கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜன. 21 10:39

டில்லி கொழும்பைக் கையாளுகின்றதா, கொழும்பு டில்லியை ஏமாற்றுகின்றதா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தொடர்ச்சியாகக் காணப்படும் முரண்பாடுகள், பிரிந்து நின்று அமெரிக்க இந்திய அரசுகளின் தந்திரோபாயங்களுக்கு உட்படுதல், மற்றும் கொழும்பில் சிங்கள ஆட்சியாளர்களுடனான தனிப்பட்ட உறவுகள் போன்ற நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகளை இந்திய - இலங்கை அரசுகள் கன கச்சிதமாகக் கையாண்டு வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டுடன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் புதுடில்லியில் பதவி வகிக்கும் மிலிந்த மொறகொட அதற்குரிய அரசியல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பதின்மூன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜெய்சங்கர் பரிந்துரைத்திருப்பது வேடிக்கை.
டிச. 23 22:28

அமெரிக்க வியூகம்- ரசிய இந்திய உறவில் தாக்கம் செலுத்துமா?

சீனாவுக்கு சார்பான பிறிக்ஸ் மற்றும் சங்காய் ஒத்துழைப்பு மையம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் இந்தியா, தற்போது அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டுடனும் இந்தியா இயங்குகின்றது. குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக்கின்றது. ஆனால் தற்போது பிரச்சினை என்னவென்றால், ஒரு நிலைப்பாட்டோடு செயற்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் கடுமையான வேண்டுகோள். இந்தியாவைத் தமது தெற்காசிய நகா்வுக்குள் கொண்டுவரும் நோக்கிலேயே தற்போது பாகிஸ்தானுடன் பைடன் நிர்வாகம் நெருங்கிய உறவை ஆரம்பித்திருக்கிறது.
டிச. 11 15:00

அதிகாரப் பங்கீடின்றி முதலீடுகள் சாத்தியமில்லை என்பதை உலகத்துக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றனர்.  அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்பச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களைச் சிறிய தீவான இலங்கை ரத்துச் செய்யும் சூழலில், எந்தவிதமான அரசியல் அதிகாரங்கள் - பாதுகாப்புகள் இல்லாத புலம்பெயர் தமிழர்கள் எந்த நம்பிக்கையோடு இலங்கையில் முதலிட முடியும் என்ற கேள்விகள் நியாயமானவை.
நவ. 27 12:13

தேசமாகச் சிந்திக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் - ரணில் கையாளும் நகர்வு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் கொள்கையைத் தற்போது ரணில் விக்கிரமசிங்க கையாளுகிறார் என்பதைவிட, சிங்கள ஆட்சியாளர்களின் கொள்கைதான் அது என்பதை ஜே.வி.பி நிரூபித்து வருகிறது. சென்ற புதன்கிழமை கொழும்பில் ஜே.வி.பி தமிழ் மக்களுடன் நடத்திய சந்திப்பில் அது வெளிப்பட்டுள்ளது. இது பௌத்த சிங்கள நாடு என்பதுதான் ஜே.வி.பியின் கொள்கை. அதன் உறுப்பினர்களுடைய நாடாளுமன்ற உரைகளில் இருந்து இக் கொள்கை ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்திப்பின் மூலம் மேலும் அது பட்டவர்த்தனமாகியுள்ளது.
நவ. 16 09:36

இந்தியா ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதை நுட்பமாகக் கையாளும் சிங்கள ஆட்சியாளர்கள்

(முல்லைத்தீவு) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை அறவழியில் தொடர்ந்து முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைக்குச் சென்றிருந்தது. ஆனால் அதனை ஒழுங்குமுறையில் கொண்டு செல்ல முடியாமல், சிதறவைத்துக் கையாளப்படும் சக்திகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பங்களிப்பு வழங்க வேண்டுமெனச் சம்பந்தன் கேட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அருகில் இருந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தாமல், கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் வெளியேறிய நிலையில், தற்போது ஐ.நாவை நாடுகிறார் சம்பந்தன்.