செய்தி: நிரல்
மார்ச் 24 18:52

தீர்மானம் தொடர்பாக விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென்றும், ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் இலங்கைக்கு வருமெனவும் சிங்கள இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையெனவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறினார். கொழும்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் கெகலிய ரம்புக்வெல, மனித உரிமைச் சபையின் தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக விரைவில் கருத்து வெளியிடும் என்றும் கூறினார்.
மார்ச் 23 23:23

இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. போர்க்குற்றம் இருதரப்பு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் மத்திரமே தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் கோரிய இன அழிப்புக்கான சர்வதேச நீதி குறித்து எதுவுமே கூறப்படவில்லை. அதேவேளை, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
மார்ச் 22 22:42

நானாட்டான் அருவி ஆற்றை மையப்படுத்தி மண் அகழ்வு

(மன்னார், ஈழம் ) தாயகப் பிரதேசமான வட மாகாணம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அருவி ஆற்றை மையப்படுத்தி கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற மண் அகழ்வினால் இப்பகுதியின் நிலக்கீழ் நீர், உவர் நீராக மாற்றமடைந்து நூற்றுக்கணக்கான ஏழைத் தமிழ் குடும்பங்களின் பல நூறு ஏக்கர் தோட்டச் செய்கைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார். மேலும் நானாட்டான் பகுதியில் உள்ள பல குடிநீர் கிணறுகள் குறித்த மணல் அகழ்வினால் நீரின்றி காணப்படுவதினால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும் தலைதூக்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மார்ச் 21 21:51

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில் 72 நீதிபதிகள் இடமாற்றம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட இலங்கைத் தீவின் பல மாவட்டங்களில் பணியாற்றும் 72 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு குறித்த இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு , கல்முனை, சம்மாந்துறை, மூதூர், ஊர்காவல்துறை, சாவகச்சேரி ,பருத்தித்துறை ஆகிய தமிழ் பகுதிகளில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இவ்விதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிச் சேவை ஆணைக்குழுவின் 2021 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்திற்கமைய நீதிபதிகளின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மார்ச் 20 21:12

கடத்தியவர்கள் யாரெனத் தெரியும் என்கிறார் விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சுஜீவ

(கிளிநொச்சி, ஈழம்) அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த முக்கியமான ஒலிநாடா ஒன்றை பெற்றுக்கொள்ளவே தான் கடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சுஜீவ கமகே தெரிவித்துள்ளார். சென்ற பத்தாம் திகதி கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குறித்த ஊடகவியலாளர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது தான் கடத்தப்பட்ட முறை தொடர்பாக சுஜீவ கமகே விளக்கமளித்தார். தான் பணியாற்றும் சியரட்ட என்ற செய்தி இணையத்தளத்திற்குத் தான் எழுதுவதற்காகச் சேர்த்து வைத்திருந்த அரசாங்கம் பற்றிய ஒலிநாடாவை அழிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.