செய்தி: நிரல்
ஜூன் 12 17:55

மன்னாரில் குடும்பஸ்தர் இருவர் படுகொலை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருபது பேர் தலைமறைவு

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் நொச்சிக்குளம் கிராமத்தில் பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான ஆண்கள் தலை மறைவாகியுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். படுகொலைச் சம்பவத்தில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த 20ற்கும் மேற்பட்ட ஆண்கள் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள நிலையில் 16 சந்தேகநபர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உயிலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஜூன் 10 22:53

இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட மின்சார சபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவுக்கான மின்சக்தி, எரிசக்தி அபிவிருத்தியில் பத்து மெகாவொட்டிற்கும் அதிகமான திட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட மின்சார சபைத் திருத்தச் சட்டமூலம், மேலதிக 84 வாக்குகளினால் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேறியுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் பெறப்பட்டன. வாக்களிப்பில் 13 பேர் கலந்துகொள்ளவில்லை. மின்சக்தி எரிசக்தித் திட்டத்தில் பத்து மெகாவோட்டிற்கும் அதிகமான அபவிருத்திகளை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட மின்சார சபைத் திருத்தச் சட்டமூலம், மேலதிக 84 வாக்குகளினால் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேறியுள்ளது.
ஜூன் 07 23:04

மக்கள் இரண்டு வேளை மாத்திரம் உணவு அருந்த வேண்டுமென ரணில் கூறியமைக்குக் கடும் விமர்சனம்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியினால், மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்குத் தயாராக வேண்டுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம், மக்கள் இரண்டுவேளை மாத்திரமே சாப்பிட வேண்டும் என்று கூறுவது வெட்கக் கேடானதென தொழிற்சங்க சம்மேளம் கண்டித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க செவ்வாய் 07 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். இந்த உரையின் பின்னர் விவாதம் இடம்பெற்றது.
ஜூன் 04 19:43

தலை மன்னார் மணல் தீடையில் மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள, மணல் தீடையில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் ஏழு பேர் தாக்குதல் உள்ளாகியது தொடர்பில் பேசாலை மீனவர் சங்கத்திற்கும், பேசாலை பங்கு தந்தைக்கும், தாக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ள நிலையில் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 02 20:42

கொழும்பில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்து- மாநகர சபை எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு நகரில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ளதாக கொழும்பு மாநாகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களைப் பயமுறுத்தவில்லை என்றும் ஆனால் வரவுள்ள உணவு நெருக்கடி பற்றி மக்களைத் தயார்ப்படுத்தவே இதனைக் கூறுவதாகவும் அவர் சொன்னார். கொழும்பு நகர மொத்த சனத்தொகையில் குறைந்த வருமானம் பெறும் சுமார் 60 வீதமானோர் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ரோசி சேனநாயக்கா கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.