கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
டிச. 07 21:10

சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிச. 01 15:50

பொதுசன அபிப்பிராயங்களை சிவில் சமூக அமைப்புகள் உருவாக்க வேண்டும்

(திருகோணமலை ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் பலவீனமடைந்துள்ளதால், சிவில் சமூக அமைப்புகள் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பொதுசன அபிப்பிராயங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் சிதறுண்டு தமது வசதி வாய்புகளுக்கு ஏற்ற முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கட்டமைப்பை ஏற்றுச் செயற்படுவதால் அரசியல் தீர்வுக்கான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன.
நவ. 29 19:03

இந்தியாவின் நானூறு மில்லியன் டொலர்கள் உதவியைப் புறம்தள்ள முடியாத சிக்கலுக்குள் இலங்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடத்திய பேச்சுக்களின் முழுமையான விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும் பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோட்டாபய ராஜபக்சவுக்கான சில விடயங்களை நரேந்திரமோடி கூறியுள்ளார். குறிப்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தித், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வை வழங்குவது அவசியமென அறிவுறுத்தியுள்ளார் மோடி. அத்துடன் இலங்கைக்கு வழங்கும் கடனுதவியை நானூறு மில்லியின் அமெரிக்க டொலர்களாக மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நவ. 23 08:08

மரியாதைச் சந்திப்பு- பின்னாலுள்ள இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நவ. 13 10:27

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி உற்பத்திகளை முன்னேற்றுவதற்குப் பதிலாக இறக்குமதி உற்பத்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய கைத்தொழில்கள், உற்பத்திகள் அனைத்தும் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். இந்தப் பலவீனங்களின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தாமாகவே முன்வந்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நவ. 08 22:28

தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளோடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் கலந்துரையாடியது. இறுதியில் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் முன்னணி தவிர்ந்த ஐந்து தமிழ்க் கட்சிகள் மாத்திரமே கைச்சாத்திட்டிருந்தன. இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆவணம் சிங்கள ஆங்கில ஊடகங்களில் ஈழக் கோரிக்கையாகச் சித்தரிக்கப்பட்டிருந்ததையடுத்துத் தமிழ்க் கட்சிகளைச் சந்திக்காமலேயே பிரதான வேட்பாளர்கள் இந்த ஆவணத்தை ஏற்க முடியாதெனக் கூறிவிட்டனர்.
ஒக். 14 23:25

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான ஆவணத்தில் ஐந்து தமிழ்க் கட்சிகள் கைச்சாத்திட்டன

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்கில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு ஆவணம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் முயற்சியினால் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது எட்டப்பட்ட பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டு ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை மாலை கையொப்பமிடப்பட்டுள்ளது. இன்று ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், இன்று மாலை 6.30க்கு பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒக். 02 10:38

சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் மாத்திரமே சிங்கள அரசியல் கட்சிகள் நிம்மதியாக அரசியலில் ஈடுபடலாமென்ற நிலை மாறித் தற்போது தமது கட்சிப் பிரச்சினைகளை மாத்திரமே சிங்கள ஆட்சியாளர்கள் முக்கியப்படுத்தி வருகின்றனர் என்பதையே சமீபகாலச் செயற்பாடுகள் கோடிட்டுகாட்டுகின்றன. சஜித் பிரேமதாச வேட்பாளராகப் போட்டியிடுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
செப். 13 15:31

ரணில்- சஜித் இணக்கமில்லை- கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும்!

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாச ஆகியோரிடையே சரியான இணக்கம் ஏற்படவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவே இறுதி முடிவெடுக்குமென சஜித் பிரேமதாசவிடம் கூறியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ்க் கட்சிகளை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார்.
ஓகஸ்ட் 25 16:07

டில்லிக்கு என்ன சொல்ல வேண்டும்? தீர்மானிக்க வேண்டிய தமிழ்த் தரப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திரமோடி சில நாட்களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்த மோடி புதுடில்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறுகின்றார். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கையுடன் இந்தியாவுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்போர் தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.