செய்தி: நிரல்
ஏப். 18 23:30

கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்காவின் இரண்டு போர்க் கப்பல்கள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருகை

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் தற்போது பிரதான சிங்களக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கைக் கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவடுவதற்காக அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று வியாழக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் (USNS Millinocket), யு.எஸ்.எஸ் ஸ்ப்ருவன்ஸ் (USS Spruance), ஆகிய இரண்டு போர்க்கப்பல்களே இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளன.
ஏப். 17 23:21

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 42 பேர் பலி

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்தார். கடந்த 13ஆம் திகதி காலை ஆறு மணியிலிருந்து இன்று புதன்கிழமை காலை ஆறு மணிவரை வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை ழுமுவதிலும் முப்பத்தியொரு வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
ஏப். 17 15:29

மட்டக்களப்பைச் சேர்ந்த பத்துப்பேர் விபத்தில் பலி- இருவர் ஆபத்தான நிலையில்- மஹியங்கனையில் சம்பவம்

(வவுனியா, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் சென்றுவிட்டு அம்பாறையில் உறவினர்கள் சிலரின் வீட்டுகளுக்குச் சென்று கொண்டிருந்தபோது பதுளை, மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பத்துப்பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புதன்கிழமை அதிகாலை 1.30க்கு மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் மற்றுமொரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரும் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பத்துப்பேரில் ஆறுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஏனைய நான்குபேரும் பதுளை வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப். 16 23:36

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள்- ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்கிறார் ரவி ஆனால் சஜித் விசனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலினால் பிரதான அரசியல் கட்சிகளிடையே நாளுக்கு நாள் மோதல்கள், முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமெனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவருக்குதிடையில் கருத்து முரண்பாடு அதிகரித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படுவார்.
ஏப். 16 17:18

யாழ்ப்பாணம் குப்பிளானில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி- கடும் வெப்பத்தின் பின்னர் மழை

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணத்தில் நீண்டால வரட்சியின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடும் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் யாழ் நகரில் இருந்து பத்துக் கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சுன்னாகம் குப்பிளான் தெற்கு மயிலங்காடு பிரதேசத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக உறவினர்கள் கூறுகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 48 வயதுடைய திருநாவுக்கரசு கண்ணன், 52 வயதான கந்தசாமி மைனாவதி 38 வயதான ரவிக்குமார் சுதா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.