செய்தி: நிரல்
ஜூன் 26 23:01

எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய ரசியாவுடன் பேச்சு- இரு அமைச்சர்கள் பயணம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் எரிபொருட்கள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரசியாவிடம் இருந்து குறைந்தவிலையில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தில் இருந்து முரண்பட்டுத் தனித்து இயங்கும் ஒன்பது சிறிய கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கையை முன் வைத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ரசியாவிடம் இருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், அரசாங்கத்தின் சார்பில் இரண்டு அமைச்சர்கள் ரசியாவுக்குச் சென்று கலந்துரையாடவுள்ளதாக எரிபொருள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
ஜூன் 24 23:23

எரிபொருட் கப்பல் மேலும் தாமதம்- மன்னிப்புக் கேட்டார் அமைச்சர்

(வவுனியா, ஈழம்) எரிபொருட்களை ஏற்றிவரும் கப்பல் மேலும் தாமதமடைவதால், எரிபொருள் விநியோகம் மேலும் சில நாட்கள் தள்ளிப்போகுமென அமைச்சர் கஞ்சன விஜேரட்ன தெரிவித்துள்ளார். இதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் அவர் கூறினார். எரிபொருட்கள் இல்லாமையினால் கொழும்பில் இந்தவாரம் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. வெளி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பாடசாலைகள், அரச நிறுவனங்கள் செயற்பட்டு வந்தன.
ஜூன் 23 21:33

இந்திய உயர்மட்டத் தூதுக்குழு கோட்டா, ரணில் ஆகியோருடன் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கு கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா, இந்திய பிரதான பொருளாதார ஆலோசகர் வீ. ஆனந்த் நாகேஸ்வரன் மற்றும் இந்திய பொருளாதார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தனர்.
ஜூன் 22 21:42

பாரிய பொருளாதார நெருக்கடி- ரணில் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஜூலை மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கினாலும் அந்த உதவிகள் போதுமானதல்ல. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்தி நெருக்கடியைச் சமாளிப்பதே இலங்கைக்குத் தற்போதுள்ள ஒரேயொரு வழி என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஜூன் 21 22:04

மாகாணங்கள் சமஸ்டி ஆட்சியைக் கோரும் நிலை உருவாகுமென்கிறார் சரத் வீரசேகரா

(வவுனியா, ஈழம்) பௌத்த சிங்களவர்கள் இலங்கையின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியேறுவார்களென்று முன்னாள் இராணுவ உயர் அதிகாரியும், முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் இருந்ததாலேயே அங்கு புத்த விகாரை அமைக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் குண்டர்களைப் பயன்படுத்தி அதனைத் தடுப்பதாகவும் கூறினார்.