இருதரப்புப் போர்க்குற்றங்களுக்கான வெளிநாட்டு விசாரணைக்களம் விரிவடையப் போகிறது

இன அழிப்புக்கான சர்வேதச நீதி மீண்டும் புறந்தள்ளப்படும் என்பதே கசிந்திருக்கும் ஜெனீவா முடிவு சொல்லும் செய்தி

புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம் பெரும் பொறுப்பு, அவர்கள் செய்யவேண்டியது என்ன?
பதிப்பு: 2021 ஜன. 24 17:10
புதுப்பிப்பு: ஜன. 24 23:46
Sunday Times 3
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
புவிசார் அரசியலில் அமெரிக்க-இந்திய கேந்திர இராணுவ நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வராவிடின் சர்வதேச போர்க்குற்ற தண்டனைகள் ஒவ்வொன்றாக மேற்குலக நாடுகளால் இலங்கைக்கெதிராக முடுக்கப்படும். அதேவேளை முன்னாள் விடுதலைப்புலிகள் மீதும் இந்தியா, மற்றும் மேற்குலகில் தண்டனைகளும் தடைகளும் இறுக்கப்படும். இன அழிப்பு என்ற குற்றத்தை மேற்குலகோ இந்தியாவோ வலியுறுத்தப்போவதில்லை. வல்லாதிக்க நலன்களுக்கு முண்டுகொடுக்கும் மனநிலையில் மட்டுமே ஈழத்தமிழர் இருந்தால் இன அழிப்பு மீதான சர்வதேச விசாரணைக்கான வாய்ப்பே எதிர்காலத்தில் இல்லாது போகும். இலங்கை அரசு தனது தந்திரோபாய நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை 2009 காலகட்டத்தைப் போன்ற ஒரு பாரிய பொறுப்பு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் மீண்டும் சென்றிருக்கிறது.
 
2020 நவம்பர் இறுதியிலேயே தனது முன்னோடி அறிக்கையை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரான மிச்சேல் பச்சலேற் இலங்கை அரசுக்கு வழங்கியிருக்கிறார். அதிலே இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கையளிப்பதற்கான தனது விதந்துரைப்பையும் கெட்டியாக வெளியிட்டிருக்கிறார்

ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் முன்வைக்கப்போகும் செய்தி என்ன என்பது கொழும்பின் சண்டே ரைம்ஸ் பத்திரிகை ஊடாக இன்று கசியவிடப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு நாடு குறித்த தனது நிலைப்பாட்டை மனித உரிமைப் பேரவையில் அறிக்கையிடுவதற்கு ஒரு மாதத்திற்கும் முன்பதாகவே குறித்த நாட்டுக்குக் கையளித்துவிடுவது மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம் கையாளும் நடைமுறை. குறித்த நாடு தனது பதிலை முன்வைப்பதைப் பொறுத்து ஐ.நா. உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையிடலில் சில மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்பை நல்கும் நோக்கிலேயே இது செய்யப்படுகிறது.

இந்த அடிப்படையில் 2020 நவம்பர் இறுதியிலேயே தனது முன்னோடி அறிக்கையை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரான மிச்சேல் பச்சலேற் இலங்கை அரசுக்கு வழங்கியிருக்கிறார். அதிலே இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கையளிப்பதற்கான தனது விதந்துரைப்பையும் கெட்டியாக வெளியிட்டிருக்கிறார் என்பதே சண்டே ரைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி.

பச்சலேற்றின் விதந்துரைப்பிற்கான எதிர்வினையை இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டபாயா மூவர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அறிவித்ததன் மூலம் ஆற்றியிருக்கிறார். இந்த நிலையிலேயே சண்டே ரைம்ஸில் குறித்த முன்னோடி அறிக்கையின் உள்ளடக்கம் கசியவிடப்பட்டுள்ளது.

இன அழிப்பு என்ற குற்றம் தொடர்பான எந்தவித கோடிகாட்டலும் இல்லாத ஓர் அறிக்கையாகவே பச்சலேற்றின் அறிக்கை தென்படுகிறது

கசியவிட்டது யார், என்ன தேவைக்காக என்பது தமிழர்களைப் பொறுத்தவரை முக்கியமானதல்ல. கசிவின் உள்ளடக்கமே முக்கியமாகிறது.

ஆக, கசிவு சொல்லும் செய்தியின் சாராம்சம் என்ன என்பதை முதலிற் பார்க்கவேண்டும்.

இலங்கை அரசு 2015 இல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை பின்னோக்கிச் சுழற்றியிருப்பதும் ஜெனீவாத் தீர்மானங்களுக்கான தனது இணை அனுசரணையில் இருந்து விலகியிருப்பதும் ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறையின் நிறைவேற்றுத் திறன் மீதான கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது. குறித்த பொறிமுறை பற்றி பாதிக்கப்பட்டவர்களின் அவநம்பிக்கையை மேலும் கூட்டியிருக்கிறது. இலங்கையில் ஏற்கனவே ஐ.நா. தவறிழைத்தது என்பது ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆணையுடனான அறிக்கையிடலில் வெளியாகிவிட்டிருந்த உண்மை என்பதால், மீண்டும் அதே தவறு நடப்பதை இலங்கை விடயத்தில் அனுமதிக்கமுடியாது. ஆதலால், ஐ.நா. பொறிமுறை காட்டமான நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அவ்வாறு செய்யாதுவிடின் மனித உரிமைப் பேரவை என்ற கட்டமைப்பை மற்றைய நாடுகளும் உதாசீனம் செய்யும் போக்கு உருவாகிவிடும் என்று பச்சலேற் அம்மையார் பயப்படுகிறார்.

இன அழிப்பு என்ற குற்றம் தொடர்பான எந்தவித கோடிகாட்டலும் இல்லாத ஓர் அறிக்கையாகவே பச்சலேற்றின் அறிக்கை தென்படுகிறது.

இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளை விடுவித்தால், இலங்கைத் தளபதிகள் மீதான பயணத்தடை மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகளை குறித்த நாடுகள் தவிர்க்க முன்வரலாம் என்ற செய்தியும் இங்கே மறைமுகமாகப் புதைத்துவைக்கப்பட்டுள்ளது

எனினும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றை நோக்கிய நகர்வை நாடுகள் முன்னெடுக்கவேண்டும் என்கிறார் பச்சலேற். இது போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கெதிரான குற்றங்ளையும் மட்டுமே கையாளும் என்பது மட்டுமல்ல, வீட்டோ அதிகாரம் கொண்ட வல்லாதிக்கங்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கை விடயத்தை நடைமுறையில் நகர்த்தப்போவதில்லை என்பதையும் நாம் இங்கு கருத்திற்கொள்ளவேண்டும்.

அதேவேளை, பல நாடுகளும் தமது நீதிமன்றுகளூடாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அரசியற்-பொருளாதார அழுத்தங்களையும் கைக்கொள்ளலாம் என்றும் அவர் கோடிகாட்டியிருக்கிறார். இவ்வாறான நாடுகள் மட்டத்திலான சட்ட நடவடிக்கைகள் மட்டுமே நடைமுறையிற் தற்போதைக்குச் சாத்தியமானவை. ஆனால், இவ்வாறான நடவடிக்கைகளில் இலங்கை அரசு மட்டுமல்ல, முன்னாள் விடுதலைப்புலிகளும் தண்டனைக்குள்ளாவார்கள். இதுவரை இலங்கை அரசின் எந்த இராணுவத் தளபதியும் வெளிநாடுகளின் நீதிமன்றங்களில் தண்டனைக்குள்ளாகவில்லை. ஆனால், கதிர்காமர் கொலை தொடர்பாக ஓர் ஈழத்தமிழர் இலங்கை தொடர்பான மேற்குலகின் மனித உரிமைக் கருக்குழு நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் சிறைத்தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக, இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளை விடுவித்தால், இலங்கைத் தளபதிகள் மீதான பயணத்தடை மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகளை குறித்த நாடுகள் தவிர்க்க முன்வரலாம் என்ற செய்தியும் இங்கே மறைமுகமாகப் புதைத்துவைக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்பவைக்கப்படுவதற்கான கருவிகளாக அரசியற்கைதிகள் ஒரு காலத்தில் பயன்படுவர் என்பதை அறிந்தே இலங்கை அரசும் அவர்களை இதுவரை விடுவிக்காமற் தடுத்துவைத்துவருகிறது.

அதைப்போலவே, விடுதலைப்புலிகள் இயக்கம் மீது வெளிநாடுகளில் நீடித்துச் செல்லும் தடைகளும் இருக்கின்றன. குறிப்பாக, விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐ.நா. தடையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை கோட்டபாயவின் அமெரிக்க சார்பு இராணுவ ஆலோசகரான ரொஹான் குணரட்ன வெளியிட்டுவருகிறார் என்பதையும் இங்கு நோக்கவேண்டும்.

மனித உரிமையைத் தமது கேந்திர அரசியலுக்குச் சாமர்த்தியமாகப் பயன்படுத்துவதில் கைதேர்ந்த பிரித்தானியா-அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் சமாந்தரமாக இன்னொரு செய்தியை இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளன. இந்தியாவும் தனது செய்தியை வழங்கியுள்ளது
இரண்டு தரப்புகளும் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களையும் இழைத்தன என்ற பிரளயத்துக்குள் மட்டும் சர்வதேச நீதியும் சர்வதேச அரசியலும் ஒன்றித்துப் பயணிக்கும் வரை இன அழிப்பை மையப்படுத்திய நீதியும் தீர்வும் ஈழத்தமிழர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. இதை உணர்ந்து தமிழர் தரப்பு செயற்படவேண்டியதன் அவசியத்தை கூர்மை இணையம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மனித உரிமையைத் தமது கேந்திர அரசியலுக்குச் சாமர்த்தியமாகப் பயன்படுத்துவதில் கைதேர்ந்த பிரித்தானியா-அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் சமாந்தரமாக இன்னொரு செய்தியை இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளன. இந்தியாவும் தனது செய்தியை வழங்கியுள்ளது. அவை என்ன என்பதையும் சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. அவற்றையும் இங்கு நாம் நோக்கவேண்டும்.

முன்போல, இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளைத் தமது நாட்டுக்கான இலங்கைத் தூதுவர்களாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே மேற்குலம் வழங்கியிருக்கும் உடனடிச் செய்தி. ஈழத்தமிழர் அதிகம் வாழும் கனடா இதை நடைமுறையில் செய்து காட்டியிருக்கிறது.

மறுபுறம், மிலிந்த மொராகொடவின் உயர்நிலைத் தூதுவர் விடயத்தில் இந்தியாவும் தனது தயக்கத்தை வெளிப்படுத்தி இலங்கையுடனான பேரம்பேசலை ஆரம்பித்திருக்கிறது என்கிறது சண்டே ரைம்ஸ்.

இங்கு நாம் இந்தியா தொடர்பாகக் கவனிக்கவேண்டிய பிரதான இரண்டு விடயங்கள் உள்ளன. இந்தியாவின் பேரம்பேசலின் கொழும்பின் கிழக்குத் துறைமுக நிர்மாணிப்பும் (East Container Terminal, ECT), இந்தியாவின் கடல் சார் கள ஒருங்கிசைவுக்குள் (Maritime Domain Awareness, MDA) இலங்கையைச் சில நாட்களுக்குள் ஒத்திசைந்தது செயற்படவைத்தலும் என்பவையே அவை.

இலங்கை அரசோ இந்தியாவை ஒருபுறம் சமாளித்தவாறு இந்தியாவை நுட்பமாக மீறி ஒபாமா காலத்தில் எவ்வாறு அமெரிக்காவுடன் சமாந்தரமான ஓர் இணைவை ஏற்படுத்தியதோ அதைப் போன்ற ஓர் இணைவை ஏற்படுத்தமுடியுமா என்பதில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறது. இந்த அணுகுமுறைக்கே மிலிந்தா மொராகொட ஒரு தூணாகச் செயற்பட்டுவருகிறார்

ஆனால், இலங்கை அரசோ இந்தியாவை ஒருபுறம் சமாளித்தவாறு இந்தியாவை நுட்பமாக மீறி ஒபாமா காலத்தில் எவ்வாறு அமெரிக்காவுடன் சமாந்தரமான ஓர் இணைவை ஏற்படுத்தியதோ அதைப் போன்ற ஓர் இணைவை ஏற்படுத்தமுடியுமா என்பதில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறது. இந்த அணுகுமுறைக்கே மிலிந்தா மொராகொட ஒரு தூணாகச் செயற்பட்டுவருகிறார்.

ஆக, தற்போது இந்தியாவை நுட்பமாகத் தவிர்த்து எவ்வாறு அமெரிக்காவுடன் ஒரு பேரம்பேசலைத் தான் செய்வது என்பதே கோட்டபாயா முன்னிருக்கும் சவால். அந்தச் சவாலைத் தான் சமாளிப்பேன் என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

சர்வதேச அரசியலில் இலங்கை விவகாரத்தைத் தமது கேந்திர நலன்களுக்குப் பயன்படுத்தவிழையும் மேற்குலகும் இந்தியாவும் இணைந்த அணி ஒருபுறமும், மறுபுறத்தே அதற்கெதிரான சீனா சார் அணிக்கும் இடையே அணிவகுப்புகள் ஜெனீவா என்ற மனித உரிமைப் புள்ளியில் வெளிப்படுவது வழமையானதே. இதிலே சீனா சார்பாக இலங்கை தொடர்பான அணுகுமுறையில் பாகிஸ்தானும் பங்கேற்பதற்கான சமிக்ஞைகளும் அண்மையில் வெளிப்பட்டுள்ளன.

இலங்கை அரசு தன்னை ஓர் அணிசேரா நாடாகச் சித்தரித்து தனது ஒற்றையாட்சி அரசின் இறைமையைப் பற்றிப் பீற்றிக்கொண்டிருக்க, சீனாவானது இலங்கை அரசின் இறைமையைத் தான் மதிப்பதாகவும், அதற்குக் குந்தகமாக இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிச்சக்திகளின் தலையீடுகளை அது அனுமதிக்காது என்றும் அதீத உரிமை எடுத்தவாறு சில கடுமையான வாசகங்கைள ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதிக்கால பொம்பியோ வருகையின் போது உதிர்த்திருந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, 2009 இல் நடந்தது போல இம்முறையும் சீனா சார்பான அணியில் இருந்து இலங்கை தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் ஒரு தீர்மானம் முன்மொழியப்படவும் வாய்ப்பிருக்கிறது.

அதேவேளை பிரித்தானியா தலைமயிலான இலங்கை தொர்பான கருக்குழு நாடுகளும் (Core Group on Sri Lanka) தமது முன்மொழிவை முன்வைக்கும்.

முன்னையது தமிழர் சார்பாக இருக்காது. பின்னையது தமிழர் சார்பாக இருப்பது போன்ற மாயத்தோடு அடிப்படையில் தமிழர் நலனுக்குக் குந்தகமானதாகவே இருக்கும்.

ஒருபுறம் இந்தியாவைச் சமாளித்தவாறு பொருளாதாரத் துறைமுக அபிவிருத்தியை பெருமளவில் சீனாவுக்கு வழங்கும் போது மறுபுறம் தனது கடற்படையை அமெரிக்காவுடன் இயைந்து போகவைப்பதென்பது கோட்டபாயவின் பிரதான உத்தியாக இருக்கும்
இந்தச் சூழ்நிலையில், தமிழர் நிலைப்பாட்டை எதுவித மழுங்கடிப்புக்கும் இடம்கொடுக்காது முன்வைக்கும் தீர்மானம் ஒன்றை வேறோர் முனையூடாக முன்மொழியவைக்கவேண்டிய கடமை புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு உண்டு.

இதற்கான களச்சூழல் தாயகத்தில் ஓரளவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன அழிப்புக்கான விசாரணையைக் குறிப்பாகக் கோராதவண்ணம் தமிழ்க் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு நகர்வை முன்வைக்குமாறு மேற்கொள்ளப்பட்ட சில நகர்வுகளை கடும் பிரயத்தனங்களுக்கும் கையாளுகைகளுக்கும் மத்தியில் பல தரப்புகளும் சாதுரியமாக முறியடித்து பொதுக்கோரிக்கை ஒன்றை ஓரளவுக்குத் திருப்திகரமான முறையில் முன்வைத்துள்ளன. இது இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை இரண்டு இடங்களில், குறிப்பாக முதலாவது கோரிக்கையில் கோரியிருக்கிறது.

மிச்சேல் பச்சலேற் எதை வெளியிடப்போகிறார் என்பதை முற்கூட்டியே அறிந்துகொண்டு தமது கோரிக்கைகைள அதற்கு ஏற்ப மட்டுப்படுத்தி, தன்னார்வ நிறுவனங்கள் மூலமும் சிவில் சமூகங்கள் மூலமும் கையாளப்பட்ட தேர்தல் காலத்துத் தமிழ்த் தேசியவாதிகளும் தம்மைத் தாமே அம்பலமாக்கியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நடவடிக்கையைப் புலம்பெயர் அமைப்புகளால் மேற்கொள்ளமுடியுமா என்பதே தற்போது ஈழத்தமிழர் முன்னால் இருக்கும் கேள்வி.

2009 இல் இன அழிப்புப் போர் தீவில் நடந்தபோது, அதாவது ஒபாமா நிர்வாகத்தில், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் என இரண்டு சமாந்தரமான அணுகுமுறைகள் இருந்தன.

அந்தக் காலம் பட்டை ஒன்று பாதை ஒன்று என்பதைக் கொண்டுவந்த சீனாவின் சீ சின்பிங்கின் வருகையோடு, குறிப்பாக 2013 இன் பின்னர், முழுமையாக மாறிவிட்டது.

தற்போது இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் இணைபிரியா கேந்திர நட்புச் சக்திகள். ட்ரம்ப் நிர்வாகத்தின் போது புதுதில்லியே இலங்கை விடயத்தில் ஒருங்கிணைந்த அமெரிக்க-இந்திய இந்தோ-பசிபிக் அணுகுமுறையைக் கையாளும் மையப்புள்ளியாக இருந்தது.

இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, மீண்டும் ஒபாமா காலத்து அரசியலை (பைடன் பெருத்த தலையிடிகளுடன் அரசு கட்டிலேறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில்) அமெரிக்காவுடனான தனது தனித்த பேரம்பேசலுக்கு ஏற்றவாறு கட்டமைக்க கோட்டபாய அரசுக்கு மேலும் அவகாசம் தேவைப்படுகிறது போலத்தெரிகிறது.

அதாவது, மிலிந்த மொராகொடாவுக்கும் முன்னாள் அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக்குக்கும், கோட்டபாயாவுக்கான தனித்துவமான அமெரிக்கக் கோடு ஒன்றை இந்தியாவுக்கும் சமாந்தரமாக வரைவதற்கு குறைந்தது ஆறுமாத அவகாசம் தேவைப்படுகிறது.

சீனா தொடர்பான அணுகுமுறையில் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுவர் என்றும் பைடன் நிர்வாகம் தமிழருக்குச் சார்பாக மனித உரிமைச் சாதனைகளைப் புரிய முன்வரும் என்றும் பகற்கனவு கண்டவாறு இருந்து எதையும் ஈழத்தமிழர்கள் சாதிக்கமுடியாது
இந்தக் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவே புதிய ஒரு ஆணைக்குழுவை ஆறுமாத கால அவகாசத்தோடு கோட்டபாயா உருவாக்கியிருக்கிறார் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ஆக, மனித உரிமை உயர்ஸ்தானிகரின் மட்டுப்படுத்தப்பட்ட வீச்சை ஆறுமாதங்களுக்குத் தன்தொடர்பாக மேலும் தணித்துவைத்திருக்கவேண்டிய தேவை கொழும்புக்கு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

இலங்கை தனது அமெரிக்க-இந்திய உறவைக் கெட்டியாக்கிக்கொள்ள தனது கடற்படையையும், தனது பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திரமுள்ள துறைமுகங்களையும் காவாகப் பயன்படுத்திவருகிறது.

ஒருபுறம் இந்தியாவைச் சமாளித்தவாறு பொருளாதாரத் துறைமுக அபிவிருத்தியை பெருமளவில் சீனாவுக்கு வழங்கும் போது மறுபுறம் தனது கடற்படையை அமெரிக்காவுடன் இயைந்து போகவைப்பதென்பது கோட்டபாயவின் பிரதான உத்தியாக இருக்கும். அதுவும் இராணுவ ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் செய்யாமலே இதை நடைமுறையில் சாதிக்க அவர் முயற்சிப்பார்.

ஆகவே, இலங்கை வகுக்கும் உத்திகைளப் புரிந்தவாறு ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டும்.

சீனா தொடர்பான அணுகுமுறையில் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுவர் என்றும் பைடன் நிர்வாகம் தமிழருக்குச் சார்பாக மனித உரிமைச் சாதனைகளைப் புரிய முன்வரும் என்றும் பகற்கனவு கண்டவாறு இருந்து எதையும் ஈழத்தமிழர்கள் சாதிக்கமுடியாது.

வல்லாதிக்கங்கள் தமது தேவைகக்காக எம்மைத் தேடிவரும், நாம் எதுவும் செய்யத்தேவையில்லை என்று வாளாவிருந்தால், கொழும்பு என்ற வேதாளம் மீண்டும் முருங்கை ஏறுவதையே பார்க்க நேரிடும். ஆனால், இம்முறை அவ்வாறு கொழும்பு ஏறுவது தனது திறமையால் என்பதாகவே அது இருக்கும்.

ஏனென்றால், 2009 இல் ஈழத்தமிழர்களிடம் ஒரு தெளிவான சிந்தனைத் தளம் இருந்தது. அதற்கான செயற்படு நிலை இருந்தது. குறிப்பாக, 2009 இல் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள் கடமையைச் மிகவும் துணிச்சலாக நேர்கோட்டில் நின்று செய்து முடித்தார்கள்.

தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அரசியல் ரீதியாகத் தோற்கவில்லை. ஆனால், புவிசார் அரசியலின் தெரிவுகளும் முடிவுகளும், சகல மனிதாபிமான எல்லைகளையும் தாண்டியிருந்தன. ஓர் இன அழிப்புப் போர் என்றாலும் பரவாயில்லை, முதலில் புலிகளை அழித்துவிட அனுமதிப்போம் என்ற சிந்தனை புவிசார் அரசியலின் தேர்வாக அன்று வெளிப்பட்டது. சர்வதேச அரசியலால் சர்வதேச அறம் பிழைத்து உலக மானிடம் முள்ளிவாய்க்காலில் தோற்றது.

சர்வதேச நீதியைக் கொண்டு சர்வதேச அரசியலின் அநீதியை முறியடிக்க ஈழத்தமிழர் தற்போதைக்கு நம்பக்கூடிய ஒரே ஒரு நட்புச்சக்தி கொள்கை சார் தூய்மைத்துவமே தவிர, வல்லாதிக்கங்களின் நலன்களுக்கு முண்டுகொடுக்கும் அறமற்ற அணுகுமுறை அல்ல
அன்று கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதரான ரொபர்ட் ஓ பிளேக் என்பவரும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளித்த சேர் ரொபர்ரட் ஜோன் சோயர் என்ற பிரித்தானியாவின் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் மட்டுமல்ல, அமெரிக்க இராஜாங்க அமைச்சராக அப்போதிருந்த ஹலறி கிளின்டனும் உலகின் மையங்களை அதிரவைத்துக்கொண்டிருந்த வரலாறு காணாத போராட்டங்களை மழுங்கடிக்கும் கருவியாக மாறிவிட்டிருந்தார். இப்படியாக, 2009 இல் ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேச நீதியல்ல, சர்வதேச அரசியலின் அநீதியே இலங்கை அரசை விடவும் ஆபத்தானதாகத் தன்னை வெளிப்படுத்தியது.

சர்வதேச நீதியைக் கொண்டு சர்வதேச அரசியலின் அநீதியை முறியடிக்க ஈழத்தமிழர் தற்போதைக்கு நம்பக்கூடிய ஒரே ஒரு நட்புச்சக்தி கொள்கை சார் தூய்மைத்துவமே தவிர, வல்லாதிக்கங்களின் நலன்களுக்கு முண்டுகொடுக்கும் அறமற்ற அணுகுமுறை அல்ல என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்டுவது கூர்மை இணையத்தளத்தின் வரலாற்றுக் கடமையாகிறது.

ஏறத்தாழப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அதே சர்வதேச அநீதி என்ற, அதுவும் நாம் ஏலவே பட்டறிந்த, வேதாளத்தை மீண்டும் முருங்கை மரமேற அனுமதிக்காதவாறு தடுக்கும் ஆற்றலை ஒரு தேசமாக ஈழத்தமிழர்கள் பெற்றுள்ளார்களா என்பதை நிறுவவேண்டிய காலமே இது.

இங்கே, தாயகத்தில் கட்சிகளும் அமைப்புகளும் இன அழிப்புக்கான நீதியின் முக்கியத்துவத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

வெளியிலே, புலம்பெயர் ஈழத்தமிழர் தமது திறனாற்றலை வெளிப்படுத்த விரைந்து செயலாற்றவேண்டும்.

வெல்லப்போவது யார்? கோட்டபாயவா, புலம்பெயர் தமிழர்களா?