நிரல்
மே 16 20:38

பயணக் கட்டுப்பாடு- தமிழர் பிரதேசங்களும் முடங்கியது

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவியரீதியில் அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடை காரணமாக தமிழர் தாயகத்தின் வட மாகாணம் கடந்த இரண்டு நாட்களாக முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மேற்படி போக்குவரத்துத் தடை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய வட மாகாண மாவட்டங்கள் முற்றாக செயலிழந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் வாழும் பல லட்சம் தமிழ் பேசும் மக்கள் தமது வீடுகளில் முடங்கியுள்ளனர்.
மே 14 17:17

அரசாங்கத்தின் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் தற்போது ஆட்சி செய்யும் ராஜபக்ச அரசாங்கம் தமிழ் இனத்தை தொடர்ச்சியாக அடக்கி ஆள நினைப்பதன் வெளிப்பாடுதான் முள்ளிவாய்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவு தூபிகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த தீபம் ஏற்றும் தூண்களைச் சேதப்படுத்திய நிகழ்வாகும். இச்சம்பவத்தை தான் மிக வன்மையாகக் கண்டிப்பதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 13 22:45

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முடக்கும் அதேவேளை குருந்தூர் மலையை ஆக்கிரமிக்கும் முனைப்பு

(மன்னார், ஈழம்) தமிழ் இன அழிப்பின் அழியா அடையாளமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஈழத்தமிழர்கள் நினைவுகூருவதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது பொறிமுறைகளூடாகவும் இராணுவத்தின் ஊடாகவும் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் கொவிட் -19 விதிகளையும், நடைமுறைகளையும் பேணி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தினாலும், அது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையின் தமிழர் பகுதியான முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலைப்பகுதியில் கடந்த செவ்வாய் அன்று இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் முழு ஆதரவோடு கொவிட் -19 விதிமுறைகள் மீறப்பட்டு பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மே 13 20:43

புதிய அரசியல் அணியை உருவாக்கும் முயற்சியில் விமல் வீரவன்ச

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பது தொடர்பாக பௌத்த குருமாரை மையப்படுத்திய உயர்மட்டக்குழு ஒன்றின் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன என்ற கூட்டணியில் இருந்து விலகி வேறொரு புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கிச் செயற்படுவதே விமல் வீரவன்ச போன்ற சில உறுப்பினர்களுடைய பிரதான நோக்கம் எனவும் இதனால் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்குள் ஏற்படவுள்ள பிளவுகளைத் தடுக்க முடியாதெனவும் சமதான முயற்சியில் ஈடுட்ட பௌத்த பிக்குமார் சிலர் கூறுகின்றனர்.
மே 11 20:28

மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணக்கம்

(மன்னார், ஈழம் ) வடக்கு கிழக்கு மாகாணத்தில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை அங்குள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்துள்ளது. இந்த நிலையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் யாவும் இணைந்து நிறுத்தவுள்ள உறுப்பினருக்கே முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தனது உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
மே 10 13:10

கைதான இந்திய மீனவர்கள் கொரானா அச்சத்தினால் விடுதலை

(மன்னார், ஈழம் ) இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அயல் நாடான இந்தியாவிலும் கொரோனாவின் அதீத பரவல் காரணமாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், ஏலவே கொரோனாவின் அதி உச்சக்கட்ட பீதியில் இருக்கும் இலங்கை அரசாங்கம் இந்தியாவில் இருந்து கடல் வழியாக நிகழும் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த தனது கடற்படையினரைத் தீவிரமாக ஈடுபடுத்தி வருகின்றது.
மே 09 19:42

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுசேர வேண்டுமெனக் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜ பக்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் பிந்திய பெறுபேறுகளுக்கு அப்பால் இது ஒரு ஆரோக்கியமான அவசியமான ஒருங்கிணைந்த முன்னெடுப்பாகும் இதே போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது காலத்தின் தேவையாகும் என்று தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 08 22:38

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் நீடித்துச் செல்லுகின்றன. கொவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக கட்சியின் முக்கியமான கூட்டங்களை நடத்த முடியாத நிலையிலும் முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் தனித்தனியாகப் பேச்சுக்கள் நடப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திரமுன்னணி ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரன, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருவதாகவும் ஆனாலும் இணக்கம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மே 07 22:34

வேகமாகப் பரவும் கொவிட் 19- தற்காலிக வைத்தியசாலைகள் அமைக்கப்படுகின்றன

(வவுனியா, ஈழம்) இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொவிட்- 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதி தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் இராணுவத்தைப் பயன்படுத்தி கொவிட் சிகிச்சைக்கான புதிய வைத்திய நிலையங்களையும் இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. திருமண வைபவங்கள், விருந்து உபசாரங்கள் மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்துவதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மே 06 22:24

சட்டமா அதிபர் அரசியலில் ஈடுபட விருப்பம்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியதை ஏற்க மறுத்த இலங்கைச் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வாரென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.