நிரல்
நவ. 12 12:07

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பத்து மனுத்தாக்கல் - அவசர வழக்காக எடுத்து விசாரிக்க தீர்மானம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உள்ளிட்ட 10 மனுக்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை இன்றைய தினம் அவசர மனுக்களாக எடுத்து விசாரிப்பதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இதனைப் பரிசீலிக்கவுள்ளது. வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவ. 11 23:55

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்ய சதி? தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் பொறுப்புகள்

இலங்கையின் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பொறுப்புகள் அனைத்தையும் இலங்கைத் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேராவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு ரெலிகிராவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது என சகல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர். நடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானதா இல்லையா என்பது குறித்து இலங்கை உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவு மஹிந்த தேசப்பிரியவும் கூறியிருந்தார்.
நவ. 11 15:10

பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றார் மஹிந்த ராஜபக்ச - 45 பேர் இணைவு

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்த மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராகவும் செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுன கட்சியில் அவர் இணைந்துள்ளார். கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் முன்னிலையில் உறுப்புரிமையை மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டுள்ளார். நேற்றுச் சனிக்கிழமை அவரது மகன் நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றிருந்தார்.
நவ. 11 06:37

நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் சாவகச்சேரியில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுத் தூபி முன்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் அஞ்சலி வணக்கம் நடைபெற்றது. நடராசா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிய ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
நவ. 10 17:58

தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை? அறிவிப்புக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய கட்சிகள் ஏற்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரிபால சிறிசேன இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்ததால் ஐக்கியதேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மனித உரிமைச் சட்டத்தரணிகளும் இலங்கை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானால், அடுத்த நாளே தேர்தலில் போட்டியிடுவதற்கான முனைப்புகளில் அனைத்துக் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தீவிரமாக ஈடுபடுவது வழமை. ஆனால் மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் எடுத்த திடீர் முடிவுகளினால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சட்டரீதியான நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.
நவ. 10 08:08

ஆனந்தபுரம், இரத்தினபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளம் - வீடுகள் சீரின்மையால் மக்கள் நெருக்கடி

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் போர் நிறைவடைந்து ஆட்சி மாற்றம் இடம்பெறுகின்ற போதிலும் போரினால் பாதிக்கப்பட்ட தாம் தொடர்ந்தும் இன்னல்களையே அனுபவித்து வருவதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக ஆனந்தபுரம் மற்றும் இரத்தினபுரம் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் குழந்தைகள் உட்பட முதியவர்கள் வரை பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
நவ. 10 00:55

நாடாளுமன்றக் கலைப்பு சரியா, பிழையா- உயர் நீதிமன்றத்தின் கருத்தை சுயாதீனத் தேர்தகள் ஆணைக்குழு அறியவுள்ளது

(மன்னார், ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவானதா என்பது குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்ச தரப்பு பொரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை அரச வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளமை அரசியல் யாப்பு விதிகளை மீறும் செயல் என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது.
நவ. 09 22:17

பொதுத் தேர்தல் 5 ஆம் திகதி- அடுத்த நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 17 ஆம் திகதி

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகமான AFP செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அதனையடுத்தே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. எனினும் இலங்கை அரச ஊடகங்கள் உட்பட ஏனைய உள்ளுர் ஊடகங்களும் இதனை நள்ளிரவு 11 மணிவரை உறுதிப்படுத்தி எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இன்றைய தினம் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நவ. 09 21:21

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறித்துள்ளது

(வவுனியா, ஈழம்) இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய சீரற்ற கால நிலை நாளை மறுதினம் 11 ஆம் திகதி வரை நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட அமுக்கம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் தென்மேற்குக் கடற்பரப்புகளில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
நவ. 09 21:08

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஆதரிக்க மாட்டோம் என்கிறார் மனோகணேசன்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய அரசாங்கத்தை எதிர்ப்பதுடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார். ஹட்டன் கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்கால அரசியல் மாற்றம் தொடர்பான கொள்கை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.