கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மார்ச் 21 15:25

ஆணையாளரின் அறிக்கையில் தமிழ் மக்கள், வடக்குக் கிழக்கு என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு - கிழக்கு மாகாணம் என்றோ எந்தவொரு வார்த்தைப் பிரயோகங்களும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக இலங்கை மக்கள் என்றே ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினையாகக் காண்பித்தால் போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக தமிழ் இன அழிப்பு என்ற அடிப்படையிலான விசாரணையாக மாறிவிடலாம் என்ற நோக்கில் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை மக்கள் என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென ஜெனீவாவில் உள்ள தமிழ்ப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
மார்ச் 19 22:34

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் - பின்னணியில் அமெரிக்கா, ஆனால் திசை திருப்புகிறார் விமல் வீரவன்ச

(யாழ்ப்பாணம், ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவாரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவே அதன் பின்னணி எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அமெரிக்காவின் நண்பன் என்றும் பிரதமருக்குரிய அலரி மாளிகையில் அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் அலுவலகம் செயற்படுவதாகவும் மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார்.
மார்ச் 16 23:17

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் - தமிழர் நிராகரித்தால் வெற்றி யாருக்குமேயில்லை

(கிளிநொச்சி, ஈழம்) இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்ததாகச் செய்திகள் ஏலவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு உள்ளக ரீதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மார்ச் 14 23:33

இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை சிங்கள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரினார். இலங்கை இராணுவத்தை உள்ளநாட்டில் விசாரணை செய்யலாம் என்றவொரு அத்தியாயம் ஜெனீவா பிரேரணையில் உள்ளது. பிரித்தானிய அரசு அந்த அத்தியாயத்தை பிரதானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 12 10:06

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) போருக்கு முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலிலும் வடக்கு - கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இந்த உதவி தொடர்பாக கூறியுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.