நிரல்
பெப். 10 13:55

ஜே.வி.பியின் ஸ்தாபக உறுப்பினர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர அரசியலில் ஈடுபடவுள்ளார்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக, 1971, 1987- 88 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட ஜனதா விமுக்திப் பெரமுன என்று சிங்களத்தில் அழைக்கப்படும் ஜே.வி.பி யின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர அரசியலில் ஈடுபடவுள்ளார். அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான தற்போதைய ஜே.வி.பி ரோஹன விஜேவீரவின் குடும்பத்துடன் முரண்பட்டுள்ளது. இந்த நிலையில் உவிந்து விஜேவீர புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளையும், தனது தந்தையின் சோசலிசக் கொள்கையையும் பின்பற்றவுள்ளதாகக் கூறியுள்ளார். ரஷியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட உவிந்து விஜேவீர. சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.
பெப். 09 23:43

கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து இலங்கைப் படையினர் வெளியேற வேண்டும்- முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து இலங்கைப் படையினர் உடனடியாக வெளியேறவேண்டுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைப் படையினர் போரின்போது பலாத்காரமாக அபகரித்த காணிகளை பொதுமக்களிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும். மக்களிடம் காணி உறுதிப் பத்திரம் இல்லை என்று கூறித் தட்டிக் கழிப்பதற்கு படையினருக்கு உரிமை இல்லையெனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். கேப்பாப்பிலவு பிரதேசத்தில் 709 ஆவது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் விக்னேஸ்வரன், இன்று சனிக்கிழமை உதவிகளையும் உலர் உணவுப் பொருட்களையும் வழங்கினார். மக்களுடனும் கலந்துரையாடினார்.
பெப். 09 23:10

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்கள் அமைதிப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) போரின் போதும் போரின் பின்னரான காலத்திலும் இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள தங்களது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் அமைதிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இலங்கை அரசாங்கம் பதில் கூற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கறுப்புத் துணியால் வாயைக் கட்டியும் விளக்கேற்றியும் தமது உறவுகளைத் தேடி போராட்டத்தை முன்னெடுத்தார்கள். சமூக வலைத்தளங்களின் நண்பர்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெப். 09 14:55

மைத்திரி, மகிந்த இணைந்து உருவாக்கவுள்ள புதிய அரசியல் அணிக்கு சந்திரிக்கா கடும் எதிர்ப்பு

(வவுனியா, ஈழம் ) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோடு இணைந்து பாரிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினருமான சந்திரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மகிந்த ராஜபக்சவின் குடும்பக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் அடகு வைக்க முடியாதென்றும் சந்திரிக்கா கூறியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திரிக்கா பேசியுள்ளார்.
பெப். 08 11:23

மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலத்தில் காட்டுயானைகள் அட்டகாசம்- வீட்டுத் தோட்டங்கள் பயிர்கள் நாசம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலத்தில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாகவுள்ளது. தற்போது பெரும்பொக நெல் அறுவடை செய்யும் காலத்தில் காட்டுயானைகளின் வரவு அதிகமாகவுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிவுக்குட்ட ஆயித்தியமலை, உன்னிச்சை பட்டிப்பளை பிரதேச செயலகபிரிவு தாந்தாமலை குழுவினமடு வெல்லாவெளி பிரதேச செயலகபிரிவு களுமுந்தன் வெளி விவேகானந்தபுரம் 39,ம் கிராமங்கள் போன்ற பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களுக்குள் தினமும் உட்புகும் காட்டு யானைகளால் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெப். 08 10:47

அமெரிக்காவின் படைத்தளம்- சிங்கள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டாலும் மறைமுக ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழ்பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் அமெரிக்கா படைத் தளங்களை அமைத்து வருவதாக கொழும்பை மையப்படுத்திய இலங்கை எதிர்க்கட்சிகளினால் குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக ஜே.வி.பி.உறுப்பினர் பிமல் ரட்ணநாயக்கா கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப்படுவது வழமை என்று கூறினார்.
பெப். 08 10:05

தீர்வை மகிந்த ராஜபக்ச முன்வைக்கவில்லை- பேச்சைக் குழப்பி இனவாதமாகப் பேசியதாகக் கூறுகின்றார் சம்பந்தன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த திர்வுத் திட்ட்த்திற்குப் பயந்தே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசசையில் இருந்து விலகியதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து பல சுற்றுப் பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியிருந்தது. மிகவும் நேர்மையாகவும் நிதானத்தோடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்தையில் கலந்துகொண்டது. ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பான தமது விதப்புரைகளுக்கு பதில் கூறத் தயங்கியது என்றும் சம்பந்தன் கூறினார்.
பெப். 07 00:16

மைத்திரி-ரணில் மோதல் மீண்டும் ஆரம்பம்- மாகந்துர மதுஷ் கைது விவகாரத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன மாகாண சபைத் தேர்தல்கள் விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க தன்னைச் சீண்டிப்பார்ப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது என அமைச்சரவைக் கூட்டத்தில் தான் கேட்டதாகவும் ஆனால் ரணில் விக்கிரமசிங்க இழுத்தடிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன ஆவேசமாகக் கூறியுள்ளார்.
பெப். 06 09:55

நவீன மருத்துவ வசதிகள் இருந்தும் வைத்தியர் இன்மையால் நெருக்கடி - நட்டாங்கண்டல் மக்கள் விசனம்

(வவுனியா, ஈழம்) நவீன மருத்துவ வசதிகள் இல்லாதிருந்த காலத்தில் திலீபன் மருத்துவமனைகளின் ஊடாக சிறப்பான சேவைகள் கிடைத்த போதிலும், தற்போது அதி நவீன வசதிகள் இருந்தும் வைத்தியர் இன்மையால் தாம் பெரிதும் நெருக்கடிக்கு ஆளாகுவதாகவும் தமது பிரதேச வைத்தியசாலையில் 24 மணிநேரமும் தங்கியிருந்து சேவையாற்றக்கூடிய வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறும் முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெப். 06 09:21

புலிகளின் காலத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்ட காடுகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அழிக்கப்படுகின்றன

(முல்லைத்தீவு, ஈழம்) இன அழிப்பு போரின் பின்னரான காலப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசத்தில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கொழும்பில் உள்ள இலங்கை அரச உயர் அதிகாரிகள் அனுமதியை வழங்கி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். அத்துடன் சில அமைச்சர்களும் தன்னிச்சையாகச் செயற்பட்டு காடுகளை அழித்து தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மண் அகழ்வு செய்வதற்கான அனுமதியை வழங்கி வருகின்றனர்.