நிரல்
மார்ச் 28 14:06

கொழும்பில் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை குறித்து தொடர் விசாரணை

(யாழ்ப்பாணம், ஈழம் ) குறைந்த பட்சமேனும் இலங்கைப் படையினர் மீது விசாரணைகளை நடத்தி ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களில் கூறப்பட்டுள்ள சில விதப்புரைகளை நிறைவேற்ற ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட நீதிக் கட்டமைப்பை உருவாக்க அனுமதிக்க முடியாதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன. இந்த நிலையில், இலங்கை நீதித்துறையின் மூலம் போர்க்குற்றமிழைத்த இலங்கைப் படையினர் மீது சில விசாரணைகளை நடத்தி இலங்கை நீதித்துறை சுயாதீனமானது என்பதை காண்பிக்கும் நோக்கிலும் அரசாங்கம் செயற்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மார்ச் 27 22:52

மனித உரிமைச் சபையின் தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதை நிராகரித்தார் மைத்திரி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி என்ற முறையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் தொடர்பாக தனக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லையென மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை தெரிவித்தார். தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் யோசணைக்கு ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் கடந்த 25 ஆம் திதி திருட்டுத்தனமான கையெப்பமிட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பின் புநகர் பகுதியான களுத்துறை, மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளையும் ஜனாதிபதி காரசாரமாக விமர்சித்தார்
மார்ச் 27 10:38

நடப்பு ஆண்டின் ஜெனீவாத் தீர்மானம் இலங்கை அரசாங்கத்துக்கே சாதகம்- மனித உரிமைச் சபையின் பலவீனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் புதிதாக எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை. மாறாக 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த விடயங்களையே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையில் கூட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை நீதிக்கட்டமைப்பு உருவாக்கக்பட வேண்டுமெனத் தெளிவாகக் கூறப்படவில்லை. ஆகவே இந்த ஆண்டு ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தெளிவற்றதும் தமிழ்த்தரப்பை சமாளிப்பதற்கும் ஏற்ற முறையில் அமைந்துள்ளதாகவே அவதானிகள் கூறுகின்றனர்.
மார்ச் 26 23:24

வரவு செலவுத் திட்டத்தை சுதந்திரக்கட்சி எதிர்க்காது - திலங்க சுமதிபால அறிவிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து பயணிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றபோதும், தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஆனாலும் அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்காதெனவும் கட்சி உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேசப்படுகின்றது. ஆனால் அது குறித்து உறுதியாகக் கூற முடியாதெனவும் அவர் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
மார்ச் 26 16:19

ஜெனீவா தீர்மானத்தின் படி கலப்பு நீதிக்கட்டமைப்பை இலங்கை நிராகரித்தமைக்கு ஜே.வி.பி பாராட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் நிரகரித்தமைக்கு சிங்களத் தேசியவாத கடும்போக்குக் கட்சியான ஜே.வி.பி வரவேற்றுள்ளது. ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தோல்வி கண்ட பொறிமுறையாகும். ஆகவே அந்தப் பொறிமுறைச் செயற்பாட்டுக்கு இடமளிக்காமல் துணிவுடன் நிராகரித்தமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மார்ச் 25 17:14

யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரத்து 261 குடும்பங்கள் வீடின்றி நிர்க்கதி - 52 குடும்பங்கள் சிறுவர்களை தலைமைத்துவமாக கொண்டுள்ளன

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் சிங்கள அரச படையினராலும் அவர்களது கைக்கூலிகளாலும் சர்வதேச நாடுகளின் துணையுடன் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 30 ஆண்டு போர்க்காலம் முதல் இன்று வரை ஈழத்தமிழ் மக்கள் உடைமைகள், சொந்த வீடுகள், நிலங்கள், சொத்துக்கள், சுதந்திரம் என அனைத்தையும் இழந்து இன்றுவரை நிராதரவான நிலையிலேயே வசிக்கின்றனர்.
மார்ச் 25 16:43

ஈழத் தமிழர் விவகாரத்தை இலங்கையின் உள்ளகப் பிரச்சினையாக மாற்ற சந்திரிக்கா வியூகம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரென மகிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகிய நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஈடுபடுவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர் விவகாரத்தில் ஜெனீவா மனித உரிமைச் சபையைத் தாண்டி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பேசப்படக் கூடிய நிலைமை வரலாம் என்ற காரணத்தின் அடிப்படையில் சந்திரிக்கா, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுள்ளது.
மார்ச் 24 01:11

பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பாக எழுதிய கமால் குணரட்ணவிடம் குற்றப்புலனாய்வு விசாரணை நடத்த முடியுமா? நீதிமன்றில் கேள்வி

(யாழ்ப்பாணம், ஈழம் ) தகவல் மூலத்தையும் அதன் இரகசியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் 1981 ஆம் ஆண்டு இலங்கை ஒற்றையாட்சி அரசு வெளியிட்ட விசேட அரச வர்த்தமானி இதழின் பிரகாரம், தகவல் ஒன்றைப் பாதுகாத்தல் இரகசியம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ் வார இதழ் ஒன்றில் பிரசுரமான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதியவரின் பெயர் விபரங்களை வழங்க முடியாதென சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரும் அதன் பின்னரான சூழலிலும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஊடகப் பணியாளர்கள் உட்பட 39 செய்திளாளர்கள் இலங்கை அரச படைகளினாலும், அதனுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 23 10:17

அடிப்படைத் தேவைகளுக்கு போராட வேண்டிய நிலை - வீட்டுத்திட்ட நிதியை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போரினால் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் வீட்டுத்திட்டம் வழங்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், வவுனியா - பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மார்ச் 22 23:21

இலங்கைக்கு சீன எக்சிம் வங்கி 989 மில்லியன் டொலர் நிதியுதவி - உடன்படிக்கை கைச்சாத்து

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக சீனாவிடம் இருந்து நிதியைப் பெற்றுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 989 மில்லியன் டொலர் இலகு கடனை வழங்கும் உடன்பாட்டில் சீனாவும், இலங்கையும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கைச்சாத்திட்டனர். சீனாவின் எக்சிம் வங்கி இந்த நிதியுதவியை வழங்குகின்றது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு, 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.