செய்தி: நிரல்
ஒக். 28 12:55

சவேந்திர சில்வா தொடர்ந்தும் இலங்கை இராணுவத் தளபதி- சஜித் பிரேமதாச

(வவுனியா, ஈழம்) எவ்வாறான சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டாலும் இலங்கையின் இராணுவத் தளபதியாக பெல்ரினட் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்ந்தும் பதவி வகிப்பாரென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நிவத்திகலப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் சவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பார் என்றும் புதிய தளபதி நியமிக்கப்படமாட்டாரெனவும் சஜித் பிரேமதாச அங்கு கூறினார்.
ஒக். 27 23:21

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைக்க முயற்சி- சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு இலட்சம் இலங்கை அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த இரண்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதியும் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.பி.ஜயசிங்க தெரிவித்தார். வாக்கெண்ணும் பணிகளில் மாத்திரம் நாற்பத்து எட்டாயிரம் பேர் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களுக்கான நலன்புரிச் செயற்பாடுகளில் பத்தாயிரம்பேர் ஈடுபடவுள்ளதாகவும் ஜயசிங்க கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேவை ஏற்படின் மேலதிகப் பணிகளுக்கான மேலும் அரச ஊழியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் கூறினார்.
ஒக். 26 04:17

கட்டுமுறிவுக்குளம் பாடசாலையில் வளங்கள் இல்லை- அதிபர்

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்பில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கைச் சிங்கள ஆட்சியாளர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முன்னேற்றுவற்கு எடுத்த நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று அதிபர்கள், ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நகர்ப்புற பாடசாலைகளில் மாத்திரமே மேலும் மேலும் வளங்களை குவி்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசச் செயலகப் பிரிவு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட, போர்க்காலத்தில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்டுமுறிவுக் குளம் அ.தக.பாடசாலையில் எந்த வளங்களுமே இல்லையென அதிபர் நாகேந்திரன் கூர்மைச் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
ஒக். 25 21:33

புதுக்குடியிருப்பில் நீதிமன்ற அனுமதியோடு மனித எச்சங்கள் மீட்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் மனிதப்புதை குழிகள் ஆங்காங்கே தென்பட்டு வருகின்றன. மன்னார், நகர நுழைவாசலிலும் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகிலும் யாழ் கல்வியங்காடு செம்மணிப் பகுதியிலும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. ஆனாலும் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறாமையினால் மனிதப் புதைகுழி விவகாரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில் மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.
ஒக். 24 23:15

யாருக்கு வாக்களிப்பது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் அறிவிக்குமாம்- சுமந்திரன்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிப்பதென பதின்மூன்று அம்சக் கோரிக்கை அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிட்ட ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் கொழும்பில் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் ஆனாலும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே தமது ஆதரவென தமிழ்க் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே கூறியபோதும், வேட்பாளர்களின் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப ஆவணத்தில் சில மாற்றங்களைச் செய்வது குறித்தும் ஆராயப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஒக். 24 18:42

ஈழத் தமிழர் இறைமையை நிலைநிறுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும்- ஆய்வாளர் ஜோதிலிங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எப்படியான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு இடர்கள், தடைகளை எதிர்கொண்ட சிவில் சமூக அமைப்புகள், தற்போது சுயமாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஒரு குறீயீடாக மாத்திரமே கருதி அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகின்றன. ஈழத் தமிழர்களின் தேசம், இறைமை என்பதைக் கருத்திலெடுத்து ஒரு குறியீடாக மாத்திரமே எண்ணிச் சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் முன்கொண்டு செல்லவும் சிவில் சமூக அமைப்புகள் பரிசீலித்து வருகின்றன.
ஒக். 24 16:17

வட்டக்கச்சிப் பிரதேசத்தில் இலங்கை விசேட அதிரடிப்படை தேடுதல்

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படையினர், தேடுதல், சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வடமாகாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் இராணுவத்தினர் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் ஆயுதங்கள் எதுவுமே கண்டெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று வியாழக்கிழமை இலங்கை விசேட அதிரடிப்படையினரால் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.. கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
ஒக். 23 22:38

“இரகசிய” இராணுவ முகாம்களைக் கண்டுபிடிக்கவும்- உறவினர்கள் சர்வதேசத்திடம் கோரிக்கை

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் பெற்றோர் உறவினர்கள், சர்வதேச சமூகத்தை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் உள்ள இரகசிய இராணுவ முகாம்களைக் கண்டுபிடித்துத் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து நேரடியாக இரகசிய இராணுவ முகாம்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுள்ளனர். கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் உறவினர்கள் இவ்வாறு கூறினர்.
ஒக். 23 15:33

கொழும்பில் பதினொரு தமிழர்கள் கடத்திக் கொலை- சாட்சிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்

(வவுனியா, ஈழம்) கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் தொடர்பான சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு எற்பாடுகளைச் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு 11 தமிழர்களும் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். கடத்திச் செல்லப்பட்ட வான் ஒன்று திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த வானையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.
ஒக். 22 23:15

மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கௌதாரிமுனைக் கிராமம்- பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்கள் நிறைந்த கௌதாரிமுனைக் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை அதிக மண் வளம் நிறைந்த பகுதியாகவும். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்விகக் கிராமமாக கௌதாரிமுனை காணப்படுகின்றது. ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்த இந்தக் கிராமத்தில் தற்போது நூற்றி முப்பத்து ஐந்து குடும்பங்கள் மாத்திரமே வாழ்கின்றன. போர் காரணமாக மக்கள் பலர் இடம்பெயர்ந்து சென்றதாகவும் தற்போது குறைந்தளவு வசதிகளோடு சில குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.