செய்தி: நிரல்
ஓகஸ்ட் 09 22:47

வேட்பாளர் கோட்டாபய என்பது உறுதி - ரணில் தரப்பில் முடிவில்லை

(வவுனியா, ஈழம்) இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுகளில் குழப்பங்கள் முரண்பாடுகளுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச என்பது உறுதியாகிவிட்டதாகக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவை நியமிப்பதில் கட்சிக்குள் முரண்பாடுகள் இழுபறிகள் இருந்தாலும் முரண்பாட்டில் உடன்பாடாக கோட்டாபய ராஜபக்சவை நியமிப்பதென உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை மகிந்த தரப்புடன் எந்தவிதமான உடன்பாட்டுக்கும் வரவில்லை.
ஓகஸ்ட் 08 23:16

தமிழர்களின் வாக்குகளைப் பெற சஜித் முயற்சி - சந்திப்புகள் தீவிரம்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் - முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்குச் சென்ற அமைச்சர் சஜித் பிரேமதாச, அங்குள்ள இளைஞர்களுடன் உதைபந்தாட்டம் விளையாடியுள்ளார். தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு - கிழக்கு தாயகப் பகுதிகளில் வாழும் பிரமுகர்கள் வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருகின்றது. ஆனால் கலந்துரையாடலுக்குச் செல்லும் பிரமுகர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால வரலாறுகளைப் பற்றிப் பேசுவதாகவே கூறப்படுகின்றது.
ஓகஸ்ட் 08 12:16

ஒட்டுசுட்டான் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு- இராணுவத்துக்கு எதிராக மக்கள் கோசம்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த டிப்பர் வாகன சாரதி, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற நான்கு இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, மணல் ஏற்றியவர்களில் மூன்று பேர் தப்பியோடியதை அடுத்து வாகன சாரதியை நோக்கி இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஓகஸ்ட் 07 18:14

தமிழ்க் கட்சிகள் மீது நம்பிக்கையிழப்பு - தொடர் போராட்டத்திற்கு ஆயத்தம்

(வவுனியா, ஈழம்) வடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி வவுனியாவில் தொளாயிரம் நாட்களாகச் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் பேராட்டம் நடத்தி வரும் உறவினர்கள், இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். இலங்கை அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில். தமது போராட்டத்திற்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாகப் போராட்டம் இடம்பெற்றது. கண்டிவீதி வழியாக பேரணியாகச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் நடத்தப்படும் இடத்தைச் சென்றடைந்தனர்.
ஓகஸ்ட் 07 17:39

பூநகரி - கௌதாரிமுனைப் பகுதியில் மணல் அகழ்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் தொடர்ந்து தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் உட்பட தமிழர் தாயகத்தில் உள்ள வளங்கள் திட்டமிட்ட முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூறையாடப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் மணல் அகழ்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை செப்டெம்பர் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கௌதாரிமுனையில் உள்ள இயற்கை வளமான மணல் தொடர்ந்தும் சட்டவிரோதமாக அகழப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தி கடந்த யூலை 22 ஆம் திகதி பிரதேச மக்கள் தாக்கல் செய்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.