்தியுமிருந்தனர். இந்த அமைப்புகள் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அணுசரனை வழங்குவதற்கும் (co-sponsorship) ஆதரவளித்தவை என்பதும் தெரிந்ததே.
 
அமெரிக்க இராணுவத் தரப்புகளோடு நெருக்கமாகவும் கோட்டாபய ராஜபக்சவின் நீண்டகால ஆலோசகராகவும் செயற்பட்டு வந்த பேராசிரியர் றொகான் குணரட்ண தற்போது கொழும்பு ஊடகங்களூடாக பகிரங்கமாக வழங்கும் ஆலோசனைகளும், மிலிந்த மொறாகொட இந்தியாவுக்கான தூதுவராகவும் "ஐ.நா. புகழ்" பாலித கோகண்ண சீனாவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருப்பதும், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை சர்வதேச அரங்கில் முற்றாகவே இல்லாதொழிப்பதற்கான இலங்கையின் வேலைத் திட்டமாகும்

இதற்குப் பின்னால் ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பும் இருந்தது.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், குறிப்பாக மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் நிலைமாறுகால நீதி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட வேலைத்திட்டங்களால் அதிகம் பயன் பெற்றவர்கள் இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள்தான்; ஈழத் தமிழர்கள் அல்ல.

ஆனால் தங்களைத் தாங்களே நல்லாட்சி என்று கூறிக்கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி - ரணில் அரசாங்கம் மூன்று மாதங்களிலேயே நிலைமாறுகால நீதி என்ற விடயத்தில் முரண்பட ஆரம்பித்தது. ஆக, 19 ஆவது திருத்தச் சட்டம் மாத்திரமே அவர்கள் செய்த சாதனை. அதுவும் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பது என்ற போர்வையில் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பைப் பலப்படுத்துவதே இவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.

இதற்கு ஏதுவாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா, மாற்றுக்கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட சிங்கள முற்போக்குவாதிகள் என்று கூறப்படும் பலர் 19 ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் நிலைமாறுகால நீதிபற்றியும் மக்களுக்கு அதிகளவில் போதித்திருந்தனர். ஆனால் சொல்லப்பட்டவாறு நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எதுவுமே நடந்திருக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என்று 2016 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே தகவல்கள் கசிய ஆரம்பித்திருந்தன.

திட்டமிட்டப்படி கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என்று 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மகிந்த ராஜபக்ச அறிவித்தபின்னரும் இவர்களில் பலர் அமைதிகாத்தனர்.

தற்போது இவர்கள், கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு வருடத்தின் பின்னரான சூழலில், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்துப் பேசத் தலைப்பட்டுள்ளனர்.

அதுவும் 30/1 தீர்மானத்தை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் வழங்குவது பற்றியே தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் தமிழ்ப் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் இந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் போதிக்க ஆரம்பித்துள்ளனர்.

உண்மையிலேயே இந்த அரசார்பற்ற நிறுவனங்களுக்கு ஈழத்தமிழர் தொடர்பான அக்கறை இருக்குமானால், 30/1 தீர்மானம் தோல்வி எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு இலங்கை அரசு பற்றிய விவகாரத்தை ஜெனீவா மனித உரிமைச் சபை பாரப்படுத்த வேண்டும் என்றும் பதிவிட்டுக் காரசாரமான அறிக்கையிடலை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான அக்கறைதான் அவர்களுக்கு இருப்பதில்லையே!

ஆக, இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் கருவியாகவே இவர்கள் செயற்படுகின்றனர் என்பது அவ்வப்போது வெளிப்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த உரையாடல்களைத் தமிழ்க் கட்சிகளோடும் தமிழ்ப் பிரமுகர்களோடும் நடத்துவதற்கு இவர்களுக்கு என்ன அக்கறை (அருகதை) என்ற கேள்வியை தமிழ்க் கட்சிகள் எதுவும் இதுவரை எழுப்பவில்லை.

2010 இல் சரத்பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிப்பதற்கும், 2015 இல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கும் ஏற்ற முறையில், தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பேரம்பேசிய இந்த அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் வெளிச்சக்திகள், தற்போது நான்கு வருடங்களுக்கும் அதிகமாகக் கால அவகாசம் வழங்கப்பட்டுத் தோல்வியடைந்த 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச விளைகின்றன.

உண்மையிலேயே இந்த அரசார்பற்ற நிறுவனங்களுக்கு ஈழத்தமிழர் தொடர்பான அக்கறை இருக்குமானால், 30/1 தீர்மானம் தோல்வி எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு இலங்கை அரசு பற்றிய விவகாரத்தை ஜெனீவா மனித உரிமைச் சபை பாரப்படுத்த வேண்டும் என்றும் பதிவிட்டுக் காரசாரமான அறிக்கையிடலை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான அக்கறைதான் அவர்களுக்கு இருப்பதில்லையே!

2015 இல் யாருடைய ஆட்சியைக் கவிழ்த்தார்களோ, அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தைக் காப்பாற்றவே தற்போது இவர்கள் முற்படுகிறார்கள் என்று கூறினாலும் உண்மையில் அதையும் விட ஆழமாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும், இலங்கைப் படைகளையும் காப்பாற்றுவதிலேயே இந்தத் தன்னார்வ முகவர்கள் குறியாய் இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

இச் செயற்பாட்டிற்குப் புலம்பெயர் நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளும் கொழும்பை மையமாக் கொண்டு தாயகப் பகுதிகளில் அரசியலில் ஈடுபடும் சில தமிழ்ப் பிரதிநிதிகளும் கையசைத்துள்ளனர்.

எழுபது ஆண்டுகால ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் முப்பது ஆண்டுகள் நடந்தது ஆயுதப்போர். 1983 இல் போர் மூளுவதற்கு முன்னரே ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுவது இனப்படுகொலைதான் என்று வ. நவரட்ணம், தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகிய தமிழ்த் தலைவர்கள் குறிப்பிட்டுக் கூறியமைக்கான ஆதாரங்கள் உண்டு. அவர்கள் உணர்வுரீதியாக அவ்வாறு கூறவில்லை, அறிவுசார்ந்தே அதனை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்று பிற்காலத்தில் எழுதிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுமிருக்கின்றனர்.

ஆகவே, நடந்தது இனப்படுகொலைதான் என்றும் சுயநிர்ணய உரிமைதான் அரசியல் விடுதலை எனவும் குறிப்பிட்டுக் கூறி முடிவெடுக்கும் உரித்துடையவர்கள் ஈழத்தமிழர்கள்.

ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் சில தமிழ் முகவர்களைக் கூட்டிணைத்து சுயநிர்ணயம், இன அழிப்பு சார்ந்த நிலைப்பாட்டை ஈழத்தமிழர்களிடையே நீர்த்துப்போகச்செய்ய முயல்கின்றனர்.

அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு ஏற்றதான அமெரிக்க, இந்திய அரசுகளின் ஈழத்தமிழர் குறித்த நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பவர்களாக இந்த அரசசார்பற்ற முகவர்கள் செயற்படுகின்றனர்.

2015 இல் அமெரிக்க, இந்திய அரசுகளினால் நிலைமாறு கால நீதியென்று தலைப்பிடப்பட்டு அது தமிழர்களின் தலையில் வலிந்து திணிக்கப்பட்டது. காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் கொழும்பை மையமாகக் கொண்டு உறவினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் நல்லாட்சியின் வெற்றி என்று இந்த முகவர்கள் கொண்டாடினார்கள்; அறிக்கைகள் பதிவிட்டார்கள்; நியாயப்படுத்தினார்கள்.

தற்போது, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னைச் சிறந்த ஒரு தலைவராக நிறுவும் வாய்ப்பிருக்கின்றது என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் திட்டங்களுக்கு ஏற்றவாறு நம்பிக்கை ஊட்ட முயல்கிறார். இலங்கைத் தீவில் வாழும் "சிறுபான்மைகள்" என்ற சொல்லாடல் மூலம் அதாவது தமிழ், முஸ்லிம் மக்கள் என்று குறிப்பிடாமல் சிறுபான்மை மக்களின் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக்கூடிய வகையில் கோட்டாபயவுடன் பேச்சு நடத்த முடியும் என்ற தொனியில் அவரின் கருத்து அமைந்திருக்கிறது.

2015ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கோட்டபாய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடத்தப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத செயற்பாடுகள், மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் குறித்த விமர்சனங்களைத் தவிர்த்து, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த ராஜபக்சக்களின் ஆட்சி மற்றும் செயல்திறன்கள் பற்றியே தேசிய சமாதானப் பேரவையின் இணையத்தளத்தில் சிறு விமர்சனங்களையும் புகழார நகர்வுகளையும் மேற்கொள்ள முற்படுகின்றார்.

தனது கேந்திர அரசியலுக்காகவும் இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கிலும் 1997ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா தடைவிதித்திருந்தது. அந்தத் தடை இன்றுவரை நீடிக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் அதுவும் கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் சூழலில், ஐ.நா புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார் றொகான் குணரட்ண

2002 இல் இருந்து சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாதப் பேராசிரியர் றொகான் குணரட்ண முன்வைத்த இனவாதக் கருத்துக்களைக் கண்டித்துத் தன்னைச் சிங்கள மிதவாதியாகவும், சமாதானத்தை உருவாக்க முற்படுபவராகவும் காண்பித்திருந்த ஜெகான் பெரோரா, தற்போது றொகான் குணரட்ணவுடன் ஒத்துப்போகும் அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபடுகிறார் என்பதையே சமீபத்தில் அவர் வெளியிடும் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுக்கும் போக்கில் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கும் எதிராகச் செயற்பட்டும் பேராசிரியர் றொகான் குணரட்ண, 2006 ஆம் ஆண்டில் இருந்து போரை நடத்துவதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு சிறப்பு ஆலோசகராக விளங்கினார். தற்போது ஜனாதிபதியான பின்னரும் தனது ஆலோசனைகளை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டு வருகின்றார்.

இறுதிப் போரின்போது சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டிருந்த அவப் பெயரை நீக்கி, இலங்கை ஓர் ஜனநாயக நாடு, மனித உரிமைகளைப் பேணும் நாடு என்ற தோற்றப்பாடுகளைக் காண்பிக்கத் தற்போது ஜெகான் பெரேரா முற்படுகிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.

றொகான் குணரட்ண போன்ற பயங்கரவாத நிபுணர்களோடு முரண்பட்டிருந்த சமாதான நிபுணர் ஜெகான் பெரேரா, 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னரான ராஜபக்சக்களின் ஆட்சியைப் புனிதப்படுத்தும் வேலைத் திட்டங்களில் இறங்கியிருப்பது, அதுவும் புலிகளின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சித்துக் கொண்டு கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்தும் கருத்து வெளிப்பாடுகள் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பயங்கரவாத கோரிக்கையாகவே பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் அமைந்துள்ளன.

கடந்த நவம்பர் மாதம் சண்டே ஒப்சேவர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் நேர்காணல் வழங்கியிருந்த பேராசிரியர் றொகான் குணரட்ண விடுதலைப் புலிகளை ஐக்கிய நாடுகள் சபை தடை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை இலங்கை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

தாயகப் பிரதேசங்களில் ஆண்டுதோறும் இடம்பெறும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், சிவப்பு- மஞ்சள் கொடிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

தனது கேந்திர அரசியலுக்காகவும் இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கிலும் 1997 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா தடைவிதித்தது. அந்தத் தடை இன்றுவரை நீடிக்கிறது. இவ்வாறானதொரு நிலையில், அதுவும் கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் சூழலில், ஐ.நா. புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார் பயங்கரவாத நிபுணர்.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், 1996ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த தீர்வுப் பொதியை புலிகள் குழப்பியடித்தனர் என்றும் இல்லையேல் அன்றே இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்றும் ஜெகான் பெரேரா தனது வலைத்தள அறிக்கையில் செப்பியிருக்கிறார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளோடு இலங்கை உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கை மையம், தேசிய சமாதானப் பேரவை போன்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.

2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்ற போது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சமாதானப் பேச்சுக்கான முன்னோடியாகவும் தன்னைக் காண்பித்திருந்த மிலிந்த மொறாகொட, இன்று ராஜபக்சக்களின் விசுவாசியாகவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார்.

இந்த மிலிந்த மொறாகொடதான், இனப்பிரச்சனைத் தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபைகளையும் இரத்துச் செய்ய வேண்டுமெனவும் கடந்த ஆண்டில் ஆலோசனை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

அண்மையில் மிலிந்த மொறாகொடவின் ஏற்பாட்டில் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளேக் இந்து சமுத்திரப் பாதுகாப்புத் தொடர்பான இணைய வழிக் கலந்தாலோசனையின் ஓர் அமர்வை நெறிப்படுத்தியிருந்தார். கூடவே முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் பங்குபற்றியிருந்தார். இவர்களோடு தற்போதைய அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்ளிசும் கலந்துகொண்டார்.

இதேவேளை, ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கதாநாயகனான மைக் பொம்பியோ கொழும்பு வந்து உறவாடிச் சென்ற கதையும் அரங்கேறியிருந்தது.

2009 இற்கும் முன்னர் தங்களை மிதவாதிகளாகக் காண்பித்த சிங்களப் புத்திஜீவிகள் எனப்படுவோர் அன்று தீவிர பௌத்த தேசியவாதிகளாகக் காண்பித்தவர்களோடு இன்று சமரசம் செய்து, இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற ஒரே புள்ளியில் சங்கமித்துள்ளனர்.

2015 இல் யாருடைய ஆட்சியைக் கவிழ்த்தார்களோ, அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தைக் காப்பாற்றவே தற்போது இவர்கள் முற்படுகிறார்கள் என்று கூறினாலும் உண்மையில் அதையும் விட ஆழமாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும், இலங்கைப் படைகளையும் காப்பாற்றுவதிலேயே இந்தத் தன்னார்வ முகவர்கள் குறியாய் இருக்கிறார்கள் என்பது கண்கூடு

அமெரிக்க இராணுவத் தரப்புகளோடு நெருக்கமாகவும் கோட்டாபய ராஜபக்சவின் நீண்டகால ஆலோசகராகவும் செயற்பட்டு வந்த பேராசிரியர் றொகான் குணரட்ண தற்போது கொழும்பு ஊடகங்களூடாக பகிரங்கமாக வழங்கும் ஆலோசனைகளும், மிலிந்த மொறாகொட இந்தியாவுக்கான தூதுவராகவும் "ஐ.நா. புகழ்" பாலித கோகண்ண சீனாவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருப்பதும், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை சர்வதேச அரங்கில் முற்றாகவே இல்லாதொழிப்பதற்கான இலங்கையின் வேலைத் திட்டமாகும்.

இந்த வேலைத்திட்டத்தையே இலங்கையில் அடுத்து வரக்கூடிய சிங்கள ஆட்சியாளர்களும் கையாளுவர் என்பதை ஊகித்தவாறு ஜெகான் பெரேரா, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜனவரியில் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் நிர்வாகம், 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒபாமா நிர்வாகம் இலங்கை தொடர்பாகக் கையாண்ட அணுகுமுறைகளையே கையாள முற்படும் என்றும் நாம் அனுமானிக்கலாம்.

ஆகவே ஜோ பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஐ.நாவுக்குள் அடுத்த கட்டத்திற்கு இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணையை நகர்த்தும் என்று அளவுக்கு அதிகமாக நாம் எதிர்ப்பார்க்க முடியாது.

ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் தாய்குற்றமான இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும்.

இந்த அரசசார்பற்ற நிறுவன முகவர்களின் கதைகளுக்கு செவிசாய்க்கும் காலம் தமிழர்களைப் பொறுத்தவரை மலையேறிப்போய்விட்டது என்பதை தமிழ்த்தேசியக் கட்சிகள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னார்வ நிறுவனங்களின் தாளங்களுக்கு ஆடுபவர்களாக தமிழ் உரிமைச் செயற்பட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் இனிமேலும் இருக்கப்போவதில்லை என்ற செய்தி அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

தமிழர்கள் தமது கூட்டு உரிமைகளுக்கும் இன அழிப்புக்கான சர்வதேச நீதிக்கும் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கும் தேவையான அதி உச்ச நிலைப்பாடுகளை மட்டுமே சர்வதேச அரங்கில் ஒன்றினைந்து ஒரு முகமாக வலியுறுத்த வேண்டும்.