செய்தி: நிரல்
டிச. 23 09:24

நிதி நெருக்கடி- சர்வதேச நாணய நிதியத்திடம் கோர முடிவு

(வவுனியா, ஈழம்) தற்போது எதிர்நோக்கியிருக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் உள்ளகப் பேச்சுக்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெற அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் மூத்த அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி உயர்நிலை அதிகாரிகளின் கடும் எதிர்ப்பினால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
டிச. 21 22:30

ரெலோ இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தவறு! திசை திருப்பினாரா சுமந்திரன்?

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணம் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் தயாரித்த அந்த ஐந்து பக்க ஆவணம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் இன்று அனைத்துக் கட்சிகளும் கையொப்பமிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் இன்றை கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு சில விளக்கங்களைக் கொடுத்த பின்னர் குறித்த ஐந்து பக்க ஆவணத்தை மீளத் தயாரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டிச. 21 20:10

நெடுந்தீவு, தலைமன்னார் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 55 பேருக்கும் விளக்கமறியல்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு பகல் ஆகிய தினங்களில் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் இழுவைப்படகுகளில் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டவேளை, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்திய மீனவர்களின் ஆறு இழுவைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
டிச. 20 23:19

தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு மாறான அரசியல் தீர்வு முயற்சிகளை ஏற்க முடியாது- தமிழரசுக் கட்சி

(வவுனியா, ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு மாறான அரசியல்தீர்வு முயற்சிகளை ஏற்க முடியாதென தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இன்று முற்பகல் பத்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் பின்னர் மாலை ஆறு மணி முதல் நள்ளிரவு பதினொரு மணிவரையும் இரு கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது. கொழும்பு- 07இல் உள்ள தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டிச. 18 21:52

அரச திணைக்களங்களிடம் இருக்கும் பொதுமக்களின் காணிகள் தொடர்பாக இறுதி முடிவு

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு காணப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.