செய்தி: நிரல்
ஜூன் 14 20:13

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பயங்கரவாதமாம் - மோடி

(வவுனியா, ஈழம்) அப்பாவி உயிர்களைப் பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை தனது இலங்கை விஜயத்தின் போது பார்த்தததாக, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் இடம்பெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் ஆபத்தைத் தடுக்க அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதரவு ஊக்கமளிக்கும் நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இந்தப் போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 14 10:46

கிளிநொச்சி மாவட்டத்தில் 332 ஆசிரியர் வெற்றிடங்கள் - வலயக் கல்வி அலுவலகம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் பின்னர் தமிழர்களது கல்வி மட்டம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 77 ஆசிரியர்கள் கடமையாற்றிவரும் நிலையில், தற்போது 332 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை 2010 - 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக தம்மிடம் ஆவணங்கள் எவையும் இல்லையென கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 13 15:27

பூகோள அரசியல் போட்டி- மைத்திரி, ரணில் மோதல் உக்கிரம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்த வேண்டுமென மைத்திரி கேட்டுக்கொண்ட போதும், தொடர்ச்சியாக அந்த அமர்வு நடைபெறுகின்றது. அதனால், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிடாமல் மைத்திரிபால சிறிசேன தடுத்ததால், ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அமைச்சர்களுடன் பேசித் தீர்மானித்து வருகின்றார். இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை கூடுவதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.
ஜூன் 12 23:16

வாகரையில் இல்மனையிற் அகழ்வுக்கு எதிராகப் போராட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நாற்பத்து எட்டுக் கிலோமீற்றர் நீளமான கடற்கரையில் இல்மனைற் சட்டவிரோதமாக அகழ்வதற்கு கொழும்பு நிர்வாகம் அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது. மேலும் நூறு மீற்றர் ஆழத்திற்கு இல்மனைற் அகழப்படவுள்ளதாகவும் இதனால் வாகரைப் பிரதேசம் முற்றுமுழுதாக அழிவடையும் நிலை ஏற்படுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்குபற்றியுள்ளனர். இல்மனைற் அகழ்வதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசமெழுப்பினர்.
ஜூன் 12 10:16

ஸர்க்கான் குறித்து ஜனவரியில் தகவல் வழங்கப்பட்டது-உலமா சபை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு குறித்து பல தட­வைகள் இலங்கைப் பாது­காப்பு உயர் அதிகாரிகளுக்குத் தெரி­வித்­திருந்ததாகவும் ஆனாலும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லையென்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி இலங்கை நாடாளுமன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை அளித்த வாக்குமூலத்தில் ஸஹ்ரான், அவர் சார்ந்த குழுவின் செயற்­பா­டு­கள் எதுவுமே ஏனைய முஸ்லிம் மக்களுக்குத் தொடர்ப்பில்லாதவையெனவும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு கூறியிருந்ததாக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.