நிரல்
நவ. 20 21:20

இலங்கை கடற்படையினர் மீது பள்ளிமுனை மக்கள் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் - பள்ளிமுனை கடற்படை முகாம் தொடர்பில் பள்ளிமுனை தமிழ் மக்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்துமாறு மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். மன்னார் - பள்ளிமுனை தமிழ் மீனவர்களின் வீடுகள் மற்றும் அவர்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை கடற்படையினரை வெளியேற்றக் கோரி 21 வீட்டு உரிமையாளர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை 33 ஆவது தவணையாக மன்னார் மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நவ. 20 16:47

ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்க மைத்திரி ஏற்பாடு - ராவண பலய என்ற பௌத்த அமைப்பு கூறுகின்றது

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழ் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்து வருவதாக ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார். பௌத்த பிக்குகளை மையமாகக் கொண்ட பொதுபலசேனா, ராவண பலய ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது ஞானசாரதேரரை விடுதலை செய்ய இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இத்தானந்தே சுகத தேரர் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
நவ. 20 11:49

நாவாந்துறை மீனவரது படகு தீக்கிரை - வாழ்வாதாரத்தைக் கொண்டுநடத்த முடியாது நிர்க்கதி

(யாழ்ப்பாணம், ஈழம்) மீன்பிடியை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் புரிந்துவரும் நிலையில் யாழ்ப்பாணம் - நாவந்துறையைச் சேர்ந்த மீனவர் ஒருவரது மீன்பிடிப் படகு ஒன்று அடையாளந் தெரியாதோரால் எரியூட்டப்பட்டுள்ளது. அன்ரன் சிலுவைதாசன் என்பவருக்குச் சொந்தமான 3 இலட்சம் ரூபா பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே நேற்றுமுன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நவ. 19 22:16

மனித எச்சங்களை மரபணு பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை தாமதமாகுவதாக சட்டத்தரணிகள் விசனம்

(மன்னார், ஈழம்) மன்னாரில் திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகளை காபன் பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணி தாமதமாகுவதாக இலங்கை சட்டத்தரணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள எலும்புகளை வெளிநாட்டிற்கு ஆய்வுக்காக அனுப்புவதாயின் அதற்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் செல்லும் எனவும் அவர்கள் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
நவ. 19 13:41

இலங்கை நாடாளுமன்றம் 4 ஆவது தடவையாக ஒத்திவைப்பு - மகிந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை

(யாழ்ப்பாணம், ஈழம்) பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடிய இலங்கை நாடாளுமன்றம் 4 ஆவது தடவையாக இன்று 7 நிமிடத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் நிலவிவரும் நெருக்கடியை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதன்போது தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான அறிவித்தலை பிரதி சபாநாயகர் விடுத்தார். இதனையடுத்து தெரிவுக் குழுவின் உறுப்பினர்களது எண்ணிக்கையில் அதிகளவானவர்கள் தங்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணர்வதன வலியுறுத்தினார்.
நவ. 19 11:44

நாடாளுமன்றம் இன்று மதியம் கூடுகின்றது - பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுப்பு

(மன்னார், ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதலை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை 3 ஆவது முறையாகவும் நிறைவேற்றப்பட்ட நிலையில் மகிந்த தரப்பு ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் காடையர்கள் போன்று நடந்துகொண்டதுடன் மோதலில் ஈடுபட்டனர். சபாநாயகரின் ஆசனத்தை மகிந்த ஆதரவாளர்கள் கைப்பற்றியிருந்ததுடன் சபாநாயகரை நோக்கி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் சபையின் ஓரமாக நின்று நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்.
நவ. 19 06:59

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு!

ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு தமிழகம் திரும்பிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கடந்த ஓகஸ்து மாதம் 9 ஆம் நாள் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். 55 நாட்கள் சிறை வாசத்தின் பின்னர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார். சென்னை காவல்நிலையத்தில், நாள்தோறும் கையெழுத்து இட்டு வரும் திருமுருகன் காந்தி மீது பல மாதங்களுக்கும் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசியதை குறிப்பிட்டு வழக்கு பதியப்பட்டுள்ளதாக மே17 இயக்கம் தெரிவித்துள்ளது! ஓக்டோபர் 4 ஆம் நாள் சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி கடுமையான உடல்நலக்குறைவின் காரணமாக, மருத்துவமனையில் தங்கி சில நாட்கள் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
நவ. 19 03:06

மக்களின் பெருந்திரள் எழுச்சியே தீர்வினைப் பெற்றுத்தரும் - சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன்

இந்தியச் சிறைகள் 'சித்திரவதைக் கூடங்களாக' செயல்படுவதாக பலதரப்பட்ட மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு காலக்கட்டங்களில், அரசியல் கைதிகளே கூட உளவியல் நெருக்கடிக்கு உள்ளாவதும், தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதும் நிகழ்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சூழலியல் செய்ற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் உள்ளிட்ட பலரும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகாவும் செய்திகள் வந்தன. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் அவர்களிடம் இதுகுறித்தும் தமிழக சமூக செயற்பாட்டுக் களம் குறித்தும் கூர்மை செய்தித்தளம் விரிவான அலசலை மேற்கொண்டது.
நவ. 18 23:17

பதினொரு தமிழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட விசாரணையை நடத்திய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

(வவுனியா, ஈழம் ) மகிந்த ராஜபக்சவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கொலை, கடத்தல், அச்சுறுத்தல் ஆகிய முக்கிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா காரணமின்றி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் பதவியேற்றவுடன் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற அதிகார துஸ்பிரயோகங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை விசாரணை நடத்துவதில் நிசாந்த சில்வா ஈடுபட்டிருந்தார்.
நவ. 18 21:22

புதிய பிரதமரைத் தெரிவுசெய்யுமாறு சர்வகட்சிக் குழுக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன பரிந்துரை

(கிளிநொச்சி, ஈழம்) நாடாளுமன்றத்திற்கு புதிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுமாறும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி செயற்பட்டு ஒரு முடிவைக் காண்போம் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் ஆனால் இப்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக் காண பல யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தான் முன்வைத்துள்ளதாகவும் எனினும் அவை ஒன்றும் நிறைவேறவில்லை என குறிப்பிட்டதுடன் தான் கூறியவாறு நாடாளுமன்றத்தில் எதுவும் இடம்பெறவில்லை எனவும் புதிய பிரதமர் ஒருவரை தெரிவுசெய்து நாடாளுமன்ற ஒழுங்குகளுக்கு ஏற்ப செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.