(வவுனியா, ஈழம்)
2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கைத்தீவு ஒற்றையாட்சி அரசு என்பதை மேலும் உறுதிப்படுத்தும் சிங்களத் தலைவர்களின் அரசியல் வேலைத் திட்டங்கள் தற்போது, கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முழுமையடைந்து வருகின்றன. அமெரிக்க, இந்திய மற்றும் சீன அரசுகள் தமக்கிடையே ஏட்டிக்குப்போட்டியான காரியங்களில் ஈடுபட்டாலும் இலங்கை ஒற்றையாட்சி என்பதை ஏற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சென்ற ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போதும் பகிரங்கமாகப் பெருமையோடு கூறியிருந்தார். 2021 இல் கண்டியில் ஞானசார தேரர், இலங்கை பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தபோது, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமே அதனைக் கண்டித்திருந்தார்.