செய்தி: நிரல்
பெப். 13 08:35

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கும் பணி நிறைவு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரின் போது அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அமைப்புப் பணி இறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெப். 12 23:33

பொறுப்புக்கூறல் தொடர்பாக ஜெனீவாவுக்கு விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்- மீண்டும் வாக்குறுதி

(வவுனியா, ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள், உயர் அதிகாரிகளுடனும் சந்திப்பு இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபையின் சட்டப்பிரிவுத் தலைவர் மோனா ரிஷ்மவி (Mona Rishmawi) மற்றும் உயர் அதிகாரிகளை நீதியமைச்சர் தலதா அத்துகோரள சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.
பெப். 12 11:45

யாழ் நாயன்மார்க்கட்டில் உள்ள வீடொன்றில் முகமூடி நபர்கள் தாக்குதல்- பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டவேளை பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் உடனயாக சம்பவ இடத்திற்குச் செல்லவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.
பெப். 11 23:19

இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதை இந்தியா விரும்புகிறது- பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதையே இந்திய மத்திய அரசு விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த ஆண்டு இலங்கை அரசியலில் பெரியதொரு மாற்றம் நிகழும் என இந்தியா எதிர்ப்பார்க்கின்றது. மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையும் என இந்தியா நம்புவதாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை கைப்பற்றுவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கமல்ல. மாறாக பத்து ஆண்டுகளுக்கு இலங்கையில் ஆட்சி செய்யக்கூடிய அடித்தளக் கொள்கை ஒன்றை வகுப்பதே பிரதான இலக்கு என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.
பெப். 11 16:26

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் குறித்த பரிசோதனை அறிக்கை விரைவில்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனைக் கட்டட வளாகத்தில் கண்டறியப்பட்ட போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தொடாபான காபன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியாகுமென எதிர்பார்ப்பதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனையை செய்து முடிப்பதற்காக இரண்டு வார அவகாசம் கோரப்பட்டிருந்தன.