செய்தி: நிரல்
ஜூலை 24 23:02

நீதியரசர் உள்ளிட்ட அதிகாரிகளை ஐ.நா பிரதிநிதி சந்திக்கத் தடை - சபாநாயகர் உத்தரவு

(வவுனியா, ஈழம்) மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் நிபுணர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் (Clément Nyaletsossi Voule) இலங்கைக்கு பயணம் செய்துள்ளமை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜயசுந்தர ஜயசூரிய, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் நீதியமைச்சின் உயர் அதிகாரிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சாபாநாயகர் கரு ஜயசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் கொழும்புக்கு வருகை தந்தமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
ஜூலை 24 13:40

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

(வவுனியா, ஈழம்) இலங்கையோடு அமெரிக்கா "சோபா" எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு கொழும்பில் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் எதிர்ப்பு வெளியிடும் தரப்புகளைச் சந்தித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனால் அவரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புகளை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் சோபா உள்ளிட்ட சமகால அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஜூலை 23 14:56

சிற்றூழியர் நியமனங்களில் சிங்களப் பகுதிகளைவிட வடமாகாணத்துக்குப் புதிய விதிகள்

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளூராட்சி சபைகளுக்குரிய ஆட்சேர்ப்பு முறைகளில் வடமாகாணத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தி கிளிநொச்சி - கரைச்சிப் பிரதேச சபையின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரசேவை சிற்றூழியர் நியமனங்களில் கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் உள்ள நடைமுறைகள் வடமாகாணத்தில் பின்பற்றப்படவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். வடமாகாண அரச பொது ஊழியர் சங்கம் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்புத் தொடர்பாக கொழும்பில் உள்ள உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 23 13:07

தேவதாசன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்

(வவுனியா, ஈழம்) கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இன்று ஒன்பதாவது நாளாக நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்த 63 வயதான கனகசபை தேவதாசன் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலைக்குச் சென்று வழங்கிய உறுதிமொழியையடுத்து தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாக சக கைதிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இலங்கையில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
ஜூலை 22 23:21

ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் ஏழாம் திகதி- சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறுமென இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை மேலும் பிற்போடவோ அல்லது தனது பதவிக்காலம் தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டு காலத்தைத் தாமதிக்கவோ மைத்திரிபால சிறிசேன முற்படமாட்டாரெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பரிய கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த ஆண்டு முடிவடைவதற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வந்த இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்துள்ளது.
ஜூலை 21 21:21

பூநகரியில் சட்டவிரோத மண் அகழ்வு - பொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய மக்கள்

(கிளிநொச்சி. ஈழம்) கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மண் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதாக இலங்கைப் பொலிஸார் ஏலவே உறுதியளித்திருந்தனர். ஆனால் இதுவரையும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென மக்கள் கூறுகின்றனர். மண் அகழ்வை நிறுத்துமாறு வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூநகரி பொலிஸ் நிலையத்தில் மக்கள் ஒன்று கூடினர். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியே மக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
ஜூலை 21 15:26

கொல்லப்பட்ட இளைஞன் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவரல்ல- உறவினர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மானிப்பாய் இனுவில் வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக நேற்றுச் சனிக்கிழமை இரவு எட்டு மணி நாற்பது நிமிடமளவில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுக்கும் ஆயுதக்குழுவுக்கும் தொடர்பில்லையென உறவினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் கூறியுள்ளனர். யாழ் தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயதான செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞனே இலங்கைப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த இளைஞனை வழிமறித்தபோது நிற்காமல் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.
ஜூலை 20 01:54

மன்னாரில் ஓயாது தொடரும் இராணுவக் கெடுபிடி

(மன்னார், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இலங்கைத்த தீவு முழுவதிலும் இலங்கை முப்படையினர், இலங்கை விசேட அதிரடிப் படையினர். இலங்கைப் பொலிஸார் தொடர்ச்சியாக தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் கூடுதலாகக் காணப்படுகின்றன.
ஜூலை 19 23:39

உண்ணாவிரதமிருக்கும் தேவதாசனின் உடல் நிலை ஆபத்தில்

(வவுனியா, ஈழம்) கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 63 வயதான கனகசபை தேவதாசனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அருட் தந்தை சக்திவேல் கூறியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம், உடனடியாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டுமெனவும் சக்திவேல் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமில்லையெனவும் உடனடியாக அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளதாக சக்திவேல் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
ஜூலை 18 23:44

தேர்தல்கள் நெருங்கும்வேளையில் மீண்டும் அரசியல் யாப்புத் திருத்தங்கள் பற்றிய பேச்சுக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் மீண்டும் புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பேச்சுக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இது குறித்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சம்பந்தன் பேசியிருந்தார். முதல்கட்டமாக இலங்கை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து விவாதம் நடத்துமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது குறித்து சம்பந்தன் உரையாடியுள்ளார்.