நிரல்
ஜூலை 25 22:55

இடிந்துபோன மோடியின் தேசியவாதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் கொள்கைளில் பாரிய சரிவு என்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பொறின்பொலிஸி (Foreign policy)என்ற கொள்கை இணையத்தளம் கூறுகின்றது.
ஜூலை 25 22:25

சிறுமி உயிரிழந்த விவகாரம்- றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட நால்வரை தொடர்ந்து விசாரணை செய்ய உத்தரவு

(வவுனியா, ஈழம்) மலையகப் பகுதி சிறுமி இஷாலினி தீ காயங்களினால் உயிரிழந்தமை மற்றும் அவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸாரினால் கடந்த வெள்ளி அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட நால்வரை நாளை திங்கள் 26 ஆம் திகதி வரையான 48 மணித்தியாலயங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கடந்த சனிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் கொழும்பு பௌத்தலோக மாவத்த இல்லத்தில் வீட்டுப்பணிக்காகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட டயகம பகுதி சிறுமியான ஜுட் குமார் இஷாலினி தீயினால் ஏற்பட்ட எரிகாயத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 3ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி மரணமடைந்தார்.
ஜூலை 24 20:49

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பொதுத் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முயற்சி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்திற்குள் பொதுத் தலைமைத்துவம் ஒன்றை வழங்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார். சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எதிர்க்கட்சிகளின் பொதுத் தலைவராகச் செயற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இந்தக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரோடும் உரையாடியுள்ளார்.
ஜூலை 23 14:12

றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட மூவர் கைது

(வவுனியா, ஈழம்) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கைத்தொழில் வாணிப அமைச்சருமான றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட மூவர் வெள்ளிகிழமை அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் பணிபுரிந்த நுவரெலியா மாவட்டத்தின் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி இஷாலினி தீ காயங்களினால் மரணமடைந்தமை மற்றும் அச்சிறுமி மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பில் கொழும்பு பொரளைப் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொண்டுவரும் நிலையிலேயே றிஷாத் பதியூதீனின் மனைவி அவரின் சகோதரர் மற்றும் டயகம பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பு முகவர் ஆகிய மூவர் பொரளை பொலிஸாரினால் 23 ஆம் திகதி வெள்ளி அதிகாலை கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 22 23:55

தமிழ் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு நியமனம்

(வவுனியா, ஈழம்) நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணியாற்றிய மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய சிறப்புக் குழுவொன்று இன்று வியாழக் கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இந்தக் குழுவை நியமித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் திலீப பீரிஸ் தலைமையிலான குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார்.
ஜூலை 20 23:20

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளினால் தோல்வி

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சர் உதயன் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும் ஆதரவாக 81 வாக்குகளும் பெறப்பட்டன. இன்று செவ்வாய்க்கிழமை இந்தப் பிரேரணை தொடர்பான விவாதம் நடைபெற்றுப் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
ஜூலை 19 22:25

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள பிரேரணை தோற்கடிக்கப்படும்- அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து எரிபொருள் சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடிக்குமென ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அதிகாரபூர்வமாக இன்று திங்கட் கிழமை அறிவித்துள்ளது. இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுஜனப் பெரமுனக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
ஜூலை 18 23:05

சிங்களக் கட்சிகளின் உள்ளக முரண்பாடுகள்

கோட்டாபய மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான திஸாநாயக்கா, பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார். மூத்த உறுப்பினராக இருந்தும் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றும் இது பழிவாங்கும் செயல் என கொழும்பில் சென்ற வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஜூலை 18 22:53

தலைமன்னார் ஐந்தாவது மணல் தீடையில் கரையொதுங்கிய சடலம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கடல் பரப்பில் உள்ள ஐந்தாவது மணல் தீடையில் கரையொதுங்கிய சடலத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டதுடன் அதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கையளித்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தலைமன்னார் கிராமத்திற்கு அருகில் கடல் நடுவே உள்ள ஐந்தாம் மணல் தீடையில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றினை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் குறித்த சடலம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தமக்கு தகவல் வழங்கியதாக தலைமன்னார் பொலிஸார் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.
ஜூலை 17 22:00

மன்னாரில் கடற்றொழிலாளர்கள் கொவிட் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென பணிப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவர்கள் இந்திய நாட்டு மீனவர்களுடன் இலகுவாக தொடர்புபடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. இந்திய நாட்டில் பரவிவரும் திரிபடைந்த கொரோனா வைரஸ் அந்த நாட்டு மீனவர்கள் மூலம் இலங்கை மீனவர்களுக்கும் தொற்றும் அபாய நிலையும் காணப்படுகிறது.