நிரல்
பெப். 09 23:09

பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென ராஜபக்ச தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதிடம் வேண்டுகோள்

(வவுனியா, ஈழம்) புதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் நடத்த வேண்டுமென ராஜபக்ச சார்பு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் பௌத்த பிக்குமார் நடத்திய போராட்டம் மற்றும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென மகாநாயக்கத் தேரர்கள் அனுப்பிய கடிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடிய ராஜபக்ச தரப்பு அமைப்புகள், பதின்மூன்று பற்றிய பேச்சைக் கைவிடுமாறும் கேட்டதாக அறிய முடிகின்றது.
பெப். 08 22:45

பதின்மூன்றுக்கு எதிராகக் கொழும்பில் பிக்குமார் போராட்டம்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கவுரையின்போது கூறியபோது. கொழும்பில் பௌத்த குருமார் பதின்மூன்றுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகப் பெருந்திரளான பெளத்த பிக்குமார் கொழும்பில் நடத்திய பேரணியால் கொழும்பு நகரம் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்தது. கலகமடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
பெப். 05 23:01

வடக்கில் இருந்து கிழக்குக்குப் பேரணி- இரண்டாம் நாளும் பெருமளவு மக்கள் பங்கேற்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத்தீவின் எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடராக மேற்கொண்டு வரும் பேரணியில் பொதுமக்கள் பலரும் பங்குபற்றி வருகின்றனர். தமிழ்த்தேசியக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளின்றி கலந்துகொண்டுள்ளனர். நான்காம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த பேரணி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் முல்லைத்தீவில் நிறைவடைந்துள்ளது. இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவினர்களுக்காகப் பேரணியில் பங்குபற்றிய பொதுமக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தியிருந்தனர். பெரும் திரளான மக்கள் முள்ளிவாய்காலில் ஒன்றுகூடியிருந்தனர்.
பெப். 02 23:14

பதின்மூன்றுக்கு மகாநாயக்கத் தேரர்கள் எதிர்ப்பு- இலங்கைத்தீவைப் பிளவுபடுத்தும் என்று கடிதம்

(வவுனியா, ஈழம்) புதின் மூன்றாவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கைத்தீவின்; சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பாரிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்குமென மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஏல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட சில முக்கியமான மூத்த தேரர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை மகாநாயக்கத் தேரர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
ஜன. 31 22:39

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம்- தேரர்கள் ரணிலுக்குக் கடிதம்

(வவுனியா, ஈழம்) பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பதின் மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று தேரர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.
ஜன. 30 22:14

உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து தேர்தலைக் கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதற்குப் பின்னால் உள்ள அரசியல் செல்வாக்குத் தொடர்பாக பெப்ரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜன. 28 20:47

அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடுகள் மற்றும் வெளிநாடுகள் பலவற்றில் தனது வர்த்தகச் செயற்பாடுகளைத் துரித்தப்படுத்தி வரும், இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானியின் அதானி குழும கூட்டுத்தாபனம் மிகப் பெரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது. அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் (Hindenburg Research) வெளியிட்ட அறிக்கை குறித்து இந்தியத் தேசியப் பங்குச் சந்தை (National Stock Exchange of India) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) விசாரணை நடத்த வேண்டும் என்று சோனியாவை மையப்படுத்திய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஜன. 26 22:47

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கமா?

(வவுனியா, ஈழம்) இலங்கைக்குக் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இக் கலந்துரையாடல்கள் தொடர்பாக அதிகாரபூர்வமாக அரசாங்கம் அறிவித்தபோதும் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.
ஜன. 25 23:41

தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் ரணில் ஏமாற்றுகிறாராம்- பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் சமூகத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்றும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோதே 2017 ஆம் ஆண்டுதான் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ரணில் பேசுகிறார். தமிழரசுக் கட்சி கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் சமஸ்டித் தீர்வு பற்றிப் பேசவில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டமும் தீர்வு அல்ல என்று கூறுகின்றனர்.
ஜன. 23 22:27

ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதியவர்களை நியமிக்க அரசாங்கம் முயற்சி- பீரிஸ் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களில் ஏழு தடவைகள் முயற்சி மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் முற்படுவதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற முடியாதெனவும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ், அது அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் கூறினார்.