நிரல்
ஓகஸ்ட் 20 11:39

பளை வைத்தியசாலை வைத்தியர் இலங்கை இராணுவத்தால் கைது- மக்கள் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சி பளை பிரதேச வைத்தியசாலை வைத்தியர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் பதில் வைத்தியரை நியமிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை வைத்தியசாலைக்கு முன்னால் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பளை பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த வைத்தியர் சின்னையா சிவரூபன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 19 22:49

வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட நிலையில் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியானார்

(வவுனியா, ஈழம்) ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இன அழிப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் (Major General) சவேந்திர சில்வா இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழழை இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இந்த நியமனத்தின்போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கைப் படையின் பிரதானியாகப் (Army Chief of Staff) பதவி வகித்திருந்த சவேந்திர சில்வா 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் உக்கிரமடைந்திருந்தபோது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருந்தார்.
ஓகஸ்ட் 19 14:07

கோட்டாபய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் யசூசி அகாசி - மகிந்த ராஜபக்ச சந்திப்பு

(வவுனியா, ஈழம்) நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தின்போது இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் சமாதானத் தூதுவராகக் கடமையாற்றிய யசூசி அகாசி எதிர்க்கட்சித் தலைவர்- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராணுவச் செயற்பாட்டுத் தளமான பென்ரகனின் ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கச் சார்புநாடான ஜப்பான் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளது.
ஓகஸ்ட் 19 10:59

மூதூர் - கூனித்தீவு பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்கு இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் தீர்மானம்

(திருகோணமலை, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், சர்ச்சைக்குரிய நிலையில் காணப்படும் திருகோணமலை - மூதூர் கூனித்தீவு பிரதேசத்தில் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஓகஸ்ட் 18 22:20

ஒற்றையாட்சியை நியாயப்படுத்தும் மற்றுமொரு வேட்பாளர் அறிவிப்பு - ஜே.வி.பி கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தமக்குச் சார்பான சிறிய கட்சிகள், அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடவுள்ளது. அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாக்சிய சிந்தனையுடைய அல்லது இடதுசாரிப் பண்புள்ள கட்சியாக ஜே.வி.பி தம்மை முன்னிலைப்படுத்தினாலும், சிங்கள பௌத்த தேசியவாதக் கண்ணோட்டத்துடனேயே அவர்களின் அரசியல் செயற்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு மாற்றீடான பலமான சக்தியாக ஜே.வி.பி தம்மை அடையாளப்படுத்தியுள்ளது.
ஓகஸ்ட் 18 20:55

இரணைமடுக் குளத்தில் நீர் வற்றியதால் கிளிநொச்சியில் குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி

(கிளிநொச்சி, ஈழம்) நாட்டில் கடும் வரட்சி நிலவிவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் என்.நவரூபன் தெரிவித்தார். இரணைமடுக் குளத்தில் இருந்து இடதுகரை வாய்க்கால் மூலம் கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படுகின்ற நீர் சுத்திகரிக்கப்பட்டு, பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகமும், பல கிராமங்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலமும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஓகஸ்ட் 17 21:19

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(மன்னார், ஈழம்) வடமாகாணம் - மன்னார் மாவட்டத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாகத் தொழில் புரிவதற்காகச் செல்லும் தமிழ்க் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் மன்னார் மாவட்டத்தில் தொழில் துறைகளில் பெரியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் வறுமை, பொருளாதார கஷ்டம் காரணமாக வீட்டுப்பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன்னார் மாவட்ட செயலக அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். 1983-90 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போர்ச்சூழலினால், இந்தியாவுக்குப் பலர் இடம்பெயர்ந்திருந்தனர்.
ஓகஸ்ட் 16 22:11

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பார்வையிட்ட சர்வதேசம்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தென்பகுதித் துறை முகத்தின் நுழைவாசலாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமையுமென அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உயர்மட்ட வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் அம்பாந்தோட்டைக்குச் சென்று சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்குரிய சாதகமான நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும திஸ்ஸ விக்ரமசிங்க கூறியுள்ளார். இலங்கைத் துறை முகங்களை மையப்படுத்திய சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாடு ஒன்று கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 16 15:56

பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் சிவில் அமைப்புகளின் பொறுப்பு என்ன?

(வவுனியா, ஈழம்) மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் வடக்கு - கிழக்குத் தாயகப் பிரதேசங்களுக்குச் செல்லும் சிங்கள ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பல்வேறு உறுதிமொழிகளை வழங்குகின்றனர். இலங்கையின் புதிய அரசியல் யாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள நகல் வரைபில் கூறப்பட்டுள்ளதையே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 15 22:42

ரணில் - சஜித் இருவரோடும் மங்கள சமரவீர உரையாடல்

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை அறிவிக்குமாறு கட்சி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகக் களமிறக்கும் முயற்சிகளும் இடம்பெறுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் நியமனம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவுடன் முரண்பாட்டில் உடன்பாடாகக் கலந்துரையாடி வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகத் தெரிவு செய்யும் ஏற்பாடுகளும் முத்த உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ண ஆகியோர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோருடன் உரையாடியுள்ளனர்.