செய்தி: நிரல்
ஜன. 15 20:48

மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல்- சந்தேக நபர்களை முன்னிலையாகுமாறு உத்தரவு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வடமாகாணம் மன்னார் மாவட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் மேல் நீதிமன்றில் கடந்த 11ஆம் திகதி செவ்வாயன்று நடைபெற்ற சமயம், குறித்த வழக்கில் தொடர்புடைய 53 சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மன்னார் மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அன்றைய தினம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்ட மா அதிபர் சார்பான அரச சட்டத்தரணியையும் நீதிமன்றில் பிரசன்னம் ஆகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஜன. 14 13:50

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படலாம்- சுதந்திரக் கட்சி கூறுகின்றது

(வவுனியா, ஈழம்) கோட்டாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்துக்குள் முரண்பட்டுள்ளதால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவைக் காரணமின்றிக் கைது செய்ய முடியாதென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் பகிரங்கமாக முன்வைத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருவதால், மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு இரகசியமாகத் திட்டமிடப்படுவதாக தயாசிறி ஜயசேகர கூறினார்.
ஜன. 12 16:54

வடமாகாணத்தில் இந்திய மீனவர்கள் 2009 இற்கு முன்னர் அத்துமீறியதில்லை

(முல்லைத்தீவு) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்தியா மீனவர்களின் இழுவைப் படகு ஒன்றேனும் அத்துமீறி நுழைந்ததில்லை. இந்தநிலையில் அக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக தமது கடற்றொழிலை மேற்கொண்டு பொருளாதார ரீதியில் மிகவும் உயர்வான நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்ந்ததாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 11 22:04

பதவி கவிழ்க்கவுள்ளதாக மைத்திரி- சஜித் சூழுரை

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளும் கூடிச் செயற்படுவது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வர மறுக்கின்றன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை முன்வைக்கின்றன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு முரண்பட்டு வரும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் ஆட்சி அமைக்குமென அதன் தலைவா் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் எந்தக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைக்கப்படும் என்று அவா் கூறவில்லை.
ஜன. 10 22:56

புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக மைத்திரி கூறுகிறார்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் விரைவில் அரசாங்கம் அமைக்கப்படுமென கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இந்த அரசாங்கம் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்றும் ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க உரையாடி வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார். ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சக்தி இல்லையென அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.