செய்தி: நிரல்
மார்ச் 22 21:41

சிங்கள யாத்திரிகர்கள் இரணைமடு, கொடிகாமம் நிலையங்களில் பராமரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவி வருவதையடுத்து இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்த சிங்கள யாத்திரிகர்கள் அழைத்து வரப்பட்டு தமிழர் தாயகமான வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள கொடிகாமம் பிரதேசத்திலும் கிளிநொச்சி இரணைமடுப் பிரதேசத்திலும் 14 நாட்களுக்குத் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர். இந்தப் பிரதேசங்களில் உள்ள இலங்கை விமானப் படையினரின் முகாம்களில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தென்நூற்றுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர்.
மார்ச் 21 21:26

அனுராதபுரம் சிறைச்சாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு- மூன்று கைதிகள் உயிரிழப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் வடமத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் இதனால் கைதிகளை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாலேயே மூன்று கைதிகள் உயிரிழந்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் இலங்கைச் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தவில்லை.
மார்ச் 20 23:40

விமானப்படைத் தளங்களில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் நிலையங்கள்

(முல்லைத்தீவு, ஈழம் ) இல்ங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் மக்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களை அமைத்து வருகின்றது. ஏலவே மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் பிரதேசங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் கொரோனா வரைஸ் தனிமை்ப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள இலங்கை விமானப்படையினரின் முகாமிலேயே கொரோனா தடு்ப்புத் தனிமைப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வருகை தந்த 41 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மார்ச் 19 21:44

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழ் இளையோரின் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

(மட்டக்களப்பு, ஈழம் ) தாயகப் பிரதேசமான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பிரித்தானியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த 61 வயதான நபர் ஒருவருக்குக் கொரேனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், விசேட சிகிச்சை நிலையம் ஒன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு விசேட சிகிச்சை நியைலம் எனப் பெயரிடப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17 22:05

மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்- மேலும் பலருக்கு ரத்தப் பரிசோதனைகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வரை 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சுகாதார இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 267 பேருக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்ஸ், தென்கொரிய, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களினாலேயே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் சுகாதா அமைச்சர் பவித்திரா வன்னியராட்சி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.