செய்தி: நிரல்
பெப். 11 23:19

இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதை இந்தியா விரும்புகிறது- பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதையே இந்திய மத்திய அரசு விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த ஆண்டு இலங்கை அரசியலில் பெரியதொரு மாற்றம் நிகழும் என இந்தியா எதிர்ப்பார்க்கின்றது. மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையும் என இந்தியா நம்புவதாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை கைப்பற்றுவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கமல்ல. மாறாக பத்து ஆண்டுகளுக்கு இலங்கையில் ஆட்சி செய்யக்கூடிய அடித்தளக் கொள்கை ஒன்றை வகுப்பதே பிரதான இலக்கு என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.
பெப். 11 16:26

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் குறித்த பரிசோதனை அறிக்கை விரைவில்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனைக் கட்டட வளாகத்தில் கண்டறியப்பட்ட போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தொடாபான காபன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியாகுமென எதிர்பார்ப்பதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனையை செய்து முடிப்பதற்காக இரண்டு வார அவகாசம் கோரப்பட்டிருந்தன.
பெப். 11 11:27

புதிய அரசியல் யாப்புகான வரைபில் மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிாரங்கள் இல்லை- அமைச்சர் லக்ஸ்மன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கான வரைபில் மாகாணங்கள் இணைக்கப்படுதல், மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்கள் எதுவும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியயெல்ல கன்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது கூறியுள்ளர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பௌத்த குருமார் அதிகளவில் கலந்துகொண்டனர். அங்கு புதிய அரசியல் யாப்புக்கான வரைபு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் திருத்தங்கள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பெப். 11 06:11

மட்டக்களப்பில் தொடர்மழை- நெல் வயல்கள் நீரில் ழுழ்கி அழிந்துள்ளதாக விவசாயிகள் கவலை

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் அதிகளவு நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக அறுவடை ஆரம்பித்துள்ள முற்பகுதியிலே கனழமை பெய்ததனால் அறுவடை செய்த நெல் விற்க முடியாமலும், உணவுக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் அறக்கொட்டித்தாக்கத்திலிருந்து மிஞ்சிய வேளாண்மையை அறுவடை செய்யும் வேலையில் கனமழை பெய்து அழித்திவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.
பெப். 10 13:55

ஜே.வி.பியின் ஸ்தாபக உறுப்பினர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர அரசியலில் ஈடுபடவுள்ளார்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக, 1971, 1987- 88 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட ஜனதா விமுக்திப் பெரமுன என்று சிங்களத்தில் அழைக்கப்படும் ஜே.வி.பி யின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர அரசியலில் ஈடுபடவுள்ளார். அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான தற்போதைய ஜே.வி.பி ரோஹன விஜேவீரவின் குடும்பத்துடன் முரண்பட்டுள்ளது. இந்த நிலையில் உவிந்து விஜேவீர புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளையும், தனது தந்தையின் சோசலிசக் கொள்கையையும் பின்பற்றவுள்ளதாகக் கூறியுள்ளார். ரஷியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட உவிந்து விஜேவீர. சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.