பெப். 21 22:00
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும் உறுதியுமாக நிரூபணமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மாலாவி, மசிடோனியா மற்றும் மொன்றிநீக்ரோ ஆகிய மேலும் ஐந்து நாடுகளை உள்ளடக்கிய கருக்குழு தனது பூச்சிய வரைபை வெள்ளிக்கிழமையன்று கசிய விட்டிருக்கிறது. இன அழிப்புக்கான நீதிகோரல் இன்றி, சுயாதீன சர்வதேசச் சாட்சியப் பொறிமுறையும் இன்றி மேலும் ஒன்றரை வருடம் மீண்டும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை இழுத்தடிக்கும் திட்டத்தின் உண்மைக் குறிக்கோள் இலங்கை அரசுடன் பேரம்பேசுவது அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது என்பது மட்டுமே. தமிழருக்கான நீதி அல்ல.