செய்தி: நிரல்
டிச. 25 23:50

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லையென முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கிராமங்களில் வாழும் மக்களுக்கு இதுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தி.கோணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1963ஆம் ஆண்டு 25 குடும்பங்களுடன் கிராம அபிவிருத்திச் சங்கம் பதிவு செய்யப்பட்ட தமிழ் கிராமங்களில் ஒன்று ஆலங்குளம் எனத் தெரிவிக்கும் கோணேசன் இன்று வரைக்கும் 287 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கூறினார்.
டிச. 12 11:22

விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முன்னாள் போராளிகள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது நிர்க்கதி

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, ஒரு நாளேனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு உதவியிருந்தாலோ கைதுசெய்யப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு அமைய கைதுசெய்யப்பட்டு சித்திரவதை முகாம்களான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
டிச. 12 09:31

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது

(கிளிநொச்சி, ஈழம்) தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். இதனடிப்படையிலேயே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
டிச. 11 23:30

ரணிலை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை- மகிந்த தரப்பு புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு

(அம்பாறை, ஈழம்) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், நாளை புதன்கிழமை நாடாளுமன்றம் கூடுகின்றது. அத்துடன் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் சட்டத்திற்கு மாறானது எனக்குறிப்பிட்டு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தனர்.
டிச. 11 12:17

இந்திய ஒன்றியத்தின் 5 மாநிலத் தேர்தல் - பெரும் பின்னடைவைச் சந்திக்கிறது பாஜக!

(சென்னை, தமிழ்நாடு) 2019 இல் இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறச் சூழலில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பின்னடவைச் சந்தித்திருகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கிறது. 15 ஆண்டுகளாக கோலோச்சிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் முந்தையக் காலக்கட்டத்தை விட குறைந்த எண்ணிகையிலான இடத்தையே பாஜக பெற்றுள்ளது. வடகிழக்கு மாகாணத்தில், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. 1956 முதல் 1986 வரை கிளர்ச்சிப் படையாக இருந்து, இந்திய ஒன்றிய அரசுடனான ஒப்பந்தத்தில் பேரில் தேர்தல் பாதைக்கு திரும்பியது இக்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது!