நிரல்
செப். 20 23:29

கேப்பாப்புலவு மக்களுக்குத் தொழிலில்லை- காணிகளைக் கையளிப்பது குறித்து உரையாடல்

(கிளிநொச்சி. ஈழம்) முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவுப் பிரதேச மக்களின் ஐம்பத்தி ஒன்பது தசம் ஐந்து ஏக்கர் காணியை மீண்டும் பொதுமக்களிடம் கையளிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல், இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு துணுக்காய்ப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளைக் கையளிப்பது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடல் ஆராயப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. வளமுள்ள காணிகளைப் படையினர் தம்வசப்படுத்தியுள்ளதால் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்குக் கஷ்டப்படுவதாக மக்கள் கூறியுள்ளனர்.
செப். 20 15:35

ஆயுதங்கள், ஆவணங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வுப் பணிகள்

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாணத்தில் இலங்கைப் படையினர் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மேற்கொண்டு வரும் அகழ்வு நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் உள்ள பழைய இரும்புக்கடை ஒன்றில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி நேற்று வியாழக்கிழமை அகழ்வுப் பணியொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சிவபுரம் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பெறுமதியான பொருட்கள், ஆவணங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இலங்கைக் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகப் பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
செப். 19 19:38

வாகரைக் கடலில் வெளி மாவட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்பகுதியில் இலங்கை விசேட அதிரடிப்படையின் உதவியோடு இலங்கையின் வெளி மாட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கதிரவெளி மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் கூர்மைச் செய்தித் தளத்திடம் தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளதாகவும் ஆனாலும் உடனடியாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செப். 19 17:41

நிறைவேற்று அதிகாரமுடைய ஆட்சியை ஒழிப்பதற்கு முயற்சி- சஜித் அணி எதிர்ப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அமைச்சர்கள் பலர் எதிர்ப்பு வெளியிட்டதுடன் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியாதென்றும் தேர்தல் முடிவடைந்ததும் அது குறித்து ஆராயலாமெனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.
செப். 18 23:13

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 -அரச வர்த்தமானி வெளியானது

(வவுனியா, ஈழம்) இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இலங்கை ஒற்றையாட்சி அரசின் வர்த்தமானி அறிவித்தல் இன்று புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென அந்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி இதழ் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்று இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று இரவு கொழும்பில் ஊடகங்களுக்கு அறிவித்தார். வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் ஒக்ரோபர் மாதம் ஏழாம் திகதி காலை 9 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாமெனவும் அவர் கூறினார்.
செப். 18 17:16

புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை, பொலிஸார் தேடுதல்

(முல்லைத்தீவு, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், முகாம்களை மூட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் அவ்வப்போது தேடுதல் சோதளை நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியே இலங்கைப் பொலிஸார் தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமாரிடம் அனுமதி பெற்ற பொலிஸார் விற்பனை நிலையத்துக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு ஆயுதங்கள் எதுவும் இருந்ததாகக் கூறப்படவில்லை.
செப். 17 22:41

ரணில் சம்பந்தன் சந்திப்பு- சஜித் பிரேமதாச மீது அதிருபதி

(யாழ்ப்பாணம், ஈழம்) சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால் ஆதரவு வழங்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பத்தரமுல்லயில் உள்ள இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சஜித் பிரேமதாசவிடம் தெளிவான நிலைப்பாடு இல்லையென்றும் இதனால் அவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பாதென்றும் சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
செப். 17 17:55

ரணில் வேட்பாளர்! ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இழுபறி

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை முடிவு செய்யவில்லையெனக் கூறினாலும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். கட்சியின் மூத்த உறுப்பினர் சபாநாயகர் கரு ஜயசூரியவை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் யோசனைகளை முன்வைத்த போதும் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவரென கட்சியின் வேறு மூத்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளரெனக் கட்சி உறுப்பினர்கள் சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.
செப். 16 23:18

இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் 2009 வரை இனப்படுகொலை நடந்தது- விக்னேஸ்வரன்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடந்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் எழுக தமிழ் நிகழ்வில் உரையாற்றும்போது கூறியுள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் உரையாற்றிய அவர் இனப்படுகொலை என்பது கலாச்சாரம், பண்பாடு, காணிகளை அபகரித்தல் பேன்றவற்றையும் உள்ளடக்கியதென்றும் கூறினார். ஈழத் தமிழர்களின் அவலங்களையும் அழிவுகளையும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக் கூறவே இந்த எழுக தமிழ் நடத்தப்படுகின்றது.
செப். 16 15:11

சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வைத்தியக் கலாநிதி லக்ஸ்மன் ஆகியோரின் இணைத் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை நடத்திய மூன்றாவது எழுக தமிழ் நிகழ்வில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகி யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளித் திடலை நண்பகல் 12.30 அளவில் சென்றடைந்தது.