செய்தி: நிரல்
பெப். 14 22:53

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட, கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது. ஆனால் நஷ்டஈட்டை விட நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என தமிழ் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நஷ்டஈடும் உரிய முறையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு ஒன்று நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தது.
பெப். 14 15:20

வடமாகாணத்தைச் சாட்டியே மகிந்த அரசு சர்வதேசத்திடமிருந்து கடன் பெற்றது - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித பலனும் இல்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணம் எனத் தெரிவித்து வடமாகாணத்தைக் காரணம் காட்டி சர்வதேசத்திலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையின் ஏழு மாகாணங்களை அபிவிருத்தி செய்த இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களை இதுவரை அபிவிருத்தி செய்யவில்லை என இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதும் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெப். 14 12:23

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளன - மாவட்ட செயலகம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கூர்மையின் கிளிநொச்சி செய்தியாளர் முன்வைத்த விண்ணப்பத்துக்கு வழங்கிய பதிலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப். 13 23:16

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சந்திரிக்கா - சமகால அரசியல் பற்றி இருவரும் உரையாடினர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைப்பார் என இந்தியா எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று புதன்கிழமை இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடியுள்ளார். புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் சந்திப்பு நடைபெற்றதாக சந்திரிக்காவின் ஊடகத் தொடர்பாளர் கொழும்பில் கூறியுள்ளார்.
பெப். 13 09:13

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு - இன்று கடும் காற்று வீசும் என்பதால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக சீர்குலைந்துள்ளதுடன் இன்றும் இந்த நிலை தொடரும் என்று மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் இன்று புதன்கிழமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றுடனான காலநிலை காணப்படும் எனவும் கடும் காற்று வீசும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.