செய்தி: நிரல்
ஜூன் 21 21:34

நொச்சிக்குளம் இரட்டைக்கொலை குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் நொச்சிக்குளத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பான புலன் விசாரணைகள் அனைத்தும் மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சி.பி. ஜெயதிலக்க கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். குறித்த பொலிஸ் பிரிவினரால் கடந்த 15ஆம் திகதி முருங்கன் காட்டுப்பகுதியில் இருவரும், கடந்த 16ஆம் திகதி யாழ் நகரில் ஐவரும் என இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 20 22:07

21 ஆவது திருத்தச் சட்ட நகல்வரைபு அமைச்சரவையில் அங்கீகாரம்

(வவுனியா, ஈழம்) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நகல்வரைபைச் சமர்ப்பித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்களுடன் நகல் வரைபு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 19 14:34

பீரிஸின் திரிபுபடுத்திய ஜெனீவா உரைக்குக் கண்டனம் தெரிவித்து யாழ் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவப் பொம்மையை எரித்து யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் ஐம்பதாவது அமர்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஐ.நா.விடம் கையளிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளில் தொடர்புடைய குடும்பங்களில் 83 வீதத்துக்கும் அதிகமானவா்களைச் சந்தித்து விபரங்களை உறுதிப்படுத்தும் வேலைகள் நடைபெற்றுள்ளதாகத் திரிபுபடுத்திக் கூறியிருந்தார்.
ஜூன் 17 18:04

பீரிஸின் ஜெனீவா உரைக்கு எதிராக யாழ் நகரில் போராட்ட அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஐம்பதாவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய உரைக்குக் கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சினையைத் திசை திருப்பும் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜூன் 14 22:46

எரிபொருள் தட்டுப்பாடு- வெள்ளிமுதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்

(வவுனியா, ஈழம்) எரிபொருள் தட்டுப்பாடுகளினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாதென இலங்கைத் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுன விஜயரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றும் இல்லையேல் மே மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்ற வன்முறைகளைவிடக் கூடுதல் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறலாமெனவும் அவர் கூறினார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெமுன விஜயரட்ன விளக்கமளித்தார்.