நிரல்
செப். 19 01:42

தமிழகம் உடன்குடியில் கடல்வழி முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர்கள்

(சென்னை, தமிழ்நாடு) தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் அருகே உள்ள உடன்குடி கல்லாமொழியில், கட்டப்படும் அனல்மின்நிலைய திட்டத்தை கைவிடக்கோரியும் கப்பல்களில் கொண்டு வரப்படும் நிலக்கரி பொதிகளை இறக்குவதற்கு வசதியாக, கல்லாமொழி கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்த நீளத்திற்கு கட்டப்படும் பாலம் மற்றும் இறங்குதளம் பணியை நிறுத்திடவும் வலியுறுத்தி, 17.09.2018 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், தூத்துக்குடி கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த திரேஸ்பரம், கால்லாமொழி, ஆலந்தலை, மணப்பாடு உட்பட்ட 26 கிராமங்களைச் சோ்ந்த மீனவர்கள், 380-திற்கும் அதிகமான படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடல் வழியாக இறங்குதளம் கட்டப்படும் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர்.
செப். 18 22:26

தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, ஓலைத்தொடுவாய் பிரதேசங்களில் காணிகள் சுவீகரிப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி மற்றும் ஓலைத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் சுவீகரித்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பாரிய காற்றாலை ஒன்றினை நிறுவுவதற்காகவே இந்தக் காணி சுவிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காற்று மின்னாலை நிர்மாண வேலைகளுக்காக இதுவரை மன்னார் மாவட்ட மக்களிடமிருந்து 300 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் அனைத்தும் தாழ்வுபாடு தொடக்கம் ஓலைத்தொடுவாய் வரை கடற்கரைய அண்டியுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளாகும்.
செப். 18 18:51

சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம்

(மட்டக்களப்பு, ஈழம்) இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட ‘அடிப்படைச் சட்டம்’ (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு முன்னுரிமையும் தனித்துவமும் பேணப்படல் வேண்டும் என்பதே இதன் உட்கிடக்கை என்பதைக் காண்க. ஆக, இஸ்ரேல் கொண்டுவரும் இப்பரிமாணத்தின் சர்வதேச வியூகம் தான் என்ன?
செப். 18 14:10

பருத்தித்துறைக் கடலில் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள்- மடக்கிப் பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வடமராட்சி கடற் பிரதேசத்தில் அத்துமீறிச் சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட முற்பட்ட சிங்கள மீனவர்கள் எட்டுப்பேரை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிப் பிடித்து தடுத்து வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது. வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நேற்றுத் திங்கட்கிழமை இரவு நுழைந்தபோதே பருத்தித்துறை மீனவர்கள் எட்டுப் பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து பருத்தித்துறையில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. எட்டு சிங்கள மீனவர்களையும் மீட்பதற்காக பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல்வள அதிகாரிகள் ஆகியோர் வடமராட்சி மீனவர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனாலும் எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
செப். 18 10:14

சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்- பொது அமைப்புகள் கண்டனம்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் அனுராதபுரம் உள்ளிட்ட தென்பகுதி மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கொழும்பில் உள்ள மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது குறித்து பரிசீலிக்க விரும்பவில்லை என அருட்தந்தை சத்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கொழும்பில் உள்ள சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
செப். 17 22:54

சென்னையில் திரையிடப்பட்டது தென்கொரிய மொழிப் படம் பண்டோரா !

(சென்னை, தமிழ்நாடு) அணு உலையின் கொடிய முகத்தைப் பற்றியும் அதன் அரசியலையும் எடுத்துச்சொன்ன தென்கொரிய திரைப்படம் 'பண்டோரா - Pandora' , சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜா அவர்களின் திரையரங்கில் சிறப்புக்காட்சியாக 15.09.2018 அன்று திரையிடப்பட்டு பொதுவெளி விவாத நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. “தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு உரிமைசார் போராட்டங்களுக்கான அறவழி பெருந்திரள் மக்கள் வடிவத்தை உருவாக்கியதில் கூடங்குளப் போராட்டத்திற்கென தனி பங்குண்டு” எனவும் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் அப்போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாக” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அணுசக்திக்கெதிரான மாணவ அமைப்பினர் தெரிவித்தனர்.
செப். 17 19:53

கிண்ணையடி கிராமத்தினுடாகச் செல்லும் ஆற்றைக் கடக்க சிறிய தோணியில் ஆபத்தான பயணம்- மக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்தினுடாகச் செல்லும் ஆற்றைக் கடக்க ஆபத்துமிக்க சிறிய தோணியி்ல் பயணம் செய்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் பாலம் ஒன்றை அமைத்துத் தருவாதாகக் கூறியபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கிண்ணையடி கிராமத்தைச் சேர்ந்த சே.நாகேந்திரன் கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் உயிரைப்பணயம் வைத்து சிறிய தோணியில் நீ்ண்டகாலமாக பயணம் செய்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாராவெளி, முறுக்கதீவு, பிரம்படித்தீவு, போன்ற கிராமங்களில் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் உண்டு. அங்கு செய்கை பண்ண, ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் பாதையை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
செப். 17 15:07

முல்லைத்தீவுக் கடலில் சட்டவிரோத மீன்பிடிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி- மீனவர்கள் குற்றச்சாட்டு

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்ட கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்கு தடை செய்யப்பட்ட சுருக்குவலையைத் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கறுப்புத் துணிகளினால் தமது வாய்களைக் கட்டி முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினர். இன்று திங்கட்கிழமை காலை போராட்டம் ஆரம்பமானது. சட்டவிரோத மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா கடந்த மாதம் முல்லைத்தீவுக்கு நேரில்ச் சென்று மீனவர்களிடம் உறுதியளித்திருந்தார்.
செப். 17 00:01

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார்? மஹிந்த கூறுவது என்ன?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின பொதுவேட்பாளராக கோட்டபய ராஜபக்ச நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். தனது சகோதரர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என மஹிந்த ராஜபக்ச இநதியாவில் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலும் கூறியிருந்தார். பின்னர் தனது கருத்தில் மாற்றம் இல்லை என்ற தொனியில் அவர் கொழும்பிலும் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
செப். 15 22:13

மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத்தில் இலங்கைக் கடற்படை நிரந்தர கட்டடங்களை அமைப்பதாக முறைப்பாடு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட முள்ளிக்குளம் தமிழ் கிராமத்தை ஆக்கிரமித்து தளம் அமைத்துள்ள இலங்கை கடற்படையினர் அங்கு நிரந்தர கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றனர். 2007 ஆம் ஆண்டு மன்னார் சிலாவத்துறையை இலங்கைப் படையினர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் இலங்கை இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் முள்ளிக்குளம் கிராமம் முற்றுமுழுதாக இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் இலங்கைக் கடற்படையினர் இங்கு பாரிய கடற்படைத்தளம் ஒன்றை அமைத்தனர். இலங்கையின் வடமேற்கு கடற்பிராந்தியத்தின் கட்டளைத் தலைமையகத்தையும் முள்ளிக்குளம் கிராமத்தில் நிறுவிக் கொண்டனர்.