செய்தி: நிரல்
ஜூலை 02 21:44

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பதினைந்து இலட்சம் குழந்தைகளின் மருத்துவ கிளினிக் முடக்கம்

(கிளிநொச்சி, ஈழம்) பொருளாதார நெருக்கடி, எரிபொருட் தட்டுப்பாடுகள் காரணமாக, மருந்துகள், மருத்துவ உபகரண பற்றாக்குறை மற்றும் போசாக்கான உணவு வகைகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக இலங்கைத்தீவில் சுமார் அறுபது இலட்சம் பேர் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் போசாக்குப் பிரச்சினைகள் போன்றவற்றால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சுமார் பதினையாயிரம் இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூலை 01 22:58

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

(வவுனியா, ஈழம்) இறுதிப் போரில் இலங்கைப் படையினாிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் பதினைந்தாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூத்த சட்டத்தரணி இரட்ணவேல் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் மீண்டும் திகதி இடப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆட்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருந்த போதிலும் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்றவை காரணமாக இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறினார்.
ஜூன் 29 23:23

நான்கு கப்பல்களில் எரிபொருட்களை உடனடியாக அனுப்ப இந்தியா ஏற்பாடு, மிலிந்த - பூரி டில்லியில் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) எரிபொருட்களைப் பெறுவதற்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரசியாவுக்கும், அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கும் சென்றுள்ள நிலையில், இரண்டு டீசல் கப்பல்களும், இரண்டு பெட்ரோல் கப்பல்களையும் இந்தியா உடனடியாக அனுப்பவுள்ளது. ஜூலை மாத ஆரம்பத்தில் இந்த எரிபொருட் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருமென கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இந்திய பெற்றோலிய இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியைத் திங்கட்கிழமை புதுடில்லியில் சந்தித்துள்ளார்.
ஜூன் 29 21:16

கொழும்பில் நாளை போராட்டம்- சஜித் அணி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எரிபொருட்களுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் அனைத்து மக்களையும் வீதிக்கு இறங்கிப் போராடுமாறு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை வியாழக்கிழமை பிற்பகல் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை முற்பகல் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் அணிதிரளுமாறு கேட்டுள்ளார்.
ஜூன் 27 23:42

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருட்கள் கையிருப்பு

(வவுனியா, ஈழம்) அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருட்கள் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாளை முதல் யூலை மாதம் பத்தாம் திகதி வரை, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறும் அமைச்சர் கேட்டுள்ளார். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.