செய்தி: நிரல்
செப். 27 22:01

கொழும்பில் இராணுவ முகாம்கள் அதிகரிப்பு என்கிறார் பீரிஸ்

(வவுனியா, ஈழம்) உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அரச இரகசியங்கள் சட்டத்தின் பிரகாரம் கொழும்பில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் பீரிஸ் கூறினார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் பீரிஸ், அமைச்சரவை இரகசியங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் இச் சட்டம் 67 வருடங்கள் பழமையானது என்றும் இச் சட்டத்தைப் பயன்படுத்திப் பாதுகாப்பு வலையம் ஒன்றை உருவாக்க முடியாதெனவும் கூறினார்.
செப். 25 06:15

இந்தியா நான்கு மாதங்களில் தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியது

(வவுனியா, ஈழம்) இலங்கையில் மார்ச் மாதம் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான நான்கு மாதங்களில் இந்தியா தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு மில்லியன் டொலர்களைக் கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா மாறியுள்ளதாக டெய்லி பைனான்சியல் டைம்ஸ் கூறுகின்றது. இலங்கையின் மொத்தக் கடனில் அதிகளவு கடன்கள் சீனாவுக்கு உரியது. ஆனாலும் கடந்த நான்கு மாதங்களில் இந்தியா வழங்கிய கடன் தொகையின் அளவு மிகவும் கூடுதலானது என்றும், அதன் கடன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடிந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
செப். 25 05:49

தாமரைக் கோபுரத்தின் கடனைச் செலுத்த, நாளாந்தம் 41 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறப்பட வேண்டும்

கொழும்பு மருதானைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம், இலங்கைக்கு அதிகளவு கடன் சுமைகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனை முழுமையாக செலுத்த வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் நாற்பத்து ஓராயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சனிக்கிழமை கொழும்பில் தெரிவித்துள்ளார்.
செப். 23 14:31

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடன் இந்தியத் தூதுவா் உரையாடல்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைக்குப் பொருத்தமான கடன் வசதிகள் மற்றும் பொருட்கள் நன்கொடை செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்தியாவுடன் இலங்கை கலந்துரையாடியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து முன்மொழியப்பட்ட கூட்டு வேலைத் திட்டங்கள் மற்றும் நோக்கங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்த்தன, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். பிரதமரின் அலரி மாளிகையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மேத்யூஸ் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக இலங்கைக்கு வழங்கிய கடன் மறுசீரமைப்புக் குறித்தே விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
செப். 22 07:47

நிதி வழங்குநர்களிடம் இருந்து உதவியைப் பெற இலங்கை தொடா்ந்து பேச்சு நடத்த வேண்டும்

(வவுனியா, ஈழம்) இலங்கைஅரசாங்கம் தமக்குரிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை, சர்வதேச கடன் வழங்குநர்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெறும் மேலதிகமான கலந்துரரையாடல்களின்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நிதி ஆலோசகர்களான க்லிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) மற்றும் லசார்ட் (Lazard) ஆகியோரின் உதவியுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.