செய்தி: நிரல்
ஓகஸ்ட் 16 21:25

அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் சுமந்திரனுடன் பேச்சு நடத்திய பீரிஸ், வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்பு

(மன்னார், ஈழம்) இலங்கை தீவின் அனைத்துப் பகுதிகளும் கொவிட்-19 நோய் தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் டெல்டா பிறழ்வு ஆகியவற்றினால் பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை 16ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மூத்த அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல் . பீரிஸ், ஹெகலிய ரம்புக்வெல, தினேஷ் குணவர்த்தன, பவித்திரா வன்னியராச்சி, டளஸ் அழகபெரும, காமினி லொகுகே மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஓகஸ்ட் 15 23:11

திங்கட்கிழமை முதல் இரவுநேர ஊரடங்குச் சட்டம் அமுல்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முழு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவைகள் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவொரு நிலையில், இரவு நேர ஊரடங்குச் சட்டம் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதேவேளை, கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபயவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 14 22:07

கொவிட்-19 மரணம் நாளுக்கு நாள் அதிகரிப்பு- இரண்டு நாட்களில் 315 பேர் உயிரிழப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொரோனா தொற்றால் கடந்த இரண்டு நாட்களில் 315 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை 160 பேரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 155 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கொவிட் நோய்ப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொது முடக்கம் அல்லது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை மருத்துவர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதாரச் சேவைகள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் சந்தித்துப் பேசியிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
ஓகஸ்ட் 13 08:26

ஏழாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஏலவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஏழாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு கோட்டை நீதிமன்றுக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் (சீ.ஐ.டீ ) தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி அதிகாலை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கொழும்பில் வைத்து முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீனும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீனும் கைது செய்யப்பட்டனர்.
ஓகஸ்ட் 12 21:44

வேமாகப் பரவும் கொவிட். நேற்று மட்டும் 156 பேர் மரணம்- முழுமையாக முடக்குமாறு கோரிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் வேகமாகப் பரவும் கொவிட் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி தினமும் நிகழும் பொது மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அல்லது முழுமையான ஊரடங்கு பிரகடனத்தை உடன் அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பல தரப்பினரும் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கில் செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் நாட்டை முழுமையாக முடக்காவிட்டால் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என இலங்கைத் தாதிமார் சங்கத்தினர் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் கொவிட் வைரஸால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓகஸ்ட் 11 23:06

கோட்டாபய ராஜபக்சவைப் பதவியில் அமர்த்திய ஆனந்த தேரர் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார்

(மன்னார், ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்குப் பாடுபட்டவரும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஆட்சி மாற்றம் அவசியமென வலியுறுத்தியுள்ளார். இலங்கை மக்கள் ராஜபக்சவின் ஆட்சியின் வெறுப்படைந்துள்ளதால், ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படுமென்றும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராஜபக்ச குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்த முருத்தெட்வே ஆனந்த தேரர், அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் கண்டித்தார்.
ஓகஸ்ட் 10 20:04

றிஸாத் பதியூதீன், சகோதரர் றியாஜ் ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(மன்னார், ஈழம்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று 10ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் றிஸாத் பதியூதீனும் அவரின் இளைய சகோதரர் றியாஜ் பதியூதீனும் முதன் முதலாக கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஐர் செய்யப்பட்ட சமயம் சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஓகஸ்ட் 09 20:28

வவுனியாவில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கு இருவர் புதிதாக நியமனம்

தமிழர் தாயகமான வட மாகாணம் வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு உள்ளூராட்சிசபைகளுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருமான அ. சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வவுனியா நகர சபை மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை ஆகிய இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கே இரண்டு புதிய உறுப்பினர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 07 21:55

மன்னாரில் பெறப்பட்ட டெல்ரா வைரஸ் மாதிரிகள் ஐயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கடந்த வாரம் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களிடம் திரிபடைந்த டெல்ரா வைரஸ் பரவியுள்ளதா என்பதனை அறியும் வகையில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனை மாதிரிகள் கொழும்பு ஸ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கு மரப்பணுப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான பொறுப்பதிகாரி டொக்டர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 06 23:11

முடக்கும் நோக்கம் இல்லையென அறிவிப்பு- ஒருவாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 266

(மட்டக்களப்பு, ஈழம் ) வடக்குக் கிழக்கு உட்பட கொவிட் 19 நோய்த் தொற்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத்தீவு முழுவதையும் முடக்கும் நோக்கம் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 98 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை 94 பேரும் செவ்வாய்க்கிழமை 74 பேரும் உயிரிழந்துள்ளனர்.