செய்தி: நிரல்
செப். 12 10:39

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 46/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையின் 52 ஆவது அமர்வு ஆரம்பமாகியபோது இலங்கை விவகாரம் தொடர்பான பரஸ்பர உரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். சுயாதீன உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தத் தேவையான ஆதரவு மற்றும் வளங்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமெனவும் அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
செப். 11 21:38

ராஜபக்ச குடும்பத்தை ரணில் காப்பாற்றுகிறார்- சஜித் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயங்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் அதில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஸனப் பெரமுனக் கட்சிக்கும் உடன்பாடில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செப். 10 22:22

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த குருமார் ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பௌத்த குருமார் மாபெரும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவே பௌத்த குருமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். கொழும்பு ஸ்ரீ போதிராஜா மாவத்தையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படுமென பௌத்த குருமார் கூறியுள்ளனர். சனிக்கிழமையும் பௌத்த குருமாரின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
செப். 07 09:13

ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முப்பத்து ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன பரிந்துரைத்த தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக பெதுஜன பெரமுனக் கட்சி கூறியுள்ளது.
செப். 05 21:40

சர்வதேச விசாரணைப் பொறிமுறை நிராகரிக்கப்படும்- வெளியுறவு அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை செய்வதற்கான சர்வதேசப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு தொடர்பாக விளக்கமளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறினார். இலங்கையின் மீது ஜெனீவா மற்றும் சர்வதேச நாடுகளினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்தவொரு தீர்வுகளையும் இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எதிர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார்.