செய்தி: நிரல்
நவ. 06 18:43

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி துண்டுப் பிரசுரம்

(கிளிநொச்சி. ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்களினால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இன்று புதன்கிழமை கிளிநொச்சி, வவுனியா. மன்னார் ஆகிய பிரதேசங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போராட்டம் இடம்பெற்றது. யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து இன்று வரை நீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் ஊடகத்துறை பல்வேறு அச்சுறுத்தல்களையும் நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.
நவ. 06 10:52

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார்- ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் அஞ்சலி

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் இதழியல் துறையின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்கண்ணு பெருமாள் எண்பத்து ஆறாவது வயதில் நேற்றுச் செய்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். இலங்கைத் தீவின் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த பெருமாள், கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார். மாணவராக இருந்தபோதே இதழியல்த் துறையில் ஆர்வம் கொண்ட பெருமாள், மாணவப் பருவத்திலேயே பல ஆக்கங்களை வீரகேசரியில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் 1961 ஆம் ஆண்டு முதல் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
நவ. 06 10:15

மூன்று கட்டப் போரை நடத்தியது நானே- சந்திரிகா கூறுகிறார்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச சிறந்ததொரு வேட்பாளர் அவருக்கு வாக்களித்துப் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மக்களின் பிரதான கடமை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் மாநாடு நேற்றுச் செய்வாய்க்கிழமை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது. அங்கு தலைமையுரையாற்றிய சந்திரிகா ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்துள்ள உறுப்பினர்கள் அனைவருமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்தான். அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
நவ. 05 22:24

தமிழரசுக் கட்சியின் முடிவில் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களில் எவரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சி தனித்து முடிவெடுத்துள்ளது என்றும் ஐந்து கட்சிகளின் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை கைவிட்டு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை ஏற்க முடியாதென ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் செயலாளர் சுரேஸ் பிரேமச் சந்திரன் கூறியுள்ளார். எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும்படி கோர முடியாதென்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
நவ. 04 22:50

ஏமாற்றிய தமிழரசுக் கட்சி- சிவாஜிலிங்கம் கண்டனம்

(கிளிநொச்சி. ஈழம்) பதின்மூன்று அம்சக் கோரிக்கையை கைவிட்டுத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்தமை தமிழ் மக்களுக்கும் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ம.க.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீண்ட விளக்கமளித்த சிவாஜிலிங்கம், பிரதான சிங்களக் கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்தார். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்த கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்றார்.