செய்தி: நிரல்
ஜன. 01 22:29

அமெரிக்க இருநூற்று நாற்பது மில்லியன் டொலர்களை 2022 இல் வழங்கியது- தூதுவர் விளக்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா வழங்கிய நிதியுதவிகள் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் விளக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இலங்கைக்கு இருநூற்று நாற்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியுதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக ருவிற்றர் தளத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கே உதவியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
டிச. 29 21:43

கடன் வழங்கும் நாடுகளிடம் இருந்து எழுத்துமூல உறுதிமொழிகள் இல்லை

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மேலும் தாமதமடைவதற்குச் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு இழுபறி மாத்திரம் காரணம் அல்லவென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கைக்கு நிதியுதவி வழங்கத் தயாராக இருப்பதாகக் கடன் வழங்கும் சில நாடுகள் கூறுகின்றன. ஆனாலும் இதுவரையும் கடன் வழங்குநர்கள் முறைப்படியோ அல்லது எழுத்துபூர்வமாகவோ உறுதியளிக்கவில்லை என்றும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிச. 27 23:16

கட்டணம் உயர்த்தப்படவில்லையானால் மின் தடை மேலும் அதிகரிக்கப்படும்- அமைச்சர் காஞ்சன

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவு முழுவதிலும் குறைந்தது எட்டு மணிநேர மின் தடை ஏற்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால் குறைந்தளவு மணி நேரம் மாத்திரமே மின் தடை ஏற்படும் எனவும் அமைச்சர் கூறினார். நாளாந்த மின்வெட்டைக் குறைக்கும் வகையில், மின்சார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும். இல்லையேல் மின்வெட்டு நேரத்தை மேலும் ஆறு மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். தற்போது இரண்டு மணி நேர மின்வெட்டு மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின்சாரசபை நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
டிச. 21 23:57

ஜனவரி மாதம் முதல் பத்து மணிநேர மின்சார வெட்டு

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், இலங்கையில் மின்சாரத் தடையும் ஏற்படவுள்ளது. டிசெம்பர் மாதம் முப்பத்து ஒராம் திகதிக்குப் பின்னர், இலங்கைத்தீவு முழுவதிலும் பத்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளர். இதனால் இலங்கைதீவு முழுவதும் செயலிழக்க நேரிடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிச. 19 22:36

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தத் திட்டம்

(வவுனியா, ஈழம்) மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த திட்டமிடப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பிரேரணை நிறைவேற்றப்பட முன்னர் மாகாணங்களுக்கான எல்லை மீள் நிர்ணய சபை தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.