செய்தி: நிரல்
ஏப். 17 14:42

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறப்பட்ட போதும் ஏற்க விரும்பாத கோட்டாபய

(வவுனியா, ஈழம்) நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் மே மாத இறுதியில் நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபசக்ச முற்படுகின்றார். ஆனால் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மருத்துவர் சங்கம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய எதிர்வரும் 20 ஆம் திகதி அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளோடு கலந்துரையாடவுள்ளதாக அறவித்துள்ளார்.
ஏப். 16 15:53

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது- இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு

(வவுனியா, ஈழம்) கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வதால் எதிர்வரும் மே மாதம் கூட நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே திட்டதிட்டபடி தேர்தல் நடத்தப்பட்டு எதிர்வரும் யூன் மாதம் மாதம் இரண்டாம் திகதி புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாத நிலை ஏற்படும் எனவும் இதனால் இலங்கை உயர் நீதிமன்றத்தை நாடி ஆலோசனை பெறுமாறு ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாகவும் மகிந்த தேசப்பரிய தெரிவித்துள்ளார். ஆனால் உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை பெற வேண்டிய தேவையில்லையென கோட்டாபய ராஜபக்ச தம்மிடம் கூறியதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஏப். 15 22:56

தனிமைப்படுத்தலுக்காகத் திருகோணமலைக்கு ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

(வவுனியா, ஈழம்) கொரோனா வைரஸ் தொற்றியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களை திருகோணமலை சம்பூரில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்குக் கொழும்பில் இருந்து ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றிலேயே கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமெனச் சந்தேகிக்கப்பட்ட நபர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். கொழும்பு பிரதான வீதியில் உள்ள வரக்காபொல நகரில் இந்த விபத்து இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயங்கள் இன்றித் தப்பிய கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேக நபர்கள் மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
ஏப். 14 23:49

யாழ்ப்பாணத்தில் 15 ஆக அதிகரிப்பு- ஆனால் புதிதாக எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 14 பேருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் 12 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏப். 14 22:43

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருந்த ரிஷரட் பதியுதீனின் சகோதர் ரியாத் பதியுதீனைக் கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.