செய்தி: நிரல்
செப். 20 08:23

பொறுப்புகளில் இருந்து சம்பந்தனை நீக்க குழு நியமனம்

(வவுனியா, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவினால் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்துள்ளார். இதனால் அவரைப் பக்குவமான முறையில் பதவிகளில் இருந்து நீக்குவதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றியில் இருந்து நீக்குவதற்கே திர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செப். 19 23:03

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- எதிர்க்கட்சிகள் கண்டனம்

(வவுனியா, ஈழம்) அமைச்சர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியினால் இலங்கை மீள எழும்ப முடியாத நிலையில் இருக்கும் போது அமைச்சர்களின் எண்ணிக்கை அவசியமற்றது என கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை வழங்கப் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
செப். 16 22:25

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னிலையாக வேண்டும்.
செப். 15 20:33

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இல்லை

(வவுனியா, ஈழம்) வட மாகாணத்தின் மன்னாரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி பொதுமக்களின் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. புதன்கிழமை மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கையெழுத்துகளைப் பெரும் பணிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் முன்னணி மற்றும் சர்வஜன நீதி அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வாகனப் பவனி மூலம் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறும் நடவடிக்கைகள் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப். 13 08:03

நிதியைப் பெற கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சந்தேகங்களைக் கிளப்பி வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் உள்ள கணக்காய்வுக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆயிரக்கனக்கான அரச ஊழியர்களைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை பெரும் நிதிச் சுமை எனவும் அமைச்சர் கூறினார்.