நிரல்
மே 25 18:05

பெண்களுக்குக் கருத்தடை- ஆதாரமற்ற செய்தியெனக் கண்டனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம் மக்கள் மீது சிங்கள ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் போர் நடைபெற்றபோதும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலத்திலும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பௌத்த தேசிய இனவாதச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தன. அதேபோன்ற அணுகுமுறையை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் மீது சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் தொடர்பாகக் கொழும்பில் இயங்கும் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
மே 24 22:38

பாதுகாப்பு ஒப்பந்தம் - அமெரிக்கத் தூதுவர் பௌத்த பீடாதிபதிக்கு விளக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) சீன - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் தீவிரமாக கரிசனை செலுத்தி வருகின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கை இராணுவத்துக்கு அதிகளவு உதவி செய்யவும் இந்தோ- பசுபிக் கடற்பகுதியில் சீன - இலங்கை கூட்டுப் பாதுகாப்பு மற்றும் உதவிகள் குறித்து சீனா தொடர்ச்சியாக இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துடன் பேசி வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவும் இலங்கையுடன் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களைச் செய்வது குறித்துப் பேசி வருகின்றது. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், மாற்றமடையாத வகையில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
மே 24 10:56

சீன - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம், ரணிலுக்குத் தூதுவர் விளக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பின் பின்னர் சீனத் தலைநகர் பீஜிங்கில் செய்துகொள்ளப்பட்ட சீன - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் செங்ஷியுவான் விளக்கமளித்துள்ளார். இலங்கைப் பிரதமர் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பாகவும் சீன - இலங்கைப் பொருளாதார உறவுகள் குறித்தும் பேசப்பட்டதாகக் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது. பூகோள அரசியல் செயற்பாடுகளில் இலங்கையைத் தொடர்ந்தும் சீனாவுடன் நெருக்கமாக வைத்திருப்பதற்கேற்ற முறையிலேயே சந்திப்பு நடந்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மே 23 23:39

பொது மன்னிப்பில் ஞானசார தேரர் விடுதலையானார்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத் தீவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக இருந்து, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொடவின் மனைவி சந்தியா எக்னொலிகொடவையும் அச்சுறுத்தி, நீதிமன்றத்தையும் அவமதித்த குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலையில் பின்பக்க வாசலினால் வெளியேறியுள்ளார். தேரரை வரவேற்க கொழும்பு பொரளை பேஸ்லைன் வீதியில் உள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக பொதுபல சேனா உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பௌத்தகுருமார் உள்ளிட்ட பலர் ஒன்று கூடி நின்றனர்.
மே 23 14:57

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இழுபறி நிலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கூட்டு எதிர்க்கட்சி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் யூன் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறுமென இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஆனால் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி, விவாதத்தை எதிர்வரும் 6, 7 ஆம் திகதிகளில் நடத்துமாறு வலிறுத்தியுள்ளது. எனினும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. விவாதத்தை எப்போது நடத்துவதென அரசாங்கமே தீர்மானிக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
மே 23 14:51

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் - நாளை கற்றல் நடவடிக்கையை ஆரம்பிக்க இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரை அவர்களது வழக்குகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மீண்டும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் உட்பட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிப்பதற்கான உயர்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி உறுதிமொழி வழங்கியுள்ள நிலையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
மே 23 10:32

வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்கவைத்தமைக்கான காரணம்?

(கிளிநொச்சி, ஈழம்) தமிழினஅழிப்பு போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாது நிலமீட்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டு அகதிகளை வடமாகாணத்தில் தங்கவைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்தும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரசபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், குறித்த கலந்துரையாடலை அடுத்து குறித்த அகதிகள் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மாவட்ட அதிபருக்கான மகஜர் மேலதிக அரச அதிபர் தி.திரேஷ்குமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மே 22 10:21

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் கல்விச் செயற்பாடுகளைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரை அவர்களது வழக்குகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் அனைத்துக் கல்விச் செயற்பாடுகளையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நேற்றுத் திங்கட்கிழமை திகதியிடப்பட்ட கடிதமொன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மே 22 10:13

கொழும்புத் துறைமுக அபிவிருத்தி - ஜப்பான், இந்தியா இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதாலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலையிலும், கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்குக் கொள்கலன் முனையத்தில் பாரிய கொள்கலன் கப்பல்கள் வந்து செல்லக் கூடியதாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன. இதற்கான பேச்சுக்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விரைவில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு இந்தியா கோரியிருந்தது.
மே 21 23:17

ஞானசார தேரரைச் சிறையில் பார்வையிட்டார் மைத்திரி!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலை அடுத்து சிங்கள அரசியல் கட்சிகளிடையே பலத்த முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்துள்ளன. கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது. அதேவேளை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.